செவ்வாய், 21 அக்டோபர், 2025

வெடிச்சது குத்தமாடா?

 

குற்றவாளி 1:-
பொட்டு வெடிதான்டா
போட்டேன்; அதுக்காக
ஜட்டியொடு உக்கார
வச்சிட்டான்; - சட்டத்தின்
முன்னால் நிறுத்திட்டான்;
முன்கதையை மாத்திட்டான்;
தண்டனை தந்துவிட்
டான்!
குற்றவாளி 2:-
மூனுநாள் உள்ளவெச்சி
மொத்தகதை மாத்திட்டான்;
ஏனுன்னு கேட்டதுக்கு
எத்துவிட்டான்; - நானுன்னைப்
போல வெடிக்கலே;
வேடிக்கை தான்பாத்தேன்;
ஆளைத்தூக் கிட்டான்
அதுக்கு!
குற்றவாளி 1:-
சுருள்காப்புத் துப்பாக்கி
சுட்டதுதப் பென்று
பொருள்காட்சி ஆக்கிட்டான்
போலீஸ்; - தெருசாட்சி
வந்துசொல்லிக் கேக்கலே;
வாண்டுன்னும் பாக்கலே;ஈ(து)
எந்தஊர் ஞாயம்
எலே!
குற்றவாளி 2:-
இப்படித்தான் கேட்டேன்
இடுப்பிலொரு குத்துவிட்டான்;
அப்படிப்போய்க் குந்தென்று
அதட்டிவிட்டான்; - உப்புபெறாச்
சின்ன விஷயத்தை
ஊதிப் பெரிசாக்கி
என்னை அடைச்சிட்டான்
இங்கு!
குற்றவாளி 1:-
ஆனை வெடிபோட்ட
ஆளைப் பிடிக்கலே;
வானவெடி வைத்தவன்
மாட்டலே; - நானெடுத்து
மூனு வெடித்திரியை
ஒன்றாக்கித் தீவைத்த
சீனிவெடிக் காடா
சிறை!?
குற்றவாளி 2:-
ஊசிவெடி வெச்சதற்கும்
ஓலைவெடி போட்டதற்கும்
நாசிவேர்க்க வந்துநின்றான்
நாங்கெடச்சேன்; - பேசிவெச்சி
வானவெடி போட்டவனை
வையம் பொளந்தவனை
ஏனரஸ்டு பண்ணல
இன்ஸு!?
குற்றவாளி 1:-
தின்றவன் தப்பிப்பான்;
நோண்டினவன் சிக்கிப்பான்;
இன்றுநேற் றல்ல
இதான்நிலைமை; - ஒன்றுதான்
காவலர் நாட்டமும்
கள்வரின் ஆட்டமும்;
சாவதெலாம் ஏழைகள்
தான்!
குற்றவாளி 2:-
தெக்குத் தெருவில்
சினேகிதி தன்வீட்டு
முக்குல் வெடித்தாள்
முனைகிள்ளி; - டக்குனுபோய்க்
கஸ்மால கான்ஸ்டபிள்
கைதுபண்ணிப் போட்டுட்டான்
புஸ்வாணத் திற்காய்ப்
புழல்!
குற்றவாளி 1:-
பொண்ணுன்னும் பாக்காம
பூவுன்னும் பாக்காம
கண்கலங்கி நிற்பதையும்
காணாம - என்ஆளு
கம்முன்னு காதலாய்க்
கைமீது வெச்சிருந்த
கம்பிமத் தாப்புக்காய்க்
கைது!
குற்றவாளி 2:-
ஆர்க்கும்காட் டாமல்
அடைப்பானோ? கொண்டுபோய்ச்
சீர்திருத்தப் பள்ளியில்
சேர்ப்பானோ? - ஊர்பார்க்க
நம்மோட போட்டோவை
நாலிடத்தில் வைப்பானோ?
கம்மனாட்டிக் கென்ன
கடுப்பு!?
குற்றவாளி 1:-
சாட்சிகள் வேண்டாமாம்;
ஜாமின் கிடையாதாம்;
காட்சிப் படுத்தாமல்
கைதுதாமாம்; - பூட்ஸ்மிதி
வாங்கத்தான் வேண்டுமாம்;
வாய்திறக்கக் கூடாதாம்;
நாம்செத்தோம்; வாய்தா
நகி!
குற்றவாளி 2:-
குண்டாஸில் வந்த,
கொலைகேஸில் உள்வந்த,
சண்டாளர் கூடநமைச்
சாடுகிறார்; - உண்மையில்நாம்
அம்மாம் பெருங்குற்றம்
அப்படி என்னசெய்தோம்?
இம்மாம் பெரிய
எதிர்ப்பு!?
குற்றவாளி 1:-
குற்ற உணர்வூட்டிக்
கேஸைநம் மேலேற்றிச்
சுற்றம் தவிக்க
ஜுரம்கூட்டிக் - கொற்றவர்கள்
கூறியதைக் கேட்கவைத்துக்
கொள்கைகளை ஏற்கவைத்துப்
பீறிடவைப் பான்நாட்டுப்
பித்து!
குற்றவாளி 2:-
ஆலைகள் மூடமாட்டான்;
ஆரண்யம் காக்கமாட்டான்;
வாலைக் கனிமவளம்
வைக்கமாட்டான்; - ஓலைவெடி
ஒன்னுரெண்டு போட்டா
ஒலகம் அழியுமென்பான்;
என்னடா சூழலியல்
இஃது!?
குற்றவாளி 1:-
சரக்கடிக்கக் காலநேரம்
சட்டத்தில் இல்லை;
சரவெடிக்குப் போட்டான்பார்
சட்டம்; - வரவரநம்
சின்ன மகிழ்ச்சியைச்
சீதச் சுதந்திரத்தைக்
கொன்றுவிட்டு ஆடுகிறான்
கூத்து!
குற்றவாளி 2:-
அவனப்பங் காசையா
ஆட்டயப் போட்டோம்?
எவனப்பங் காசை
எடுத்தோம்? - சிவனேன்னு
வீட்டுல துட்டுவாங்கி
வீதி யிலவெடிச்சா
மாட்டுவானா கையில்
விலங்கு?
குற்றவாளி 1:-
ஏட்டைய்யா பாக்குறான்
ஏத்தமா நோக்குறான்
கேட்டுட்டான் போலநம்
கேலிகளை; - வாட்டமா
மூஞ்சிய வெச்சிக்கோ
முன்னவரான் மெச்சிக்கோ
வீங்கிருமில் லேன்னா
விலா!
அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக