புதன், 11 மார்ச், 2026

111 புணர்ச்சி மகிழ்தல்!

 

111 புணர்ச்சி மகிழ்தல்!

 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள! 1101

 

கண்டறியும் இன்பமும் கேட்டறியும் இன்பமும்

உண்டறியும் மோந்தறியும் உண்மையும் – மண்டிருளில்

தொட்டறியும் இன்பமும் தொல்புவியில் வால்வளைப்பெண்

மட்டில் இருக்கின்ற மாண்பு!

 

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோய்க்குத் தானே மருந்து! 1102

 

நோய்க்கு மருந்தென நூலொர் உரைத்ததெலாம்
ஆய்ந்துவிடின் யாவும் அடுத்தவையே! -நோய்கொடுத்தந்
நோய்க்கு மருந்தென நுண்ணணியாள் மாறுவதைத்
தோய்ந்தறிவில் இட்டுத் துணி!

 

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு! 1103

 

தேன்த‍தும்பும் செவ்விதழாள் செம்மாங் கனிமார்பில்

நான்படர்ந்து நல்லுறக்கம் நாட்டுதலின் - வான்கிடக்கும்

செந்தா மரைமலர்போல் செங்கண் அமைந்திட்ட

இந்திரன் தேசமோ இன்பு!?

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்! 1104

 

ஊரில் உலகத்தில் இல்லை எனும்போது

பாரிலிவள் எங்கிருந்து பற்றினாள்? – நேரிழையை

வேண்டா வெறுப்பாய் விலக உடலெரித்துத்

தீண்டக் குளிருமிந்தத் தீ!

 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்! 1105

 

விரும்பும்போ தெல்லாம் விருப்பப் பொருள்கள்

தருமின்பம் போலத் தருமே – சுரும்புலவும்

வாசமலர் சூட வகிடெடுத்த கார்கூந்தல்

நேசக் கிழதியவள் நெஞ்சு!

 

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்! 1106

 

வந்தணைக்கும் வேளையெலாம் வாடுகின்ற என்னுயிரைச்

செந்தளிர் விட்டலரச் செய்வதனால் – சுந்தரிக்கு

தேவர் அருந்துகிற தேவா அமிர்த்ததைத்

தூவச் சமைந்ததிரு தோள்!

 

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அறிவை முயக்கு! 1107

 

இல்வாழ்க்கை தன்னில் இருந்துகொண்டு கைப்பொருளை

இல்லார்க் குதவும் இனிமையொக்கும்; – நல்லாளின்

மாம்பழ மேனியை மஞ்சம் தனில்வைத்துத்

தாம்தழுவும் இன்பச் சணம்!

 

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு! 1108

 

கட்டி அணைக்கின்ற காளைக்கும் கன்னிக்கும்

ஒட்டி இருப்பதினும் உண்மையின்பம் – முட்டிமுட்டி

உள்நுழையப் பார்க்கின்ற ஊதைக்கு இடமின்றி

அள்ளிக்கொள் கின்ற அணைப்பு!

 

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாம‍ம்

கூடியார் பெற்ற பயன்! 1109

 

சண்டை இடுதல் சமாதானம் ஆதல்பின்

உண்டுறங்கு முன்னே உறவாடல் – கண்ணுறுங்கால்

இங்கிவை மூன்றும் எழுங்காதல் மிக்குடையார்

பங்கிட்டு அடையும் பயன்!

 

அறிதோறு அறியாமை கண்டற்றால் காம‍ம்

செறிதோறும் சேயிழை மாட்டு! 1110

 

பார்க்கின்ற போதெல்லாம் பாராப் பொருள்விளங்கும்

வார்த்தைச் செழுமைநூல் வாக்கியம்போல் – சேர்த்துச்செங்

கொத்தணிகள் பூண்டாளைக் கொஞ்சும் தொறும்எழுமே

புத்தம் புதியசுகம் பூத்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக