பிரபாகரன் சேய் பாலச்சந்திரனின் இறுதி நொடிகளைக் காட்சிப் படுத்துகிறது இக் கவிதை...
பாலசந்திரன் பேசுகிறேன்!
இகல் கொன்று...
இமய வரை வென்று...
வடவர் சுமந்து
வர
கண்ணகிக்குக்
கற்சிலை கண்டானே
குட்டுவன் என்று! - அத்தகையோன்
உதிரத்தில் உதித்தவன்;
களம்பல கண்டு
களைவான் பகை; அப்புலி -
இதோ!
இருந்த குகை; - எனத்தன்
அடிவயிற்றை
ஆதரித்தாளே காவற் பெண்டு;
உழுவம் ஒன்று
உரும... -தன்
தேகம் பிளக்கச்
செரும...
வீரமங்கை - தானொரு
தீரமங்கை - என்பதை
முச்சில் கொண்டு
மூதரித்தாளே கோவப் பெண்டு! - அத்தகையோள்
உதரத்தில் வதித்தவன்;
அகநானூற்றுக் காதலை
அகவலியால் அதுக்கியவன்;
புறநானூற்று வீரத்தைப்
புயவலியால் புதுக்கியவன்;
எல்லையில் - இந்த
முல்லையில் -
ஞெள்ளைகள் அனைய
அள்ளைகள் படையை...
தொடைதட்டி எதிர்கொண்டு
படைகட்டி எதிர்ப்பவன்;
ஒட்டார் தலையை
வெட்டாதே உதிர்ப்பவன்;
என்னும்படி - ஏடும் எழுத்தும்
பன்னும்படி -
சொழப் புலிநேர்
ஈழப் புலியாய் இலங்குகிற
பிரபாகரனின் பிள்ளைநான்!
பிறப்பால் கடைக்குட்டி!
‘சிறுவன் - சிறு
உருவன் -
அடைந்தேன் தஞ்சம்;
இறங்குவீர் நெஞ்சம்!’
என்று – வெறும்வாய்
மென்று -
நாணமின்றி
நச்சரிக்கவா வந்தேன்?
புலிகள் இருக்கப்
பொதுமக்கள் மேற்
பொருதல்
புகழில்லை என்பதை
உழுவைக் குருளை நான்
உச்சரிக்கவே வந்தேன்;
எம்மவர் தலையை
இலைபோல் தழைபோல்
கிள்ளுவதும் -கிள்ளிக்
கெல்லுவதும்
இகல் வெல்லும் போரின்
இகழ் சொல்லும்
என்றும்மை
எச்சரிக்கவே வந்தேன்!
வந்திருப்பது
வேங்கையின் பிள்ளை;
மாற்றலர் கண்டு
மருளாத கிள்ளை;
என்பதறிந்தும்
ஏன் வாலாட்டுகிறீர்?
‘தரணி எங்கணும் வாழும்
தமிழர்
நெஞ்சில்
சஞ்சரிப்பவன்;
தமிழர் நிலத்தில்
தாளை வைத்துத்
தருக்குவார்தம்
சங்கரிப்பவன்;
ஈன்றான்
இரண்டு ஆணை;
இரண்டில்
இளையது கோணை!’ - என
வாய்க்கு வந்ததை
வாரி இறைத்துத்
தப்புத்தப்பாய் - ஏன்
தாலாட்டுகிறீர்?
தலை தப்பவா
தளைப்பட்டேன்?
கொத்தணி குண்டிற்குக்
குலை நடுங்கியா
அத்தனை நீங்கி - உம்
அளைப்பட்டேன்?
எம்மினம்
இற்று விழுவது கண்டு
அலைப்பட்டேன்
அல்லால்
நெஞ்சு நடுங்கியா - இந்
நிலைப்பட்டேன்?
வாய்ச்சாலம் காட்டி; - போரில்
மாய்மாலம் நாட்டி;
தமிழரைக் கொன்றதாய் -தமிழர்
தானையை வென்றதாய் -
தருக்குவோரே!
தருக்கித் தருக்கித்
தன்னிகழைத்
தானே பெருக்குவோரே!
இவன் பாலன்;
இல்லையே காலன்; - பின் ஏன்
பேழைக்குள்
பாம்புபோல் ஒடுங்குகிறான்?
கும்பி நடுங்குகிறான்? - உங்கள்
கொடுங் கோலன்!?
அணில்கறி எனவெனை
அணைந்தானோ?
அனல்பொறி எனப்பின்
அகன்றானோ?
என்னில்
எந்தையைக் கண்டானோ?
கண்டதால்
கலக்கம் கொண்டானோ?
ஆதலால்தான்... - பழிமேற்
காதலால்தான்...
ஆலை அசைக்க
ஆகாதெனினும்
விழுதை வீழ்த்த
விழைகிறானோ?
வடவைத் தீயை
வகிர ஒண்ணாமல்
ஒளிர்சுடர் துணிக்க
உழைகிறானோ?
சொல்லைக் காக்கச் சொன்னால்
பல்லைக் காக்கும் உம்மை...
என்ன சொல்லி
என்ன?
பிரியம் விடச்சொன்ன
புத்தனே
பிரியப் பட்டானோ
பிள்ளைக் கறி தின்ன?
வீரனே!
விளைவதறியாச் சிறுவன் எனைச்
சுட முனையும்
சூரனே!
கட்டுப் படுத்து -
கை நடுக்கத்தை;
மட்டுப் படுத்து -
மன நடுக்கத்தை;
கோழைபோல் - முட்டக் கொம்பில்லா
மோழைபோல்
துப்பாக்கி துணைகொண்டும்
துடை நடுங்கலாமா?
பாலச் சந்திரன் நான்
பாலகன் தானே?
பாம்பைக் கண்டதுபோல்
படை நடுங்கலாமா?
என் வயதில் நீ
பொம்மைத் துவக்கைப்
பார்த்ததற்கே பயந்து
போயிருக்கக்கூடும் மூச்சா;
துவக்கைத்
தலையணையாக்கித்
துயின்றவன் நான்...
குண்டுகளைக்
கூழாங்கற்களென
வாயில் அடக்கி வழுவற
வண்டமிழ் பயின்றவன் நான்...
அணுவளவும் பலிக்காது - எனை
அச்சுறுத்த முயலுமுன் பாச்சா!
துமுக்கியை எடு;
தோட்டாக்கள் இடு; - என்
அகலம் மிக
அகலம்...
வாட்டம் விடு;
தோட்டாக்கள் நடு!
நெஞ்சில் சுடும்
நெஞ்சுரம் கொள்;
நெஞ்சுரம் இல்லையா?
என்னிடம் சொல்;
நெஞ்சுரம் ஊட்டுகிறேன்
அப்புறம் கொல்!
நேராரால் எனக்கு
நேர்ந்ததும்...
கூடாரால் மரணம்
கூடியதும்...
யாய் செவிகளை
எட்டக்கூடும்;
மார்பில் தாங்கி மாய்ந்தானா? - பிள்ளை
முதுகில் வாங்கிச் சாய்ந்தானா?
வேட்டம் செய்
தோட்டாவை?
என்பதறிய -
ஞாட்பு நோக்கி
நங்கையவள் கால்கள்
நடை கட்டக்கூடும்!
மார்பில் தாங்கி
மாய்ந்தான் மகன்! -
என்பதன்றோ
என் மானத்திற்கும் - அவளின்
தன்மானத்திற்கும்
தக்கது;
மெய் நடுக்கத்தால் - உன்
மன நடுக்கத்தால் -
நேர்மாறாய் நிகழ்ந்துவிடின்
நேற்றுவரைக் காத்த
தமிழர் வீரத்திற்குத்
தொக்கது!
=
அன்னையே! - நான்
அழுத நாட்களில்
பால் சுரந்து
பசிபோக்கிய தென்னையே!
நிலாக்காட்டிச் சோறூட்டினாயே!
நாளும்
நற்றமிழர் தலைமேல்
வெடிவைத்தேகும்
விமானத்தின் -
விலாக்காட்டி வீறூட்டினாயே!
போர்க் கலையில் தேருவான்; - பிள்ளை
போய்ப் பகையை நூறுவான்;
என
என்
உச்சி முகர்ந்தாயே! - எனை
மெச்சி மகிழ்ந்தாயே!
ஐயையே!
அன்னையே! - நீ
கண்ட கனவு
கானல்நீர் ஆனதே; - நீ
ஏற்றிய விளக்கு...
எரியும் முன்; - வெளிச்சம்
சொரியும் முன்;
இருளுக்கு -
இரையாகிப் போனதே!
=
ஐயனே!
அடலேறே! - நீ
காதலித்துக் கைப்பிடித்தாய்
ஈழப் பெண்ணை;
கைப்பிடித்தும் காதலித்தாய்
ஈழ மண்ணை!
முந்நாளில் தமிழர்
முழுந்தாய்...
திருகுக் கல்லில்
சிக்குண்ட உழுந்தாய்...
அடிஉதை பட்டு
மடிவது கண்டு
வீறுகொண் டெழுந்தாய்;
வெஞ்சுடர் கொழுந்தாய்!
விடுதலை என்னும்
விடிதலை ஏற்படுத்த...
வில்லாய் வளைந்த தமிழனின்
முதுகினை நேர்ப்படுத்த...
அரசு கட்டினாய்;
அமர்க்களம் ஏகி
மூர்க்கரைப் புறங்கண்டு
முரசு கொட்டினாய்;
புறநானூற்று வீரத்தின்
புயத்தில் படிந்த
புழுதி தட்டினாய்!
உத்தமனே! - நான்
உன்னொரு கண்;
இன்னொரு கண்
ஈழ மண்!
என்ன தவம் செய்துவிட்டேன்
நினக்குப் பிள்ளையாய்ப் பிறக்க?
மீண்டும் வாய்க்குமோ
நினக்கே பிறந்து
நீணிலத்திற் சிறக்க?
=
அண்ணனே! - என்னிரு
கண்ணனே!
களத்தில் என்னைக்
காணாததற்காய்...
செற்றலரிடமிருந்து - இச்
சிறுவனைப்
பாதுகாத்துப்
பேணாததற்காய்...
மனம் -
மலங்காதே!
கண் -
கலங்காதே!
முன்னினும்
முனிவோடு பொருது;
வீரத்திற்கு அணிசேர்க்கும்
வெற்றியையே கருது!
=
புலிகளே!
என்றோ எட்டவிருக்கும்
ஈழத்திற்காய்
இன்றே
இடப்படும்
பலிகளே!
எந்தையின்
சிந்தைக்குச்
செயல் வடிவம் கொடுக்கும்
வீரியம் மிக்க
விந்தைகளே!
ஈழத் தமிழனின்
ஈனம் போக்க...
மறுவிலாத் தமிழச்சி
மானம் காக்க...
தோளில் முதுகில்
துமுக்கிகள் சுமந்து
நாடு மீட்க - ஊர்ந்துசெலும்
நந்தைகளே!
நாளும்
நீங்கள் -
ஈட்டிய வெற்றியை...
வெற்றியைத் தோற்றிய
பெற்றியை...
பக்கத்தில் இருந்து
பார்த்தவன் நான்; - உங்கள்
கக்கத்தில் அமர்ந்து
கண்டவன் நான்!
உங்களால் ஏலும்;
உறுதுயர் மாளும்!
=
ஈழத்தோரே! - என்
இனத்தோரே!
பாதுகாப்பு வளையம் - எனப்
பகர்ந்ததை நம்பித்
தீதுகாப்பு வளையத்திற்குள்
சிக்கி இழிந்தோரே!
குடி வாழக்
கோன் வாழும்...
குடி வீழக்
கோன் வீழும்...
என்பதறிந்த ஏதிலார்
எடுத்து வீசிய
சொற்கள் - எனும்
கற்கள்
இடற -
இங்குவந்து விழுந்தோரே!
இப்போதும் விழலாம்;
எப்போதும் விழலாம்;
எதிரியின் கணைகள் - என
எண்ணிக் கொண்டிருக்கும்
அப்போதும் விழலாம்; - அப்போதைக்(கு)
அப்போதும் விழலாம்;
என்ற -
அச்சத்தில்...
அச்சத்தின் -
உச்சத்தில்...
இருந்தது போதும் - அங்கிருந்து
இறந்தது போதும் என்றா
இரவியை விட்டீர்?
இருள்வயப் பட்டீர்?
வாழ்வில் இருந்தோம் -
நன்றாய்...
வீழ்விலும் இருப்போம் -
ஒன்றாய்...
என்றன்றோ - எந்தை
என்னை அனுப்பி வைத்தான்;
குடிகளுக்கு ஆவது - தன்
குழந்தைக்கும் ஆகட்டும் - எனச்
சிங்கம்போல் பிடர்
சிலுப்பி வைத்தான்!
=
என்னொத்த பிள்ளைகளே!
இறகொடிந்த கிள்ளைகளே!
பகைக் கொன்றும் - அத்தனை
பயம் தேவையில்லை;
பயம் கொன்றால் - வேறு
பகை தேவையில்லை!
குதித்தாடும் வயதில் - பள்ளிப்
படியேறும் வயதில்
முள்வேலிக்குள்
முடக்கப் பட்டோமே - என
அங்கலாய்த்து
அழவேண்டாம்;
கண்ணீர் ஏர் கொண்டு
கன்னத்தை உழவேண்டாம்!
கார்த்திகைப் பூக்களே!
கவின் நிலாக்களே!
உம்மை மீட்க -
உறுகண் மாய்க்க - ஈழக்
காவலன் வருவான்; - இலையேல்
காலனாவது வருவான்!
=
பொழுது பார்த்துப் பாயப் புலிகள்
பதுங்குங் குழியே!
சுதந்திரக் காற்றைச்
சுவாசியாமல்
துஞ்சுவதில்லை - எனச்
செந்தமிழர்
ஒல்லையில்
ஒதுங்குங் குழியே!
வதை பட்டு;
வாதை பட்டு;
சதை கிழிந்து;
தசை இழிந்து;
அல்லல் படுவோரை
ஆதரித்து...
‘பள்ளம் - எனக்கிருக்கும்
உள்ளம்
ஆறறிவு மாந்தர்க்கு
அமையவில்லையே?’ - எனப்
பெரிதும் பேதலித்துப்
பொதுங்குங் குழியே!
அகலாதும்
அணுகாதும் - போரில் பொதுமக்கள்
பொன்றுதல் கண்டும் வெஞ்சொல்
புகலாதும் நிற்கும்
அகிலத்தைத் தட்டி - அதன்
முகுளத்தில் மொட்டி -
அதம்புங் குழியே!
தனக்காய் அன்றித்
தமிழர்க்காய்க்
காடையர் படைமேற்
குதம்புங் குழியே!
கருவறை அனையதோர்
காவலைத்
தருவறை - எனச்
சாற்றவல்ல
திருவறையாய்த்
திகழ்ந்தாய்;
திகழ்ந்ததால் -
நீயெமக்கு
நிகரரு தாயாய்
நிகழ்ந்தாய்!
அனை அனைய
அனையே!
இதோ! -
இன்றுநான் உன்னில்
புதைக்கப்பட விருக்கிறேன்;
புதைப்பதுபோல்
விதைக்கப்பட விருக்கிறேன்!
காலம் பார்த்துக்
கட்டவிழ்...!
கடமை உணர்த்தி
மொட்டவிழ்...!
=
சிங்களரே! - மிகச்
சின்னவரே!
‘தனக்குச் சமமா?
தமிழன் ஓர் இனமா?’
என - எந்தமிழர்
மிடர் பிடித்து
மிழற்றுகிறீர்;
வலக்கை கொண்டு
வலிவு காட்டி -
இடக்கை கொண்டு
இடக்கை இயற்றுகிறீர்!
அடிமையாய் இருக்க
ஆகாதெனில்
இலங்கையில் இருக்க
இடமில்லையா?
‘யாவரும் கேளிர்’
என்றிருந்தோமே!
மாய்க்க நினைப்பது
மடமில்லையா?
ஈழத் தமிழரை
ஏதிலி யாக்கி
ஆட்டிப் படைப்பது
அடமில்லையா?
ஈழத் தேரை
எங்கள் உயிரே
இழுக்க ஏற்றதோர்
வடமில்லையா?
=
காலனே! - கொடுங்
கோலனே!
இராச பக்சேவே!
அமைதியை
அழிக்கப் பிறந்த
இன்னோரு கோட்சேவே!
ஆரிவன்? என்றெனை
அண்டுகிறாய்; - நான்
நெஞ்சில் நினைப்பதை
நெண்டுகிறாய்;
ஒருவாறு ஓர்ந்தபின்
ஒண்டுகிறாய்;
‘தம்பியோ?’ என்றஞ்சித்
தண்டுகிறாய்!
நரிக்கு
நாட்டாண்மை கொடுத்தால்
கேட்குமாம் -
கிடைக்கு நாலாடு;
கீழ்மையே! - உனக்குக்
கேட்கிறதோ
இன்னுயிர் அனைய - எம்
ஈழ நாடு?
ஆட்கள் உனக்குப்பின்
ஆனபோதும் - அவர்
தோள்கள் தொகையின்றித்
தோன்றும்போதும் -
அத்தனையும் வீண்; - நீ
அலியன்றி இல்லை ஆண்;
நானிருப்பேனா
நான்கைந்து சாண்?
நானா உன் கழுத்துக்கு
நமன் வீசும் ஞாண்?
மூடனே!
முதலில்
ஆணா கிடு;
அப்புறம் எனை அடு!
என்னுயிர் குடி; - அந்த
இடைப்பட்ட நேரமேனும்
இன்னலற்று இருக்கட்டும்
எம் குடி!
=
ஓரியப் படையே!
ஒண்டமிழர் ஒழிக்கும்
காரியப் படையே!
காலனின் விடையே!
உமக்கு...
உம் -
இழுதை அனைய
இறைக்கு...
போர்விதி புரியாது;
நேர்வழி தெரியாது!
பூஞ்சோலை
பொருவ
செஞ்சோலையைச்
சாய்த்தீர்;
மாஞ்சோலை மான -
மகளிரை
வன்புணர்ந்து மாய்த்தீர்!
இவைதானே - உம்
சாதனை?
வீரமே!
விளங்கியதா?
நினக்கு
நேர்ந்த சோதனை!?
=
உலகத்தீரே!
உலகத்தீரே!
ஒருசொல் கேளீர் -
உலகத்தீரே!
காக்கை; குருவி; - நீள்
கடல்; மலை;
நாங்களும் பார்த்தோம்;
நாங்களாய்ப் பார்த்தோம்;
நீங்களும் பார்த்தீர்;
நீங்களாய்ப் பார்த்தீர்;
நாமும் - எம்
நாடும்
அவற்றுள் ஒன்றென
அறியாமல்
ஏன்
எங்களை
நீங்களாய்ப் பாராது
நீங்கலாய்ப் பார்த்தீர்?
ஒரு காக்கை
உயிர்விட்டுக் கிடந்தால் -
ஓராயிரம் காக்கைகள்
ஓடி வருமே!;
ஒருகண்ணில் - தூசி
உதிர்ந்தால் -
மறுகண்ணும்
வாடி அழுமே!
காணத்தானே செய்கிறீர் - எம்
கோரக் கொலை?
இன்னுமா நடுங்கவில்லை - உம்
ஈரக் குலை?
‘கொழும்பு புரிகிறது
அழும்பு; - அதனால்
தமிழீழத் தரையெங்கும்
தழும்பு!’
என -
ஏட்டில்...
எழுத்தில்...
எழுதப் படுகிறதே!
வாய்விட்டு
வாசிப்பதுண்டா?
வதை படுவது - நம்போலும்
மக்கள் தானே - என
எப்போதாவது
யோசிப்பதுண்டா?
=
ஐநாவே! - பெயரிலேயே
நா இருந்த போதும்
பெயரளவிற்கேனும்
பேசாத பொய்நாவே!
நல்லரசுகளே!
நாம்படும் துயர்கண்டும்
வாளா இருக்கின்ற
வல்லரசுகளே!
‘ஆயுதம்; அறிவு;
நாங்கள் கொடுப்பது;
இடையில் புகுந்து
எப்படி தடுப்பது?’ -
என்பது தானே
உங்கள் வாதம்?
உங்களால் தானே
இத்தனைச் சேதம்?
இதோ!
எதிரில் நிற்கும் எதிரி
அழுத்துகிறான் விசையை...
அகழ்கிறான் தசையை...
தோட்டாவே! - எனக்கான
கோட்டாவே!
மார்புக் கூட்டிலா?
மண்டை ஓட்டிலா?
எங்கே ஈழக் கனவு?
வீர விடுதலை உணர்வு?
என்று தேட... - கிடைத்தால்
எடுத் தோட...
என்னுடல் குடை;
இன்னுயிர் கடை!
உனக்குக் கிட்டும்
எனதுயிர் மட்டும்;
கனவும் உணர்வும்
காணக் கிட்டும் -
எம்போலும் உனக்குமவை
இருந்தால் மட்டும்!
இறுதியாய் ஒன்று;
என்
உயிர் மூச்சு போகுமுன்
உறுதியாய் ஒன்று!
ஈழம் வெல்லும்; - எட்டுத் திக்கும்
எம்புகழ் செல்லும்;
அங்கீகரிப்பதாய்
அன்று
இன்முகத்தோடு
இமயம் சொல்லும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக