என்னடா தம்பி! எனக்கெதுக்குப் போன்செஞ்சே?
இன்னிக்கு நாளுனக்கு ஏகலையா? – சின்னதுமாய்ச்
செதியில்லை என்றால்உன் செல்போன் சிணுங்காதே;
மீதிவைக் காமல் விளம்பு! 01
அண்ணனுடன் நான்பேசி ஆறுதிங்கள் ஆனதனால்
புண்ணடைஞ்ச நெஞ்சோடு போன்போட்டேன்; – கண்ணளந்த
காட்சிகளில் ஒன்றைக் கடத்தலாம் என்றிருந்தால்
காட்டுவதேன் என்மேல் கடுப்பு!? 02
கோச்சுக்
கிடாதடேய்! கோபமெல்லாம் ஒன்னுமில்லை;
ஆச்சரியப் பட்டேன்; அதான்கேட்டேன்; – மாச்சரியம்
ஆர்மீதும் கொண்டாயா? ஆள்காட்டு
கின்றாயா?
ஊர்க்கதைதான் உண்டா? உரை! 03
உன்பின் பிறந்தவன் ஒப்பனை ஏமாற்றித்
‘தன்பெயரில் சொத்தெழுதித் தா!’ங்கிறான்; – உன்தாயும்
ஒத்தூது கின்றாள்; உனக்கினி மேலிங்கு
சொத்தேது? போய்விட்டாய் தோற்று! 04
எல்லாரும் கூடி எனைஏய்க்கப் பார்ப்பதனை
தில்லாய்நீ சொன்னதற்குத் தெண்டனிட்டேன்; – கல்லான
சாமியிப்போ உன்னுருவில் சாட்சிசொல்ல
வந்ததென்று
தீமிதித்துச் செய்வேன் சிறப்பு! 05
அண்ணனுக் கொன்றென்றால் அஞ்சி ஒதுங்கநான்
அன்னியனா? வேண்டிய ஆளாச்சே! – கண்ணியமாய்க்
கேட்டால் கிடைக்குமென்று கேட்கின்றாய்; உன்தம்பி
வேட்டுவைக் கின்றான் விரைந்து! 06
ஆளுக்குப் பாதி அளிப்பதுதான் ஊர்வழக்கம்
தோளுக்கு மேல்வளர்ந்தால் சொத்துகளை; – நாளுக்கு
நாளுரசல் கூடும் நயவஞ்ச கத்தால்அந்
தாளுக்கென் றைக்குவரும் சாவு!? 07
எல்லாப் பிரச்சினைக்கும் ஏதுனது தந்தைனென்று
மல்லாக்கப் போட்டு மிதிக்கின்றான்; – பொல்லாப்பு
வந்துவிடும் என்பதனால் வந்து தடுக்கவில்லை
உந்தம்பிக் கஞ்சியே ஊர்! 08
போகட்டும் என்று பொறுமையாய் நான்போனால்
சாகட்டும் அப்பனென்றா சாத்துகிறான்? – ஆகட்டும்
ரெண்டிலொன்று பார்க்கின்றேன்; ரெக்கமண்டுக்
காள்சேர்த்துக்
கொண்டுவந்தா லும்செல்வேன் கோர்ட்! 09
பஞ்சாயம் கூட்டிஉன் பங்கைக்கைப் பற்றாமல்
குஞ்சாட்டிப் போவாயா கோர்ட்டுக்கு? – பொஞ்சாதி
உன்னை மதிப்பாளா? உன்பேச்சைக் கேட்பாளா?
என்னநான் சொல்ல இனி!? 10

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக