புதன், 1 ஏப்ரல், 2026

18 டிசம்பர், 2016

 18 டிசம்பர், 2016

 
வேய்த்தோள்; விரல்முருங்கை; விஞ்சு தொடைவாழை;
வாய்த்த இடைநாணல்; மார்தென்னை; -ஆய்ந்திடுங்கால்
சேலை உடுத்திய தேக்கே உடலெனில்இப்
பாலைக்குள் சோலையைப் பார்!
பாலை - பதினாறகவை உடைய பெண்.

16 டிசம்பர், 2016

 16 டிசம்பர், 2016

 
கட்டு மரம்மீண்டும்
'காவேரி' சென்றுளது;
சட்டென ஏமா!
எருமையில்வா! - விட்டுவிடா(து)
'அப்போலோ' போலவக்
'காவேரி' உன்நகலென்(று)
இப்போது காட்ட
எழு!

10 டிசம்பர், 2016

 10 டிசம்பர், 2016

 
மனித உரிமை நாள். (10/12/16).
உமைப்போல் பிறர்க்கும் உலகம் பொதுவாம்;
தமைப்போல் நடத்தத் தவறின் - அமைதி
குலையும்;* உரிமைக் குரல்கள் ஒலிக்கும்;
உலைவறிந்(து)* ஒப்புர(வு) ஓம்பு!
குலைவு, உலைவு - அழிவு.

9 டிசம்பர், 2016

 தன்னிலை விளக்கம்!

நன்பாக்கள் என்று
நவின்றிடேன்; பேரழகு
இன்பாக்கள் என்றும்
இயம்பிடேன்; - என்பாக்கள்
துன்பில் உழன்று
துடிப்போர்க் கிதங்கூறி
அன்பை வளர்க்கும்
அவை!




9 டிசம்பர், 2016

 இன்பத்தேன் வெண்பா!

மாலை நிலாப்பொழுது;
மங்கை உனதருகில்;
காலை வரையில்நாம்
கண்விழிப்போம்; - சேலைக்குள்
இன்பத்தேள் கொட்டும்
எழிலை எனக்குரைத்(து)
இன்பத்தேன் வெண்பா
எழுது!
நெஞ்சுப் பொதிகள்;
நெளியும் இடைசுமக்கும்
பஞ்சுப் பொதிகள்;
படர்ந்தவைமேல் – கொஞ்சித்
துயிலக் கொடுத்துவைத்தோய்!
துய்த்துக் களைவாய்
மயிலின் மனத்து

கன்னம் கடித்துக்
கனியிதழ்த் தேன்குடித்துப்
பின்னம் இளநீர்
பெரிதுண்க; - முன்னம்
அசலைப் பருகி
அனுதினமும் ஆங்கே
பசலை வளர்ந்த
படி!
கடைக்கண் வழியுன்
கவினைப் பருகி
உடைக்கண் எனைநான்
ஒளிக்க; - இடைக்கண்
அடைக்கலம் தேடியுன்
ஐவிரல் தாவும்
படைக்கலம் போலும்
பறந்து!
நோகும் எனவெண்ணி
நோகாமல் சிற்றிடை
தாகம் தணிக்கத்
தலைப்படா(து) - ஆகம்
நொறுக்கி எடுத்துமயல்
நோய்தீர்த்து மீண்டும்
பொறுக்கித் தொடுத்துப்
புதுக்கு!
வள்ளல்நான் வந்து
வழங்கும் பொழுதும்நீ
கொள்ளல் விடுத்துக்
குறிவைத்துக் – கொள்ளை
அடிக்கத் துடிக்கும்
அழகை வியந்து
நடித்துச் சிவக்கும்
நகில்!

கையலம்புதல் கடமை!


இருவேளை கழி!
இருவேளை குளி!
இருவேளை வாயை
ஈறழுந்த தேய்!
இருவேளை என்பது
இவற்றிற்குப் போதலாம்;
அறுவேளை அலம்பினும்
அகங்கைக்குப் போதாதே!
மூக்கினைச் சிந்தவும்…
முடியினைக் கோதவும்…
நெற்றியின் வேர்வையை
நீண்டுமே நீக்கவும்…
முகத்தினைத் துடைக்கவும்…
முழியினைக் கசக்கவும்…
மிகைப்படும் அரிப்பினை
மிருதுவாய்ச் சொரியவும்…
வந்தெதிர்ப் பட்டோர்கை
வாஞ்சையாய்க் குலுக்கவும்…
முந்துவது யாதெனில்
முற்றாகக் கையன்றோ!
இத்தனை வேலைகள்
இயற்றிடும் கைகளில்
மொத்தமாய்க் நுண்ணுயிர்
முந்துற வாழுமே!
பொழுதெல்லாம் உழைப்பதால்
பொருட்களை எடுப்பதால்
அழுக்குகள் கைகளில்
அண்டுதல் இயல்பன்றோ!
கனிவான கையெனினும்
காப்புற்ற கையெனினும்
நுணிதான நுண்ணுயிரி
நின்றினம் பெருக்குமே!
விரல்கொண்ட நகங்களை
வெட்டாமல் விடுவதால்
திரள்கின்ற அழுக்கினால்
தீநுண்மி வளருமே!
கையூட்டும் திருட்டுமில்லாக்
கைச்சுத்தம் என்பதால்
புதுநீரில் அலம்பாது
போயுண்ணல் ஆகுமா?
அழுக்கற்ற வேலையே
அன்றாடம் செய்யினும்
இழுக்குற்ற நோய்க்கிருமி
இல்லாமல் போகுமா?
ஆதலால் கைகளை
அழுக்கற அலம்பியே
நாளெலாம் காத்திடல்
நமக்கெலாம் நன்மையே!



8 டிசம்பர், 2016

 8 டிசம்பர், 2016

 
மோடியின் படத்தைப் பயன் படுத்தியதற்காக ஜியோ நிறுவனத்திற்கு ரூ 500 / அபராதம்:-
- செய்தி -
.
செல்வரே ஆனாலும்
செய்வார் தவறெனில்
இல்லை கருணை
எனதிடத்தில்; - சொல்வதெனில்
அம்பானி தண்டம்
அடைக்க முடியாமல்
அம்போவென்(று) ஆவான்
அறி!
ஐந்நூறு தண்டம்
அடுக்குமா என்போரே!
ஐந்தாறு ரூபாய்
அவர்க்கிட்டால் –ஐந்தாறே
ஆண்டில் அடைப்பர்;
அதுமட்டும் அன்றிஅவர்
மீண்டும் தவறிழைப்பர்
மீண்டு!



8 டிசம்பர், 2016

 

மோடியின் படத்தைப் பயன் படுத்தியதற்காக ஜியோ நிறுவனத்திற்கு ரூ 500 / அபராதம்:-
- செய்தி -
.
எப்படிக் கட்டுவேன்?
என்சொத்தை விற்றாலும்
அப்பெரும் தண்டம்
அடையாதே – தப்பாக
மோடிப் படம்போட்ட
முட்டாள் தனத்திற்கே
தேடிநான் கொண்டதித்
தீங்கு!
தண்டல் எடுத்தென்
தலைவன் படம்போட்டுக்
கொண்டு கடைநடத்தக்
கூடாதோ? – தண்டல்
அடைக்கவே கையில்கா(சு)
அற்றநான் தண்டம்
அடைத்திடப் போவதேவ்
வாறு!?






 

7/12/2016 ; 9.00pm.
கட்டு மரமே!அக்
காலனையே ஏமாற்றி
விட்டு நலமாக
வீடுவந்தாய்; – துட்டு
மரமே! உனக்கு
மரணமே இல்லா
வரமே அவன்தந்தான்
வந்து!
கரையொதுங்கு வாயென்றே
கண்டிருந்தார்; நீயோ
கரையேறி வந்த
கவினை – உரைப்பதெனில்
'அப்போலோ' செல்லாமல்
'காவேரி' சென்றதனால்
இப்போது மீண்டாய்
இனிது!



இரங்கல் வெண்பா! (6/12/2016 ; 6.00 am)

 இரங்கல் வெண்பா! (6/12/2016 ; 6.00 am)

பாராண்ட அம்மா
பரம பதமடைந்தார்;
நேராய் இறைவனடி
நேர்கவெனச் – சீராளும்
வெண்பாக் கவிஞன்நான்
வேண்டுகிறேன்; கண்கள்கொண்(டு)
உண்பா இரண்டொன்(று)
உரைத்து!
செம்மைப் பணிமுடித்துச்
சென்றார் ஜெயலலிதா
அம்மை; இறைவா!
அருள்செய்க! - இம்மைவிட்டு
வேனேறி நன்றாய்
அமைதி அடையட்டும்
ஊனேறி நின்ற
உயிர்!



8 டிசம்பர், 2016

 8 டிசம்பர், 2016

 
பாகிஸ்தான் அனைத்துலக விமானம் விபத்திற் குள்ளானது. விமானி உட்பட 47 பேர் பலி…
.
- செய்தி - (7/12/2016)
.
காற்றூர்தி ஆங்குக் கவிழ்ந்து நிலம்விழுந்து
கூற்றூர்தி ஆகியுயிர் கொன்றதே! – ஆற்றொணாத்
துன்பத்தில் ஆங்குத் துடிக்கும் உறவுகளை
என்சொல்லி தேற்ற இனி!



8 டிசம்பர், 2016

 


இந்தோனேஷியாவில் நிலநடுக்கம். இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...
.
- செய்தி - (7/12/2016)
.
நடுக்கம் உனக்கென்றால் நன்னிலமே! அந்த
நடுக்கம் எமக்கும் நடுக்கம் – கொடுக்கும்;
அலுக்கா தெமையே அழிக்கும் நிலமே!
உலுக்கும் செயலை ஒழி!






உன்னைத்தான் கேட்கிறேன்!

 


ஒட்டாதா தமிழர் நாவில்
. . ஒண்டமிழ்? ஒட்டி னாலும்
எட்டாதா புகழ்,பேர் என்னும்
. . இன்னிலை? எட்டி னாலும்
கொட்டாதா குறையாச் செல்வக்
. . குவியல்கள்? கொட்டி னாலும்
கிட்டாதா தமிழர் நாட்டில்
. . கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?

கூடாதா தமிழர் கூட்டம்?
. . கூடிப்போர் முரசு கொட்டக்
கூடாதா? வந்தாண் டேய்க்கும்
. . கொள்ளையர் கூட்டம் அஞ்சி
ஓடாதா? தமிழர் ஆட்சி
. . ஓங்காதா? அதனை என்பா
பாடாதா? பாடும் காலம்
. . பக்கத்தில் வந்தி டாதா?

7 டிசம்பர், 2016

 மல்லையா பெற்றகடன் மக்கள் வரிப்பணம்

இல்லையா? ஏமாற்றிச் சென்றவனைக் – கொல்லாமல்
உள்ளபடி இங்கவன் உற்ற கடனையெல்லாம்
தள்ளுபடி செய்தது தப்பு!
செலுத்தத் தவறினான்; சென்றொளிந்து கொண்டான்;
உலுத்தன் இவனை ஒழித்தால் – வலுத்தவன்
பெற்ற கடனைச் சிறிதும்ஏ மாற்றாமல்
முற்றும் அடைப்பான் முனைந்து!





நம்ம

ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன் உயிரோடு உள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே
போரில் போராளி தினம்சாகலாம்
போராட்டம் என்றும் சாகாதது
துரோகம் எதிரிக்குத் துணைபோகலாம்
துணிவே புலிகட்குத் துணையானது
அண்ணனின் வழிநடத்தால் ஈழம் உறுதியடா
அடையும் விடுதலைக்கு அர்ப்பணம் குருதியடா!
வாழவைப்பான் நாளையந்த
மாமறவன் தாள்பணிவோமே
----------------------------------------------------(ஈழ நிலத்தினிலே)
வீரன் மாவீரன் பிரபாகரன்
வீணர் நமையாள விரும்பாதவன்
தாகம் தமிழீழம் தானென்றவன்
தாயாய் உருமாறித் துணைநின்றவன்
எதிரியின் ஆயுதத்தால் எதிரியைத் தோற்கடித்தான்
புலிஇவன் போலஎவன் புரட்சிக்குத் தோள்கொடுத்தான்
வீட்டுக்கொரு ஆள்வருவீர்
வென்றெடுப்பேன் ஈழம்என்றானே
----------------------------------------------------(ஈழ நிலத்தினிலே)

தமிழர்க்குப் புலியென்று பேர்!


தமிழர்க்குப் புலியென்று பேர் – இன்பத்
. . தமிழீழத் தாயகம் உயிருக்கு நேர்!
தமிழர்சொல் ‘யாதும்நம் ஊர்’ – என்று
. . சாற்றிய அவர்க்கென்று வாய்க்குமோர் ஊர்?
தமிழர்நல் வீரத்தின் வேர் – பிறர்
. . தரித்திரம் கலைவதில் இன்புறும் கார்!
தமிழர்மெய் அன்பிற்கு நீர் – உயர்
. . தாயகம் காத்திடச் செய்குவர் போர்!
தமிழர்க்குப் புகழென்று பேர் – அந்தப்
. . புகழ்யாவும் புலிப்படை ஈட்டிய சீர்!
தமிழர்தொல் மரபினம் பார் – புலித்
. . தலைவனில் நிழல்தனில் மறம்படித் தார்!
தமிழரைப் புறங்கண்ட தார்? – வெஞ்
. . சமரினில் விழவிழ உயிர்த்தெழு வார்!
தமிழர்வன் சூழ்ச்சிவெல் வார் – தங்கள்
. . தாய்நிலம் மீட்டவர் ஆட்சிசெய் வார்!