132. புலவி நுணுக்கம்!
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு! 1311
பொதுமகளிர்க் கெல்லாம் புதுவகையில் தோன்றி
மதுமயக்கம் ஊட்டும்நின் மார்பைப் – பதுமைநான்
ஊறெடுத்த போதும் ஒதுங்கி முகம்புதையேன்;
ஏறெடுத்தும் பாரேன் இனி!
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து! 1312
சண்டை தொடராமல் சற்றே தணிதற்குத்
தொண்டை கனைத்தவர் தும்மினார்; – மண்மீதில்
நீண்ட நெடுங்காலம் நீர்வாழ்க! என்றுநான்
வெண்டுவேன் என்று விளித்து!
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று! 1313
மாலை நிலாப்பொழுதில் வாச மலர்கொய்து
மாலை அணிந்து வலம்வந்தேன்; – சேலைமீன்
ஆரிடம் காட்ட அணிந்துள்ளீர் சொல்கென்றென்
பேரிலே வைத்தாள் பிணக்கு!
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று! 1314
ஆங்குறு காதலர்கள் காதலினும் மேலதிகம்
ஈங்குநாம் வைத்துள்ளோம் என்றவுடம்
-பூங்கொடி
யாள்விம்மிச் சண்டையிட்டாள் யாரை
விடவுமெனும்
கேள்வி தனைத்திருப்பிக் கேட்டு!
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்! 1315
இப்பிறப்பில் உன்னை இணைபிரியேன்
நானென்றேன்
அப்பொழுதே கண்ணீர் அலர்ந்தழுதாள்; – அப்படியேல்
பிற்பிறப்பிற் சேரப் பிரியமெனக்
கில்லையென்ற
கற்பிதத்தைத் தன்மனத்தே கண்டு!
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்
என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்! 1316
தழுவாமல் என்றனைத் தள்ளித் தனிவைத்(து)
அழுதாள்பூங் கூந்தல் விழுதாள்; – ‘பொழுதுமுனை
எண்ணுகிறேன் நான்’என்றேன்; என்னைமறந்
தால்தானே
எண்ண முடிந்திடும் என்று!
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று! 1317
‘அச்’சென்று நான்தும்ம
அச்சுவெல்ல வாயெடுத்து
‘நச்’சென்று வாழ்த்திய
நங்கைபின் – ஒச்சினாள்;
எண்ணுவோள் நான்இங் கிருக்க எவளும்மை
எண்ண,நீர் தும்மினீர் என்று!
தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று! 1318
தும்மல் மறைத்துநான் கம்மென் றிருப்பினும்
விம்முவாள் நெஞ்சம் வெதும்புவாள்; – அம்மணி
ஆரோ உமைநினைக்க அஃதை எனக்குமறைத்
தீரோவென் றேதிட்டித் தீர்த்து!
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று! 1319
இப்படித்தான் மற்றை இடைச்சிய ரோடும்,இச்
செப்படி வித்தைகள் செய்வீரோ –
செப்பென்பாள்;
பொன்மகளின் நெஞ்சப் புகைச்சலைத்
தீர்க்கும்என்
அன்பில் குளிர்ந்தும் அவள்!
நினைத்திருந்து நோக்கினும் காயும்
அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று! 1320
புத்தி முழுதுமவள் பொன்னுருவச்
சிந்தனையில்
முத்துமுகம் பார்த்து முகிழ்ந்திருக்க, – அத்தைமகள்
யாரை மனதெண்ணி என்றன் முகம்பார்த்தீர்?
பேரைச்சொல் என்பாள்அம் பெய்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக