செவ்வாய், 21 அக்டோபர், 2025

சினிமா சாங்!


சிங்குறவன் சங்கேறி
சீவிக்கும் சிங்காரி
முங்குறவன் வாய்பொழிவேன்
மும்மாரி; – இங்குநான்
உங்களுடன் இல்லாட்டா,
உள்ளத்தில் நில்லாட்டா,
சங்குதான்; நான்சினிமா
சாங்! 01
பாடிட வாயெதுக்கு?
ஆடிடக் காலெதுக்கு?
பாடிய ஷேக்பண்ண
பீட்டிருக்கு; – நாடிநரம்பு
எல்லாம் முறுக்கேறும்
நல்லாக் கிறுக்கேறும்
செல்வோம் செமதூரம்
சேர்ந்து! 02
கோட்டையில் ஏத்துவேன்;
ரூட்டையும் மாத்துவேன்;
பேட்டையின் ஸ்லாங்கும்நான்
பேசுவேன்; – வாட்டுற
சோகத்த ஓட்டுவேன்
சொப்பனம் காட்டுவேன்
தேகத்தில் ஊட்டுவேன்
தெம்பு! 03
பத்துப்பாட் டெல்லாம்
பழையபாட்டு; இன்றில்லை
குத்துப்பாட் டில்லாமல்
கோலிவுட்; – மொத்தத்தில்
ஹீரோவே நான்தான்;
கிறுக்கேத்தும் பீட்டுக்கு
ஹீரோயின் ஆடினா
ஹிட்டு! 04
காதுல பூப்பூக்கும்
காத்துல நான்வந்தா;
தீதுகள் தீர்ப்பேன்
செவிதந்தா; – ஓதுவார்
ஓதாத போதும்நான்
உள்ளத் தொலிப்பேனே;
மோதாதா மௌனத்தின்
மோட்! 05
தூங்காத கண்ணுக்குத்
தூக்கம் தருவிப்பேன்;
தாங்காத நெஞ்சின்
தழும்பழிப்பேன்; – நீங்காத
பாரத்தப் போக்கும்
படப்பாட் டெனைப்போல
காரம்நீக் காதே
கவி! 06
நாட்டில் கவியெழுதி
நாலணா பாத்தவனைக்
காட்டினாத் தேவலைநீ
காட்டப்பா! – பாட்டிலே
மெட்டில் வரிபோட்ட
துட்டில் வரிகட்டும்
கெட்டிக் கவிகளைப்போய்
கேள்! 07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக