வியாழன், 7 மே, 2026

 

கொளுத்தும் வெயிலின் கொடுமையில்தப் பிக்கக்

குளுமையைத் தேடுமென் கூடே! - குளுமைக்குத்

தோப்பிளநீர் கிட்டும் தொலைவிலில்லாக் காரணத்தால்

சாப்பிடுவோம் தர்பூ சணி!

 

குளிர்சா தனப்பெட்டிக் குள்ளேஓர் ஓரம்

ஒளிந்திந்நாள் வெக்கை ஒழிப்போம்; - குளித்தாலும்

கொஞ்சமும் சூடு குறைகின்ற பாடில்லை;

தஞ்சமடை வோமிச் சணம்!

 

மோர்குடித்தும் பார்த்தாச்சு; முற்றும் தயிர்சாதம்

தேர்ந்தெடுத்தும் நண்பகலில் தின்றாச்சு; - நீர்குடித்தும்

தீர்வில்லை; சூட்டால் தினம்தொல்லை; ஊத்துகிற

வேர்வையைத் தந்தோம் விலை!

 

காட்டில் மரம்கீழ் கயிற்றுக்கட் டில்போட்டு

நீட்டிப் படுப்பதே நிம்மதி; - வாட்டி

எடுக்கின்ற வெய்யோன் எரிச்ச(ல்)தரா வாறு

தடுக்கவழி இல்லா ததால்!

 

ஓடைநீர் எங்கேனும்  ஓடாதா? ஓடிப்போய்

ஆடையின்றி நாம்நீந்த ஆகாதா? – கோடைவெயில்

நுங்குக் கடங்காதா? நூல்பிடித்து விஞ்ஞானம்

செங்கதிரைத் தீர்க்காதா தின்று!?

 

வேகா வெயிலேஉன் வீராப்பை விட்டுமண்ணை

நோகாமல் அன்றாடம் நோட்டமிடு – ஆகாத

வேலையைப் பார்ப்பதற்குக் காலை எழாதேபொன்

மாலைவான் ஏகுவிரை வாய்!

 

உச்சியிலே தொங்கும் ஒரேயோர் கதிர்பழத்தைப்

பிச்சிநான் தின்னப் பிரியமுற்றேன்; – அச்சுவெல்லத்

தூளிட்டுத் தேங்காய் துருவியிட்டுத் தேன்தெளித்துத்

தாளித்த நெய்யுமிட்டே சற்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக