வியாழன், 18 ஜூன், 2026

116 பிரிவாற்றாமை!

 

116 பிரிவாற்றாமை!

 

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை! 1151

 

செல்லேன் எனுஞ்செய்தி செப்ப முடியுமெனில்

சொல்வாய், எனது துயர்களைவாய்; – அல்லாமல்

சீக்கிரம் மூண்டுவரும் செய்தியுண்டேல், இன்னுயிர்

தேக்கியுயிர்ப் பார்செவியிற் சேர்!

 

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு! 1152

 

முன்னமவர் பார்வை முழுஇன்பம் நல்கியது

என்றன் இளமனதிற்(கு) எல்லையின்றி; – இன்றளவில்

தொட்டுக் கலப்பதும் துன்பம் தருகிறது

விட்டுப் பிரிவரென வேர்த்து!

 

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான்! 1153

 

அச்சம் விடுதல் அரிதின் அரிதன்றோ?

மெச்சும் அறிவுடையார் வீட்டினிலும் – சிட்சமயம்

விட்டுப் பிரிகின்ற வேதனைச் செய்திசெவிக்(கு)

எட்டும் படியால் எனக்கு!

 

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு! 1154

 

நீங்கேன் உனை’,யென்று நேற்றுவரைச் சொன்னவர்

நீங்க விழையும் நிலையினில் – ஆங்கவரின்

நம்பிக்கை மோசடியை நம்பி இருந்தவள்மேல்

இம்மியள(வு) உண்டோ இழுக்கு!?

 

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு! 1155

 

காக்கத் துணிவாயேல் காதலரைக் காத்துக்கொள்

ஏக்கத்தில் பின்வாடாய் என்நெஞ்சே! – நீக்கத்தால்

மாள எனைவிடுத்த மன்ன‍வன் இன்னுறவு

மீளல் எளிதல்ல வே!

 

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை! 1156

 

சொல்லிப் பிரிவைத் தொடரும் அளவிற்குக்

கல்நெஞ்சம் கொண்டிருக்கும் காதலரால் – நல்லவை

நேர்ந்துவிடும் என்கிற நெஞ்சின்நப் பாசையினால்

தேர்ந்தபயன் இல்லை தெளிவு!

 

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை! 1157

 

முன்கை மணிக்கட்டு மொத்தமும் சூழ்ந்த,வளை

முன்பே அறிந்து முழங்கியதா? – மன்னவனின்

வன்பிரிவால் கைகள் வருந்தி மெலிவதனைத்

தன்ன‍றிவால் கண்டு தளர்ந்து!

 

இன்னாது இன‍ன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு! 1158

 

உற்றார் உறவல்லார் ஊரில் குடியிருத்தல்

வற்றாத் துயரம் வழங்கிடும்; – மற்றதனின்

மிக்கத் துயரம் விளைத்திடும், காதலர்

பக்கமிலாப் போதில் படர்ந்து!

 

அகதியைப் போல அயலூரில் வாழ்தல்

மிகவும் துயரம் விளைக்கும்; – மிகவதிக

இன்னலை நல்கும் இனிமைமிகு காதலரின்

வன்பிரிவால் ஏக்கம் வளர்ந்து!

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ! 1159

 

தொட்ட உடன்தன்னைத் தொட்டவர் பூவிரலை

எட்டிச் சுடுவதுபோல் இல்லாமல் – முட்டியெழும்

கட்டழகுக் காதலெனும் காய்ச்சலைப் போலத்தீ

விட்டாற் சுடுமோ விரைந்து?

 

அரிதாற்றி அல்ல‍ல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்! 1160

 

அரியன செய்தும், அகத்துயர்நோய் கொய்தும்,

பிரிவினை ஏற்றுவப் பெய்தும், – பெரிதாக

ஒன்றும் நிழவில்லை என்பதுபோல் வாழ்பவர்கள்

இன்றுமுளார் பற்பலரே என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக