ஞாயிறு, 19 ஜூலை, 2009

கரிகாலன் ஈற்றெடுப்பு! (1)



காவலாய் வாய்த்த கரிகாலன் மாமறத்தை
ஆவலால் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்த்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான்* தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கரிகாலா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே! தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

எழுந்த கதிர்க்கைய*! ஈழத்தில் ஆடும்
உழுவைக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில்* தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல்* களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு!* (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போல் கண்டார் கவினுலகில்* –பேணார்*
திருவில் செயலைத் திருப்பி அடித்தே
கருவில் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் உலவும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாம் தருவே! உனையிங்(கு)
உமையாள்* கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு* உவந்துலகிற்(கு) ஈந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்*
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்லிசையில் பாடேனோ பார்த்து! (10)

தாவில்லா –குற்றமில்லாத; முருகடியான் –எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்; அரி -சிங்கம்; கதிர்க்கையன் –பிரபாகரன்; உழுவைக்கொடி –புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்; பொருவில் -உவமையில்லாத; இன்னல் –இடுக்கண்; மாண்பு –பெருமை; மாணார் –பகைவர்; கவின் –அழகு; பேணார் –பகைவர்; கதிர்க்கையன் –பிரபாகரன்; உமையாள் –பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி); வேலு –பிரபாகரனின் தந்தையார்; புணரிசார் –கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை.

அகரம் அமுதா

செவ்வாய், 14 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (3)

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு! -குறள்-


முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண் செய்வார் அறிவோ -டகமுமிலார்
யானுற் றுயிருருகி வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையாற் சார்ந்து!

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்! -குறள்-

ஊரார் உரைப்பழி உற்ற உரமாக
நீராகி அன்னைசொல் வேர்பாய -பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்
கடிதோங்கிக் காய்க்குமிந் நோய்!

அகரம் அமுதா

வியாழன், 9 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (2)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து! -குறள்-

நோய்க்கு மருந்தென நூலொர் உரைத்ததெலாம்
ஆய்ந்துவிடின் யாவும் அடுத்தவையே! -நோய்கொடுத்தந்
நோய்க்கு மருந்தென நுண்ணணியாள் மாறுவதைத்
தோய்ந்தறிவில் இட்டுத் துணி!

தோய்ந்த -செறிந்த

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்! -குறள்-

பொய்கைவாய் பூத்துப் பொலியும் அனிச்சமும்
துய்ய நிறவன்னத் தூவியும் -செய்ய
உருமுலை மாதரார் ஒப்பில் அடிக்கு
நெருஞ்சிப் பழத்திற்கு நேர்!

அகரம் அமுதா

புதன், 1 ஜூலை, 2009

பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

திங்கள் உலவும் மாலையிலே!
. . . . .தென்றல் தவழும் சோலையிலே!
கங்குல் வடியும் காலையிலே!
. . . . .கரும்பு பிழிபடும் ஆலையிலே!

ஊர்திகள் செல்லும் சாலையிலே!
. . . . .ஊதியம் கிடைக்கும் வேலையிலே!
பேரிச்சை விளையும் பாலையிலே!
. . . . .பெரியோர் உரைத்தவை ஓலையிலே!

அகரம் அமுதா

செவ்வாய், 23 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (5)


காற்றைக் கிழித்துக் கடிவிரைந்த தோட்டாவால்
நேற்றென் கணவர் நிலம்வீழ்ந்தார் –ஆற்றொனாத்
துன்பம் தொலையுமுன் தோள்சுமந்த என்மகனும்
இன்றுநிலம் வீழ்ந்தான் இறந்து.

அகரம் அமுதா

வெள்ளி, 19 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (4)


ஊருக்குச் சோறிட்ட ஒண்டமிழன் வாய்நனைக்க
நீருக்கும் போராட நேர்ந்ததுவே –பாருங்கள்
பாரோரே! பட்டினியாற் சாகுமிவர் காண்;கண்ணில்
நீராறே ஓடும் நிறைந்து.


அகரம் அமுதா

செவ்வாய், 16 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (3)


தெம்பில்லை தேம்பியழத் தெய்வம் துணையென்றே
நம்பினோம் அஃதும் நடக்கவில்லை -எம்மினத்தைச்
சுட்டழிக்கும் சிங்களரைச் சுட்டெரிக்காச் சூரியனே!
சுட்டெரிப்ப தெங்களையேன் சொல்.


அகரம் அமுதா

சனி, 13 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (2)


கொத்தணி குண்டின் கொடுமோசை யாற்காதுஞ்
செத்த(து) அழுதழுதே சிந்தியகண் –வற்றிய(து);
ஒட்டுத் துணிபோல் உயிரும் உடலிதனை
விட்டுப்போ காதோ விரைந்து.
.
எழுந்திடக் கூட இயலாக் கிழவர்
விழுந்ததுபோல் எம்மினமும் வீழ்ந்த(து) –எழும்நாளும்
என்றோ? இனிதுகண் டின்புறும் பாரோரே!
நன்றோ?உம் மௌனம் நவில். (கவிக்கூற்று)


அகரம் அமுதா

செவ்வாய், 9 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (1)


அஞ்சி அழுந்தம்பிக் காறுதல் சொல்லவும்
நெஞ்சில் வலியில்லை; நேற்றுவரைக் –கொஞ்சி
மடியிருத்திக் காத்து மகிழ்ந்தபெற் றோரும்
வெடிவிழச் செத்தனரே வெந்து.
.
கத்தும் ஒலிகேட்கக் காசினிக்குக் காதில்லை;
பொத்தி அழவும் புரியாஇப் பிஞ்சுகளைக்
கொத்தணி குண்டின் கொடுமோசை அச்சுறுத்த
எத்தனையாய் இன்னல் இவர்க்கு! -கவிக்கூற்று-

அகரம் அமுதா

வியாழன், 4 ஜூன், 2009

தமிழ் எங்கள் தமிழ்! (4)

படிக்கா தகலின் பயன்மிகக் குன்றி
விடியா மொழியாய் விடும்!

விடுக அயன்மை; விருப்ப மொழியாய்த்
தொடுக தமிழ்க்குச்செய் தொண்டு!

தொண்டென்ப வேறில்லை தொல்நூல்கள் பாராட்டும்
பண்டு கலைகள் படி!

பிடியாய் முனையைப் பிடிப்பரோ? வாளின்
பிடியாந் தமிழைப் பிடி!

பிடியொன்று மானள்ளும் பெற்றிபோல் நாடிப்
படிதமிழைக் கண்ட படி!

படியார் பயன்படார் பைந்தமிழை ஊன்றிப்
படியார் இனத்துட் பதர்!

பதர்மொழி கற்கப் பறப்பார் மனதைப்
புதராக்கித் தூர்ப்பார் புழு!

புழுவென்றால் பொங்குவர் பூந்தமிழைக் கற்க
எழுகென்றால் ஏற்கார் இழுக்கு!

இழுப்பாய் தமிழ்த்தேரை இந்நிலம் வாழ்த்து
மிழற்றிக் கவிபாடு மே!

மேடுபோய் முட்டி மிகமிரண்டுப் பின்வாங்கும்
மாடுபோல் ஆகாய் மதி!


அகரம் அமுதா