பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சனி, 30 ஆகஸ்ட், 2025
பிணவீடு!
மழையோடு கிழவியின் மல்லிகைப் பேச்சு!
தொட்டிமீன்
சாலை ஓவியன்!
ஓரமா மேயாமே
செங்கல் அணையா
ஒருதலை பெற்றும்
என்வயல்!
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025
வெட்டியான் வெண்பா
வியாழன், 21 ஆகஸ்ட், 2025
சரீரத்தில் கோவணம்மிச் சம்!
காடு ஒருவருசம் ஆடு ஒருவருசம்
தேடு பொருளையெல்லாம் தேச்சதுன்னா –
பாடுபட்டு
என்னத்தைச் செய்ய? செவனேன்னு இருக்கவும்
என்னால ஆகலையே இங்கு! 01
விதைச்ச வயலில் விளைச்சலில்லை; கொன்னு
புதைச்சஇடம் போல்முளைக்கும் புல்லே! – விதைச்சதெல்லாம்
நெல்விளையத் தானே; நெடுவயல் எங்கும்நீ;
சொல்!என்ன தானுனது சோக்கு!? 02
மண்பாத்து நிக்கும் மணிக்கத் தரியிடையே
விண்பாத்து நிக்கின்ற வெண்டைபோல் – மண்பாத்து
நாணும் பயிருக்கு நட்ட நடுவிலே
காணுமிட மெல்லாம் களை! 03
மாடா உழைச்சி மணிக்கணக்கா வேர்வைசிந்தி
ஓடா இளைச்சமிச்சம் ஒன்னுமில்லை; – காடாவுங்
காடில்லை; ஆடாவும் ஆடில்லை; வீடாவும்
வீடில்லை என்னசெய் வேன்? 04
போட்டஉரத் துக்குப் பொசபொசன்னு
வாரதெல்லாம்
காட்டைச் செதைக்குங் களையேதான் – ஆட்டைவிட்டு
மேச்சிடலா முன்னா விதைச்சதில் ஒன்னுரெண்டு
காச்சிச் சிமிட்டுதே கண்! 05
வெள்ளாடு போட்ட வெடக்குட்டி நோய்ப்பட்டுத்
தள்ளாடிப் போச்சு தலைதொங்கி – வெள்ளணையத்
தூக்கிப் புதைச்சதுல தாயோடு எடுக்கவில்லை
ஏக்கத்தில் நானும் இரை! 06
நாலாட்டை வெச்சி நலமாக வாழலான்னா
காலாடாய் மாறிக் கதைமுடிக்கும்; – ஏலாப்
பரீகத்தில் வீழ்ந்துநான் பட்டது போகச்
சரீரத்தில் கோவணம்மிச் சம்! 07
புதன், 20 ஆகஸ்ட், 2025
நாய் வெண்பா! 1
சாரி என்னை விட்டுடுங்க சார்!
ஏட்டைய்யா! என்னைய ஏங்கைது பண்ணுறிக?
சேட்டை எதுனாச்சும் செஞ்சேனா? – வீட்டுக்குப்
போவணும் விட்டுடுங்க; போவாட்டி எங்கம்மா
கோவத்தில் வெப்பாங்க குட்டு! 01
போட்ட சிறுவேசம் போட்டிக்கே தானன்றி
ஓட்டப் பிரிச்சிவெண்ணை உண்ணஅல்ல; - ஆட்டயப்
போட்டதும் இல்ல;ஒரு பொய்சொன்
னதுமில்ல;
வீட்டுக்குப் போக விடு! 02
ஆத்துல சேலைகள அள்ளி ஒளிச்சது
நேத்துநான் இல்ல நெசமாக; – வேத்தாளப்
பாத்துட்டு வந்தென்னப் பத்துறிக; இல்லயில்ல
ஆத்தாடி! நானந்த ஆள்! 03
‘வாயில என்னடா வச்சிருக்கே? ஆக்காட்டு
வா’யின்னு வெக்கிறிங்க வாய்திறக்க; – வாயிலபால்
பல்லத் தவிரவையம் பாக்கக் கிடைக்காது;
சொல்லத் தெரியாது சூது! 04
யார்வீட்டு உரலை எவனோ ஒடச்சதுக்குப்
பேர்போட்டு எனையே பிடிப்பதா? – மார்மேல
போட்ட நகையெல்லாம் பொன்னல்ல; வாடகைக்குக்
கேட்டணிந்து வந்ததுதான் கேடு! 05
கோபியருக் கெம்மேல கோபமா? யாருக்கு
லாபமுன்னு கட்டுறிங்க லாடமா; – கொபியர்
யாருன்னே நானறியேன்; ஆனாலும்
சொல்லுறேன்
சாரிஎன்னை விட்டுடுங்க சார்! 06
மாடு திருடவில்ல மாமலையப் பேக்கவில்ல
கூடுவிட்டுக் கூடுபாயுங் கொம்பனில்ல; – ஏடுதொட்டுப்
பள்ளி யிலப்படிக்கும் பாலகன்நான்; போடுவதேன்
விள்ளுவதக் கேட்டும் விலங்கு!? 07
ராதையா? யாரது? ராகம்நான் பாடினா
போதையா ஏறுது? பொய்யது; – ‘ஏதைய்யா
தோதாய்க் குழல்?’என்றால் சொல்வேன்
அடுக்களையின்
ஊதாங் குழல்தான் அது! 08
மண்ணள்ளி நாந்திங்க மாட்டேனே எந்தவூர்
மண்ணுக்கு நிக்கிறிங்க மல்லுக்கு? – பொண்ணுகள
ஏமாத்தக் கூடியதா என்வயசு? ஏதேது
காமாலை கொண்டதா கண்? 09
வேணாம் எனக்கிந்த வேசம் இதனால
காணாத தும்பமெல்லாங் காணுறேன் – வீணான
வம்பு வருதே வழக்கு விரட்டுதே
நம்பிஇட்ட தால்ஒடஞ்சேன் நான்! 10
19-08-205
அத்தனை பாக்களும் அற்புதம் வித்தகரே!
எத்தனைப் நீங்கள் எழுதிடினும்-- சத்தான
நற்பொருளை வைக்கின்றீர்! நானென்(று)
எழுதுவனோ?
அற்பனுக்குக் கிட்டா(து) அமிழ்து
அப்படி இல்லையம்மா! ஆகும் எனமுயன்றால்
எப்படிக் கைவராமல் ஏமாற்றும் – செப்புவது
எல்லாமும் வெண்பா எனவானால் வாய்புகழ்ந்து
சொல்லாரும் சொல்வர் சுவைத்து!
கண்ணன் கதையெல்லாம் கண்முன்னே காட்டுகின்ற
வண்ணம் வகைசேர்ந்த வெண்பாக்கள் -
எண்ணமெலாம்
தன்வசம் ஈர்க்கும் தளிர்போல்உன்
பாச்சுவையில்
என்வசம் நானில்லை ஈண்டு!