இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு; -வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?
இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு; -கையில்
இருப்பிருக்க இன்புறவே
இணைவதுவா உறவு?
வற்றிவிட்ட குளத்துடனே
வாடும்புல் உறவு; -நீர்மேல்
பற்றுவைத்துப் பறந்துபோகும்
பறவைகளா உறவு?
காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு; -நெஞ்சில்
மாசிருக்க முகத்தளவில்
மலருவதா உறவு?
அகத்தளவில் கலத்திருக்க
அமைவதுதான் உறவு; -இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?
கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு; -வானில்
இருளகன்றால் ஒளிந்துகொள்ளும்
விண்மீனா உறவு?
கண்ணிமையாய் அருகிருந்து
காக்கவேண்டும் உறவு; -அன்றிப்
புண்ணெனவே வலிதந்தால்
பூணவேண்டும் துறவு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக