சனி, 9 ஆகஸ்ட், 2025

தர்லேன்னா உன்பேச்சி கா!

 

சும்மாவே ஆடுவ; சூப்பராப் பாடுவ;

அம்மாடி! மேடைன்னா அவ்ளோதான்; – நம்மாள்கள்

காதில் கவிச்சாறு காய்ச்சுவ; எங்கிட்ட

ஈடில்லா அச்சாற்றை ஈ!

 

படிச்சித்தான் பாக்குறனே; பாயாசம் போலக்

குடிச்சித்தான் பாக்குறனே; கொண்டா! – மடிச்சிதான்

பைலவெக் காத; பயித்தியமா ஆக்காத;

கைலதா! தர்லேன்னா கா!

 

எங்கத் தொடங்குவ எங்க முடிப்பன்னு

இங்கெனக்கே கூடத் தெரியாதே; – அங்கிருக்கும்

ஆளுகளை எல்லாம் அசத்தி இருப்பியே

தோளு களையெல்லாம் தொட்டு!

 

கள்காய்ச்சக் கூடாது கம்பா! தெரியாதா?

கள்காய்ச்சி வித்ததாக் கைதிபண்ணி – உள்ளதள்ள

தெம்பாப்போ லீஸ்வாரான்; தேடியும்நீ கிட்டலன்னு

தம்பி எனைத்தூக்கத் தான்!

 

பட்டப் பகலுல பட்டாசு போட்டியாம்;*

பொட்டுவெடிக் குன்னோடு போட்டியாம்; - எட்டநின்னு

பாத்துவந்த பூங்காத்துப் பாத்தபடி சொல்லுச்சு

சேத்துவந்த தூறலோடு சேந்து!

 

போட்டியாம் – போட்டாயாம் என்பதன் பேச்சு வழக்கு.

வரிமேல் வரிபோட்டவன்!

 முன்பே அதுகுரங்கு மேலும் சொறிசிரங்கு

என்றால் நமதுநிலை என்னாகும்? – இன்றளவில்

கிட்ட இருந்தாலும் கேடு; தவிர்த்துவிட்டு

எட்டியிருந் தாலும் இடர்!

 

வாயா? உடைப்பெடுத்த வாய்க்காலா? தீராத

நோயா? தொடங்கிவைக்கும் நோய்க்காலா? - ஆயாசம்

பார்க்கும் நமக்கே படபடத்துத் தான்வருதே!

பார்தாங்கு மாஇப் பயல்!?

 

ஊர்தான் மகிழாதா? ஓசோன் மகிழாதா?

மார்தட்டி வானம் மகிழாதா? – யார்யார்வாய்

வீதியிலே வந்து விழுகும் டொனால்ட்ட்ரம்ப்

பேதியிலே போகப் பெறின்!?

 

அவன்சிரிப்பும்; ஓயா அவன்பேச்சும்; தீரா

அவன்நடிப்பும் பார்த்தால், அட‍டா! – இவனையெல்லாம்

எந்தச் சிறுக்கிபெற்றாள்? என்னும் வினாவெழுது;

மந்திக்குப் பேர்தானா மன்?

 

எத்தனுக்கே எத்த‍ன்தான்; ஏமனுக்கே ஏமன்தான்;

ஜித்தன்தான்; ஆனாலும் பித்தன்தான்; – நித்தம்

வரிமேல் வரிபோட்டு வாட்டிடு வோர்க்கே

வரிமேல் வரிபோட்ட வன்!

என் சாங்கறுப்பதா?

 

நடுச்சாம‍ம் போன்வர நல்லுறக்கம் போச்சு;

கடுப்பாகும் முன்னால கட்செய்; – படுத்துறங்கும்

ஊரான் உறக்கத்த ஒட்ட வழிக்காம

தீராதா கொண்ட திமிர்?

 

வண்டி பழுதாச்சு வந்துநான் பாக்கணும்னு

நொண்டிச்சாக் கின்னுமொரு நூறுசொல்லிப் – பொண்டாட்டி

எங்கேன்னு தேடுவதாய் ஏச்சுக்கள் பாடுவதாய்

எஞ்சங் கறுப்பதா இங்கு?

 

பகலெல்லாம் நான்பட்ட பாட்டுக்குத் தூக்கம்

சுகமுன்னு போய்ப்படுத்துத் தூங்க – மொகரையையே

பார்த்திரா நீவந்து பட்டுன்னு போன்பண்ணி

ஏத்துவதா பீபி எனக்கு?

 

என்னத்தச் சொல்ல? எவனைப்போய் நாங்கொல்ல?

பின்னிரவுக் கண்விழிப்புப் பேய்த்தொல்ல; – இன்றே

மொதலில்நாம் இந்த மொபைலைஒழிச் சாத்தான்

இதரப் பணிபுரியும் இங்கு!

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

காலை வணக்கமண்ணா!
காப்பி குடித்தாயா?
வேலைக்குத் தாங்கிளம்பி
விட்டாயா? - மாலைவரை
வேலை இருக்கலாம்;
வேர்வை சுரக்கலாம்;
மாலையில் பேசலா
மா?