திங்கள், 1 டிசம்பர், 2025

நூல் வெளியீடு ஒன்றில் நிகழ்த்திய கவிதையுரை...

 நூல் வெளியீடு ஒன்றில் நிகழ்த்திய கவிதையுரை...

=
அன்பன் என் பேர் அமுதன்
ஆர்ப்பதெல்லாம் சீர் மரபே!
தென்னவன் நான் செந்தமிழின்
சீரெடுத்து - மன்னும்
குணத்தமிழர் மாமரபு
குன்றாது உமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன்
வந்து!
=
முகில்
முருகன்
கன்னற்
கவிதைக்காரன் என்றிருந்தேன்;
என்னளவில்
இன்று, இப்போது
கொஞ்சம்
குறும்புக்காரன் என்றறிந்தேன்!
நானோ -
பரணி பாடும்
பக்குவம் கொண்டவன்;
என்னை -
கலவியல் பாட
கட்டளை இடுக்கிறான்!
நானோ -
முரசம் கொட்டும்
மூர்க்கம் கொண்டவன்;
என்னை -
சரசம் சொட்டச்
சாணை பிடிக்கிறான்!
அகநானூறைப் பேச
புறநானூறை அழைக்கிறான்;
அகிம்சையை பேச
ஹிம்சையைக் கேட்கிறான்!
ஆத்திகம் பேச
நாத்திகத்தை நாடுகிறான்;
இச்சிப்பூ பற்றி
இரண்டொரு வார்த்தை சொல்ல
இரும்பினை ஏற்பாடு செய்கிறான்!
காமக் கதை பேச
காமனைக் கூப்பிடலாம்…
சாமக்கதை பேச
சன்னியாசியையா கூப்பிடுவது? – இருகை
கூப்பிடுவது?
கூப்பிடுவதுபோல்
கூப்பிட்டு – இப்படியா
அடியேனுக்கு
ஆப்பிடுவது?
நீ -
தீ சுமக்கும் கையில்
பூ திணிக்கிறாய்;
ஈட்டியை எற்றிவிட்டு
ஈர்க்கேந்த பணிக்கிறாய்!
கலப்புப் பால் பற்றிக்
கட்டியம் கூற
கறந்த பாலா?
நினக்கென்ன வஞ்சம் என்மீது?
நீண்ட நெடு நாளா?
ஆகட்டும்…
அகம் - புறம் பேசுவதும்
புறம் - அகம் பேசுவதும்
உலக இயல்பு என்பதால்
ஒப்புகிறேன்;
‘ஒப்பந்தமிட்ட இரவு’ பற்றி
உங்கள் முன்
சீரிய வார்த்தை சில
செப்புகிறேன்!
காதல் -
கொஞ்சம் கவினானது;
காதலினும் போதை தர வல்லதோ
அவினானது?
காதல் -
கசப்பு மருந்து;
இளமைக்கு அதுவேதான்
இனிப்பு விருந்து!
காதல்
விண் நிலவை
விட்டிலென்று நம்பவைக்கும்;
விட்டிலை
விண் நிலவென்று வெம்பவைக்கும்!
காதல் வந்தால் -
பகல் விளக்கும் ஆகும்
அகல் விளக்கு;
அகல் விளக்கும் ஆகும்
பகல் விளக்கு!
நிழலிக்கும் காதல்
நிகழ்ந்திருக்கிறது;
காதல் நிகழ்ந்ததனால்
கவிதை முகிழ்ந்திருக்கிறது!
கவிதை -
அளவிற் சிறிய மின்மினி;
அர்த்தம் புரிந்தபின்
அண்ணாந்து பார்க்கவைக்கும்
ஆகாய மணி!
கவிதை –
வாக்கிய விறகிருக்க
வார்த்தை சுள்ளி பொருக்கிக்
கூடு கட்டும்;
உள்ளே உள்ளே –
கற்பனை -
கருத்துக் கம்புசுற்றி
வீடு கட்டும்!
கவிதை -
கூழாங்கல்லை வைரமென்னும்;
கூறிய பொய்யைக்
குறுக்கு விசாரணை செய்ய முனைகிறதா
வையமின்னும்?
பேசுகிறது இந்நூல் – காதல்
பெருகுதலை;
காமன் அம்பு பட்டு
காயம் கருதுதலை;
கங்குல்கள் தோறும்
கன்னி
மஞ்சத்தில்
மருகுதலை;
தனிமை தரும்
தவிப்பில்
உள்ளம்
உருகுதலை;
காரணம் யாதெனில்
காதல் இது
ஒருதலை; - அல்ல
இருதலை!
பக்கங்களின் அளவில் – இது
சின்ன நூல்…
ஆயினும் – என்
அனுமதியோடு
திங்கள் உலாவும் - என் இரவிரண்டை
தின்ன நூல்!
என் தொலைந்து போன
இளமை நாட்களைத்
தேடிப் பிடிக்கச்
சொன்ன நூல்!
புத்தகத் தலைப்பே – என்
புத்திக்குள் பூச்சொரிகிறது…
உள்ளே கொஞ்சம்
ஊன்றிப் படிக்கிறேன் – அப்பப்பா!
மோகத்தில் என்
மூச்செரிகிறது – மயிர்
கூச்செரிகிறது!
இவர்
பக்கத்திற்குப் பக்கம்
கவிதைக்குக் கவிதை – காதலைப்
பதியமிட்டிருக்கிறார்;
வரிக்கு வரி
வார்த்தைக்கு வார்த்தை – ஏதோ
வசியமிட்டிருக்கிறார்!
வாசித்தேன் வாசித்தேன்
இந்நூல்
என்னுள்
ஏதோ செய்தது;
வாசித்தபின் யோசித்தேன்
இந்நூல்
என்னை
ஏதேதோ செய்தது…!
கோடிகளைச் செலவழித்து
மனிதன்
இன்னோர் உலகத்தில் வாழ
இயன்றுகொண்டிருக்கிறது
விஞ்ஞான வளர்ச்சி;
காலணா செலவின்றி
கண நொடியில்
அண்டம் கடத்தி
ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுகிறது
பதின்ம வயதில் எழும்
ஹார்மோன் கிளர்ச்சி!
காதல்
கண்களில் பிறப்பதாலோ என்னவோ
அதிகம்
கனவுகாண வைக்கிறது – கூடவே
விழிகள் இரண்டையும்
வெந்நீர் சிந்த வைக்கிறது!
காதல்
இதயத்தில் வளர்வதாலோ என்னவோ
இடையறாமல்
துடிதுடிக்க வைக்கிறது;
இடையிடையே
இயங்குவதை நிறுத்தி
உயிர்வரை நைக்கிறது!
காதலில் மாட்டுபவன்; -
கவிதைகள் தீட்டுபவன்; -
இருவரிடமும்
எங்கும் எப்போதும்
அகலாதும் அனுகாதும்
அனல் காய்வார் போல
இருத்தல் நலம்;
இருவர்க்கும்
ஊரவர் காதுகள்தான்
உற்றதோர் பலம்!
பேசத் தொடங்கு முன்
பேச மாட்டாரா என்றிருக்கும்;
உளறத் தொடங்கிய பின்
ஓய மாட்டாரா என்றிருக்கும்!
தோழி நிழலியிடம் – இந்தத்
தொல்லை இல்லை;
தேவை அறிந்து பயன்படுத்துகிறார்
தீந்தமிழ்ச் சொல்லை!
காதல் கொண்டவன் மனம் -
கவிதை எழுதச் சொல்லி அடம்பிடிக்கும்;
கவிஞர்கள் வரிசையில்
கால்கடுக்க நின்று இடம்பிடிக்கும்!
இங்கே நிழலியும் -
கவிதைத் தேரின் வடம்பிடிக்கிறார்;
கவிஞர் வரிசையில் இடம்பிடிக்கிறார்!
நிழலியின் கவிதை
நெடுகிலும் -
உப்புக் கண்ணீர்
உறைந்து கிடக்கிறது;
இதயக் குமுறல்
எழுந்து நடக்கிறது!
=
எழுத்துகள் மேல்நீச்சடிக்க
எண்ணங்கள் உன்னில்
மூழ்கிக் கிடக்கிறது….
இது நிழலி
இயம்பியது – என்
நெஞ்சில்
நிரம்பியது…
=
‘புரண்டு படுத்தேன்
இரவைச் சுற்றினேன்
புத்தகம் தேடினேன்
என்
மங்கிய
இருள் கலைத்து
விடியல் வந்த பின்னும்
உன் நினைவுகளின் போராட்டம்
இன்னும் முடிந்த பாடில்லை!’
இதுவெல்லாம்
இதுவெல்லாம்
யூசுவல் வரி;
பின்வரும் வரியே
நிகழ்கால எலி பிடிக்க
நீட்டிய பொறி!
‘வெடித்துச் சிதறிய
நிலத்தைக் கண்ணீரால்
நிரப்பும் விவசாயி போல
மரணித்துப் போனேன்’…
இப்படித்தான்
நிகழ் கால
நூலெடுத்து
நேர்த்தியான ஆடையைத்
நெய்து கொள்ளும் கவிதைத் தறி;
என்பதறி!
சமகால நிகழ்வை – காதல்
தனக்கு உவமையாய்
சாதித்துக்கொள்ளல்
சாத்தியம்;
தேவையெனில்
தேர்ந்தெடுத்துக்கொள்ளும்…
பண்ணிற்கு - எல்லாமே
பாத்தியம்!
=
நீருக்குள் நீராய்த்
திரிகிறது
என் நீர்த்துப் போன
மௌனம்!
இது நிழலி!
இது படிப்பதற்கு நன்றாயுள்ளது போலத் தோன்றினும்
இதில் ஓர் முரண்தொடை முகிழ்ந்து கிடக்கிறது.
வார்த்தை நீர்த்துப்போனால்
மௌனம் அங்கே முளைகட்டும்;
மௌனம் நீர்த்துப்போனால்
வார்த்தை அங்கே களைகட்டும்!
கவிதை - வாசிக்கிற போது
காட்சிகளாய் விரியவேண்டும்;
விரிந்து
விரிந்து
அனேக விஷயங்களை
அகத்தில் சொரியவேண்டும்;
இத்தகைய கவிதை
ஏட்டில் மட்டுமல்ல
எண்ணத்திலும்
எழுந்துநிற்கும் யாண்டும்!
அடுத்து வரும்
அமுத வரி
இளம் கவி நிழலி
எழுதியது…
இத்தகைய வரியை
எத்தனை முயன்றும்
கலங்கப்படுத்த முடியுமோ
காலப் புழுதியது?
‘ஒவ்வொரு பக்கத்திலும்
என் பெயருக்குப் பின்னால்
விட்டு வைக்கிறேன்
உன் பெயருக்கான
இடைவெளியை…’
இப்படி
காதல் நிறைந்த வரிகளை
காமம் கடந்த வரிகளை
நிழலி
நிகழ்த்தவேண்டும் என்பது - என்
நெஞ்சக் கிடக்கை;
வழங்குவார் என்ற நம்பிக்கையோடு
வாழ்த்துகிறது என் வலக்கை!
=
‘நூறு பக்கங்கள்
தாண்டிவிட்டன
உன் பெயரைத் தவிர
எதையும்
எழுதத் தெரியவில்லை’
என்கிறார் நிழலி;
இருட்டு வண்ணக் குழலி!
ஊரார் உறிகளை
ஒருகை பார்த்துவிட்டு…
திருடிய வெண்ணையை
தின்று தீர்த்துவிட்டு…
ஒன்றும் அறியாதவன்போல்
நின்றானே கண்ணன்;
எல்லாம் எழுதிவிட்டு
எதுவுமே எழுதவில்லை
எனும் நிழலிக்கு
அவன் சின்னன்!
மேலும் நிழலி
விளம்புகிறார்…
“எல்லோரும் சொல்கின்றனர்
சமுதாய கருத்துகளை
எழுத வேண்டுமாம்
என்னுள் உள்ள
உன்னைப் புரட்டிப் புரட்டி
எழுதிக்கொண்டிருக்கும்
என் எழுதுகோலும்
நானும்
எந்த சமுதாயத்தில்
இணையலாம் என்று
யோசித்துக் கொண்டிருக்கிறோம்” - என்று.
ஆம்
காதல் வந்தால்
எதையும் நெருங்கவிடாது;
யாரையும் ஒட்டவிடாது!
அவன்
அவள் - தவிர
எவையும்
எவரும்
அவர்களுக்கு அன்னியம்;
நத்தைக்கூடு
நல்கிவிடும் – அவர்களுக்கு
வானமும் வழங்கா
வன்னியம்!
காதலிப்பவன்
சிந்திப்பதெல்லாம் சித்தாந்தம்…
விளம்புவதெல்லாம் வேதாந்தம்…
அதற்குப்
பொருளுரையோ
பொழிப்புரையோ கேட்டுப்
புலம்பக்கூடாது;
கண்ணீர் கொண்டு
கன்னங்களை அலம்பக்கூடாது!
அந்த வகையில்
அருமைத் தோழி
நிழலி
நிகழ்த்தியதெல்லாம் கவிதை;
இன்றுபோல் என்றும்
இனிய கவி தை – என
வாயாற
வாழ்த்துகிறேன்.
இப்போது -
விடைபெற வேண்டி
உங்கள் முன்
சிரம் தாழ்த்துகிறேன்.
நன்றி. வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக