ஞாயிறு, 3 மே, 2026

திருமுகமென் பக்கம் திருப்பு!

திருமுகமென் பக்கம் திருப்பு!

 

மீசை முளைக்கும்முன் ஆசை முளைத்ததடி
பாசை பிறக்கும்முன் ஓசையைப்போல்; - காசைவிரல்
சுண்டிவிட்டாற் பொற்பதில்சொல்; தொங்கிக்கொண் டேக‍இந்த
வண்டிவிட்டால் வேறு வரும்!

 

அடுத்துவரும் பேருந்தும் ஆள்கள் திணித்து

வெடுக்கென்று தான்பிடிக்கும் வேகம்; – நடுத்தெரு

நாயகியே! ஐந்துமணி நாரா யணன்வரட்டும்

நீயதிலே போகலாம் நின்று!

நேரத்தில் வீடுபோய் நேர்வதென்ன? உன்நெஞ்சின்
ஓரத்தில் போயொளிந்து உள்ளதென்ன? - வாரத்தில்
ஞாயிறுபோல் என்னை நசுக்காதே; திங்களைப்போல்
நீயிருந்தால் நான்குளிர்வேன் நெஞ்சு!

பாராமல் பார்க்கிறாய் பார்வையால் பேசுகிறாய்
ஆராய்ந் தறியும் அறிவில்லேன்; - தோராய
மாகப் புரிவதற்கே மாதக் கணக்கெடுத்தேன்;
ஆகட்டும் உன்தொண்டை ஆற்று!

நூலிழை புன்சிரிப்பே நோயைத் தருமென்றால்
ஆலிலையே! என்பா(டு) அடுத்தென்ன? - மேலிடத்து
உத்தரவு வேண்டுமா உள்ளம் பகர்வதற்குன்
மெத்தனமே கொல்லும் விஷம்!

பள்ளித்தோ ழர்தம் பரிகாசப் பேச்சிக்கும்
கள்ளியுன்னால் தோன்றும் கனவுக்கும் - உள்ளம்
கிடந்தேங்கும்; உன்வரவைக் கிட்டத்தில் காண
நடந்தேங்கும் கால்கள் நலிந்து!

ஓரா யிரம்கண்கள் உன்னையே மொய்த்தாலும்
நேராய்என் பார்வைக்கே நீசொல்வாய் - ஆராய்ந்து
யாராலும் கண்டுணர ஏலா வகையினில்
பாரா யணமாய்ப் பதில்!

 

ஆவணிக்குப் பின்னே அடுத்துவந்த மாத‍த்தில்

தாவணிக்கு மாறிய தாமரையே! – பூவணிய

ஆசைப் படும்பூவே! அச்சத்தில் என்னிதய

ஓசைகேட் காதா உனக்கு!?

 

கண்ணால் கடுதாசி காற்றில் எழுதிநிதம்

விண்ணில் அடித்து விசிறுகிற - பெண்ணே!

அருகினில் நானிருக்க அங்கென்ன பார்வை?

திருமுகமென் பக்கம் திருப்பு!

 

பொத்தென்று போட்டுவிட்டுப் போகாமல் என்நினைப்பை

வித்தென்று நெஞ்சில் விதைத்துவிடு; - தத்தெடுத்துத்

தாங்குவாய் என்நெஞ்சைத் தள்ளி ஒதுக்காமல்

வாங்குவாய் பேரன்பை வார்த்து!

 

என்றுன்னைக் கண்டேனோ அன்றுமுதல் இன்றுவரை

நின்று நிதானமாய் நேசித்தேன்; – இன்று

நெடுநேரம் காத்திருந்தேன் நீவருவாய் என்று;

விடுவெடுவென் றேகணுமா வீடு!?

 

கால்கள் மிதக்கும் கலைகற்றுத் தந்தவளே!

நூல்மருங்கை நுங்கழுத்த நொந்தவளே! – வால்முளைத்த

கோலாங்கூ லத்தைமனக் கூண்டில் அடைத்தவளே!

காலாகா லத்திலதைக் கா!

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக