கரிகாலன் ஈற்றெடுப்பு –
தென்னம் பாளையில் தேன்பூ!
‘அகரம்
அமுதன்’ விரல்கள் எழுதும்
சிகரம்
தொடும்செந் தமிழ்ப்பா –நுகர்ந்ததும்
வெண்முல்லைப்
பூக்கள் விரிமலர்ச் சோலைக்குள்
கண்புதையக்
கண்டேன் கனா!
கனவெல்லாம்
வீரன் கரிகாலன் வந்தான்
தினவெடுத்த
தோளில் திகழ்ந்தான் –முனம்எம்
‘அகரத்தின்’
வாசல் உயரத்தில் தோன்றும்
நிகரற்ற
ஓவியமாய் நின்று!
நின்றெங்கள்
நெஞ்சம் நிலைத்தவா நேற்றுன்னைக்
கொன்றாரோ
காடையராம் கோழையர்? –அன்றன்று
மாவீரம்
என்றும் மரணிப்ப தில்லைநீ
போர்வீரம்
போற்றும் புலி!
புலியடித்துப்
போட்டதையே பூனைகள் நக்கும்
எலிவளைமுன்
ஏங்கியே நிற்கும் –விழிகள்
உறங்கிடா
வீரப் புலிப்படையால் நாளை
பிறந்திடும்
ஈழம் பெயர்த்து!
பெயர்த்தும்
தகர்த்தும் பெரும்போர்த் திறத்தால்
உயிர்த்தும்
எழுவதே வீரம் –செயிர்த்தே
அனுரா
தபுரத்தை அன்றெறிந்த குண்டால்
துணிக்கப்
பறந்தார் துணிந்து!
துணிந்தவர்க்கோ
ஆழி முழங்காலின் மட்டம்
எழுந்தவர்க்கோ
உச்சிவான் எட்டும் –எனவீரம்
ஊற்றெடுத்துப்
பாயும் உயர்பெரும் பாவியமாம்
‘ஈற்றெடுப்பு’க்
குண்டாமோ ஈடு?
ஈடில்லா
மாவீரன் ஈழக் கரிகாலன்
பாடுபொருள்
ஆனான்உம் பாத்தொகுப்பில் –ஏடவிழ்
பொற்றமிழைப்
போற்றும் புகழேந்திப் பாவலனின்
சொற்றமிழில்
தேனாய்ச் சொரிந்து!
சொரிந்ததுவோ
செந்தமிழ்ச் சொல்மாரி சிந்தை
அருந்தியதோ
வெண்பா அமுதம் –நிறைந்ததுவோ
காவிரியின்
கல்லணை கற்கண்டாய்ப் பாய்ந்ததுவோ
நாவிரியும்
பைந்தமிழ் நீர்!
நீரன்றோ
நேற்றுமுதல் பார்போற்றும் பாவலன்
நீரன்றோ
இன்றைய வெற்றிகொண்டான் –நீரன்றோ
நேரிய
ஈழத்தின் நாளை அவைப்புலவன்
நீரன்றோ
சங்கத் தமிழ்!
தமிழாகி
வந்தாய் தரணிபுகழ் கொண்டாய்
அமுதன்
எனப்பேரும் பெற்றாய் –இமிழ்கடல்
ஈழக்
‘கரிகாலன் ஈற்றெடுப்பு’ நூல்தென்னம்
பாளையின்
பூமணக்கும் பா!
வைகைவாணன்
மானாமதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக