வாஷிங்டன் மாளிகைக்கு வந்த நெதன்யாகு
கோஷித்தான் நெஞ்சம் கொதிப்புற்று; – ‘போஷித்த
பின்னும்ஏன் நண்ப! பிதற்றுகிறாய்?’ என்றுட்ரம்ப்
முன்னின்று கேட்டான் முழித்து! 01
நாக்குத் தழுதழுக்க நண்ணி நெதன்யாகு
சீக்குவந்த கீரிபோல் சீறினான்; – மூக்கொழுக
அங்கமெ ரிக்க அதிபன் செவிமடுக்கத்
தங்காதைத் தீட்டினான் தாழ்ந்து! 02
ஈர்க்கு களைவைத்தே ஈரான் நமையெதிர்க்கும்
போர்க்கலையில் தேர்ந்துளதிப் போதென்றால் –
ஊர்க்குள்
நியூக்ளியர் ஆய்வு நிகத்திவிட்டால்
நம்மின்
வியூகமெலான் பின்னாளில் வீண்! 03
இஸ்ரேல் அதிபர் இயம்பியதைக் கேட்டட்ரம்ப்
எஸ்!எஸ்!எஸ்! என்றே எதிர்ப்பட்டான்; – ‘அஸ்திரங்கள்
ஆயிரம் பெற்றும் அடக்கிநாம் வாசித்தால்
நாயினும்கீழ் தா’னென்றான் நைந்து!
04
‘தாக்குதலை நாம்நடக்கச் சம்மதம்நீ தந்தாயேல்
ஈக்குலத்தைச் செய்திடலாம் இல்லாமல்; – நாக்குலர்த்த
நான்வர வில்லை; நடத்தியே
காட்டவந்தேன்;
வான்நம் வச’மென்றான் மன்! 05
வாய்பார்த்து நின்ற வளைந்தவாய்
ட்ரம்ப்எங்கோ
சேய்பார்த்து நின்றபடிச் செப்பினான்; – ‘போய்ச்சமரை
நாம்தொடுத்தால் வெல்வொமென்ற நம்பிக்கை
இல்லைஉன்
வீம்புவிட்டுச் செல்லென்றான் வீடு!’ 06
பொசுக்கென்று வெஞ்சினம் பொங்கநெதன் யாகு
நசுக்கினான் பல்லால்தன் நாவை; – உசுப்பிவிட்ட
செவ்விந் தியவேந்தன் செய்வதறி
யாதிருந்தான்
பவ்வியமாய்ப் பம்மிமுகம் பார்த்து! 07
கோப்புகள் என்னிடம் கொஞ்சமா? நஞ்சமா?
ஆப்புகள் உள்ளனவே ஆயிரம்; – மாப்பிளைநீ
சம்மதம் தாராயேல் சந்தி சிரிக்கவைப்பேன்
கும்மிருட்டில் நீயடித்த கூத்து! 08
என்றநெதன் யாகை எரிப்பதுபோல் பார்த்தட்ரம்ப்
சின்னொடிகள் சிந்தை திரிவுற்றான்; – என்றாலும்
மாட்டேன் எனமறுத்தான்; வார்மேல்
அரிப்பெடுத்தான்
போட்டேன் பொதுவிலென்றான் போய்! 09
பாலியல் ஆசையால் பச்சிளம் பிள்ளைகளின்
காலிடையில் மொய்த்துக் கயமைகளை –
மேலிடத்து
மாந்தர் புரிந்துள்ளார்; மக்கள்
அவையறிந்தார்;
வேந்தனும்செய் துள்ளானிவ் வேய்ப்பு! 10
‘வாலிபத்தில் தீவுகளில் மன்மதன்போல் வாழ்ந்ததெல்லாம்
ஜாலிக் கதிலொன்றும் தப்பில்லை’, – கேலிக்கே
அஞ்சாத ட்ரம்பின் அடாவடிப் பேச்சின்மேல்
நஞ்சுமிழ்ந் திட்டதவன் நாடு! 11
கோர்ட்டும் அழுத்தம் கொடுத்தது; மன்னவன்மேல்
யார்க்கும் சினத்திற் களவில்லை; – வேர்த்தவனோ
ஈரான்மேல் போர்தொடுத்தால் இவ்விழுக்கை
ஊர்மறந்து
சீராகும் என்றெடுத்தான் தேர்ந்து! 12
‘போர்க்கப்பல் ஈரான் புறப்படுக; போரூர்தி
பார்ப்பதற்குள் சீறிப் பறந்திடுக;’ – யார்ப்பேச்சும்
கேளேன் எனவிருந்தோன் கேட்டான் ‘படைநகர
நாளேனிம் மா’மென்று நைந்து! 13
தோழி புடைசூழத் தோள்மாலை ஏற்பதற்குச்
சோழிபோற் புன்னகை தோன்றவரும் – சூழிளமை
மங்கைபோல் ஆபிரகாம் போர்க்கப்பல்
வந்ததெதிர்
அங்குலம் அங்குலமாய் ஆய்ந்து! 14
மொடாக்கப்பல் நாற்புறமும் மொய்த்துக்
கலங்கள்
குடாப்பக்கம் நிற்கின்ற கோலம் – கடாக்கன்றைப்
பெட்டைகள் சுற்றிப் பிரியா
திருப்பதொக்கும்
அட்டைபோல் ஒட்டிக்கொண் டாங்கு! 15
சென்ற பணிமுடிந்த தெம்பில் நெதன்யாகு
நன்றி உரைத்து நழுவினான்; – தன்தேசம்
தாழா நிலையடையத் தாளாப் பகைஈரான்
ஏழாம் பொருத்தமே என்று! 16
நங்கூரம் இட்டு நகர முடியாமல்
அங்கிருந்தே எங்கும் அசையாமல்; – தங்கிக்
கரையடுத்த ஈரானைக் கண்காணிக் கும்;தன்
இரையெடுத்த நாகம்போல் இன்று! 17
ஒன்று புறப்பட ஒன்று திரும்பிவர
என்றந்த கப்பல் எழிலிருக்கும்; – சென்றதன்மேல்
நிற்கின்ற வானூர்தி நீர்க்குளத்தில் அன்னம்போல்
அற்புதக் காட்சிதரும் ஆங்கு! 18
கொலையா யுதம்பல கொட்டிக் கிடக்கும்
மலைபோல் அதனின் மடியில் – நிலையாக
ஐயா யிரம்பேர் அடல்வீரர் தங்கலாம்;
மெய்யாய்அக் கப்பல் வியப்பு! 19
சுற்றிநிற்கும் கப்பலெல்லாம் சுண்டுவிரல்; ஆபிரகாம்
கற்பனைக்கும் எட்டாத கட்டைவிரல்; – அற்பமென
விட்டெறிய யாரும் விலைகேட்டால் டாலரில்
லட்சம்கோ டிக்குமே லாம்! 20
ஈரான் இயல்தோற்றம்
பக்கம் இரண்டும் பரந்த திரைகடல்கள்;
அக்கத்தில் ஸ்தான்கள்; அதுபோகக் – கக்கத்தில்
ஈராக், துருக்கியுண்டு; இன்னும்
சிலவுமுண்டு;
ஈரானுக் கெல்லை இவை! 21
தெற்கே பெர்ஷியன் கடலாலும் வடக்கே
கரீபியன் கடலாலும் வடக்கு வடகிழக்கு மற்றும் கிழக்கே துர்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான்
மற்றும் பாகிஸ்தானாலும் தென்மேற்கில் ஈராக்காலும் மேற்கில் துருக்கியாலும் மற்றும்
அர்மீனியா அஜர்பைஜான் போன்ற நாடுகளாலும் சூழப்பெற்ற எல்லைகளைக் கொண்டது ஈரான்.
பண்டைப் பெருமையுள்ள பார்போற்றும் ஈரானைக்
கண்போலப் பொத்தியே காத்துவந்தான்; – அண்டையில்
சீந்த எவனும் ஜனிக்காச் சிறப்புடைய
வேந்தன் அலிகா மெனி! 22
மிதவாதி இல்லையிவன் தீவிர மான
மதவாதி; அஞ்சுகிறார் மக்கள்; - எதனாலும்
மாதர் ஹிஜாப்அணிய மாட்டேன் எனமறுத்தால்
சேதம் அவர்களிப்பான் சென்று! 23
தயவெல்லாம் கேட்டெவன் தாள்பணிய வேண்டாம்
வயலெல்லாம் கச்சா வளங்கள்; –
அயல்நாட்டிற்(கு)
எண்ணெய் அனுப்புவதால் ஏராளம் காசுபணம்
பண்ணித் தனைச்செதுக்கும் பார்த்து! 24
வில்லன் இவனுக்கே வில்லன் ஒருவனுண்டு
போல்லாத இஸ்ரேல் பொடியனவன்; – பல்லாண்டாய்
வெம்பகை தீர்ப்பதற்கே வேளைதான்
பார்த்திருந்தான்
தம்கட்டிக் கோபம் தடுத்து! 25
பேராபத் தான அணுகுண்டை ஈரானும்
ஆராய்வ தாக அமெரிக்கா – ஜோராகப்
போட்ட தடைகள் பொடிபட காமெய்னி
நாட்டை நடத்தினான் நன்று! 26
என்றேனும் ஓர்நாள் எதிரிகள் சூழலாம்
என்றீரான் மன்னன் எதிர்பார்த்தான்; – இன்றந்நாள்
வந்ததை எண்ணி வருத்தப் படவில்லை
முந்திவந் தான்போர் முனைக்கு! 27
ஆடி அசைந்துவரும் ஆர்மியைக் கண்டபின்னும்
ஓடி ஒளியவில்லை ஓய்ந்தீரான்; – தேடிவரும்
சண்டைக்குத் தானும் தயார்என் பதுபோலே
மண்டையை ஆட்டும் மகிழ்ந்து! 28
அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைத்தல் -
அமைதியாய்ப் பேசி அமலியைத் தீர்க்க
அமைத்தார் குழுக்களை அங்கே; – சுமைகளைச்
சொல்லில் அடுக்கிச் சுலபமாய்த் தீர்வுபெற
மெல்லக் கருதியே மேற்கு!
செறிவூட்டு கின்ற யுரேனியம் தன்னைப்
பறிமுதல் செய்யப் பணிந்தால் – பிறிதும்நீ
ஆட்சி துறந்தால் அதிகாரம் மாறினால்
காட்சிகளும் மாறும் கனிந்து! 29
அரே!நீ இனியும் அதைப்பற்றிப் பேசாய்;
யுரேனியம் எங்கள் உரிமை; – சுரீரென்று
சுட்டெரிக்கும் குண்டுகள்உம் தோளிருந்தால்
தப்பில்லை
தப்பாஎம் பையிருந் தால்! 30
பேச்சுக்கள் எங்கே பெருகின? ட்ரம்புடைய
ஏச்சுக்கள் தானே எகிறின; – கீச்சுக்கள்
மேற்கி னுடைய,வன் மேலாதிக்
கத்தையே
நூற்பிடித்துக் காட்டின நூற்று! 31
கீச்சுக்கள் – ட்விட்டர் செய்திகள்.
வாயாலே சீர்கெடுத்து வாயாலே போர்தொடுக்கும்
நோயாலே பாதித்தான் நொண்ணைட்ரம்ப்; – ஹாயாய்ப்
பராக்குத்தான் பார்த்தபடி பாரிருந்த
தந்தக்
கிராக்கென்ன செய்யுமென்று கேட்டு! 32
ஒத்தோர் முடிவை உரியோர் எடுக்கும்முன்
குத்தியதே இஸ்ரேல் கொடுங்கோன்மை; – கத்திமேல்
நின்ற கமெய்னியை நிர்மூலம் ஆக்கிவிட்டுச்
சென்றன வீசிய செல்! 33
‘எடுத்த எடுப்பில் இராஜனைத் தூக்கக்
கொடுத்ததார் ஐடியா கூலாய்?’ – கடுத்துரைத்த
ஈரான் எதிராட்டம் ஆட எழுந்ததே
தீராச் சினத்தினுச்சம் சென்று! 34
ஈரானின் வானில் எதிரிகளின் போரூர்தி
வாரா வழிவந்து வட்டமிடும்; – பேரானை
மாய்ந்த நெடிநுகர்ந்து மாமிசம் உண்பதற்கே
ஏய்ந்த கழுகுகளோ என்று! 35
வீசிய குண்டு வெடிப்பில் எழுப்பிய
தூசிஓ சோனைத் துளைத்தது; – நாசிபுகும்
காற்றெலாம் கந்தகம்; கன்னெய்
அகழ்ந்தெடுக்கும்
ஊற்றெலாம் நைட்டிரேட் உப்பு! 36
பள்ளிகள் என்றுமே பாராமல் தீய்க்குமெரிக்
கொள்ளிகளைப் போட்டாரே கொண்டுவந்து; – பிள்ளைக்
கறிதின்ற எஃப்ஸ்டின்ஃபைல் காமுகன்
ட்ரம்பின்
அறிவற்ற போர்முறையால் அங்கு! 37
அம்மிகொத்தல் போலே அமெரிக்கா ஈரானைக்
கும்மி எடுத்தது குண்டுகளால்; - தம்பிடித்து
நின்றபடி ஈரான் நிதானமாய் ஏவியது
கொன்றொழிக்கும் ஏவுகணைக் குண்டு! 38
மண்ணில் விருந்துகண்ட மற்றை நொடிபருந்து
விண்ணில் இருந்திறங்கும் வேகத்தில் – கண்சிதைந்தும்
ஈரான் எதிரிகள்மேல் ஏவுகிற ஏவுகணை
பாராய்! பறந்துவரும் பாய்ந்து! 39
தற்கொலை ட்ரோன்கள் தலைமேல் விழுந்ததினால்
கற்குவியல் ஆகினவே கட்டடங்கள் – முற்பட்(டு)
அசைந்து கொடாமல் அடித்தாடும் ஈரான்
மிசைலால் அதிர்ந்ததே விண்! 40

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக