வீட்டுப் பிராணியை
வீதிப் பிராணியாய்க்
கூட்டிவந்து
விட்ட கொடுமையால் – ரோட்டிலே
ரொட்டிக்கும்
நாதியின்றி ரோதனை நான்படுறேன்
சிட்டிக்கும்
மத்தியிலே தேய்ந்து!
பெட்டிலே
தூங்கிப் பெடிகறி சாப்பிட்டு
மட்டின்றிக் கண்ட
மகிழ்ச்சியெல்லாம் – பட்டென்று
போரால் தொலைந்துதான்
போச்சு!எனக் கில்லையினி
பேரா தரவென்ற
பேச்சு!
பாதியிலே நானும்
பழசானேன்; ஏதிலியாய்
வீதியிலே விட்ட
விலங்கானேன்; – பேதியிலே
போகின்ற போராலே
போக்கத்துப் போனேன்;என்
னாகியதோ என்னைவளர்த்
தார்க்கு!?
‘செல்லமே!’ என்றவாய் சேர்த்தணைத்துக்
கொண்டகை
இல்லாமல் போனதே இன்றெனக்கு; – மெல்லமாய்
இற்றை எதார்த்தம்
எனக்குப் புரியுமுன்னே
ஒற்றையில்நிற் கின்றேன்
உழன்று!
வீட்டில் இடம்தந்த
மேடமே! சாரே!ஏன்
வாட்டும் வெயிலில்
வதங்கவிட்டீர்? – நாட்டிலே
சண்டித் தனம்பண்ணும்
சல்லி அரசுகளால்
துண்டித் ததேன்என்
தொடர்பு!?
சனாதி பதிபோலச் சாப்பிட்டுத்
தூங்கும்
குணாதி சயம்மிகவே
கொண்டால் – அனாதியாய்
ஆனபின்பு வாழும்
அவலம் மிகக்கொடிது
நானதனைக் கண்டேன்இந்
நாள்!
செல்லப் பிராணி சிரமப்
பிராணியாய்
மெல்லவின் றானதோ மேதினியில்
– செல்லஓர்
வீடுநா டின்றி விடப்பட்டு
வீதியிலே
கேடுநான் கெட்டேன்
கிடந்து!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக