வியாழன், 18 ஜூன், 2026

129. புணர்ச்சி விசும்பல்!

 

129. புணர்ச்சி விசும்பல்!

 

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு! 1281

உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளத்தால்

கண்டால் மகிழ்வில்லை கள்ளுக்குக் - கண்டாலும்

பூமனத்தில் எண்ணம் புகுந்தாலும் பொங்கிவரும்

காமத்தில் தோன்றும் களிப்பு!

 

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காம‍ம் நிறைய வரின்! 1282

 

வட்டப் பனங்காய்போல் வந்து பெருங்காதல்

கட்டுக் கடங்காமல் காணுகையில் – குட்டித்

தினையளவும் ஆங்கே திரளாமை வேண்டும்;

முனைமழுக்கும் ஊடல் முயல்பு!

 

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண்! 1283

 

என்னைப் புறந்தள்ளி என்ன‍ன்பைப் பின்தள்ளித்

தன்னைக் கருதித் தடம்மாறும் – மன்னவனை

ஏனத்தான்? என்றே எதிர்க்கேள்வி கேட்காமல்

காணத்தான் ஏங்கிடுதே கண்!

 

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதென் நெஞ்சு! 1284

 

சண்டை பிடித்தவனின் சட்டைப் பிடித்தவனை

உண்டில்லை என்றாக்க ஓடினேன் – நண்பியே!

நெஞ்சம் அதுமறந்து நேசம் வளர்க்கிறது

மஞ்சம்தான் காண மலர்ந்து!

 

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து! 1285

 

மையெழுதும் கோலை மலர்விழிக்கு மையெடுத்துக்

கையெழுதக் காணாத கண்ணேபோல் – பொய்யெழுதும்

மன்னவர் உற்ற வழுவறியேன் ஆங்கவரின்

பொன்முகம் காணுகிற போது!

 

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை! 1286

 

குற்றங்கள் ஆய்ந்து குறிப்பெடுக்கத் தானறியேன்

பற்றுடையார் பூமுகம் பார்க்கையில்; – முற்றும்பின்

குற்றமல்லா வற்றைக் குறிப்பெடுக்கத் தானறியேன்

பொற்றோள்கள் பாராத போது!

 

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து! 1287

 

ஆற்றுப் புதுவெள்ளம் ஆளிழுக்கும் என்றறிந்தும்

போற்றிக் குமர‍ர் புகுதல்போல் – தோற்றுத்

துயரடைவேன் என்றறிந்தும் தூக்கிப் பிடித்தேன்

தியங்காமல் ஊடல் செறித்து!

 

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு! 1288

 

தாழ்மதிப்பைத் தந்தும் தனமழித்தும் மேனிநலம்

வீழ்வித்தும் துன்பில் விழுத்தியும் - சூழ்போதைக்

காரணமாய் உண்டு களிப்பார்க்குக் கள்ளின்நேர்

தோரணை காட்டும்நின் தோள்!

 

மலரினும் மெல்லிது காம‍ம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார்! 1289

 

பூந்தும்பி மொய்க்கின்ற பூவினும் மெல்லியது

காந்துகிற நோயளிக்கும் காதல்தான் – மாந்தருள்

கையாளக் கற்றுக் கலந்து பயனடைவார்

மெய்யாலு மேச்சிலரா மே!

 

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று! 1290

 

காந்த விழியாற் கலகம் நடாத்திப்பின்

சாந்தம் அடைந்து தழுவினாள்; – பூந்தளிர்

என்னை விடவும் எனைத்தழுவத் தான்விரைந்து

என்னிற் கலந்தாள் இயைந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக