திங்கள், 1 டிசம்பர், 2025

பாஞ்சாலி!

 

நான் -
ஐமுகம் கொண்ட விளக்கு;
தக்க தருணத்தில் ஐந்தும்
ஒளிதராததால்
இருள நேர்ந்ததென் கிழக்கு!
நான் -
தலைவிரிக் கோலமாய்த்
தவித்த சிலை - இந்தச் சிலைக்கு
அஞ்சு வண்ணங்கள்;
அஞ்சு வண்ணங்கள்
அமைந்த போதும் - நான்
அஞ்சா வண்ணம்
காத்தவன் கண்ணன்;
காரணம்
அவன் -என்
அண்ணன்!
நான் -
பஞ்சவர்க்கு விரித்தேன் முந்தி - அப்
பஞ்சவர்க்கு முந்தி -
இழுத்தானே ஒருவன்
என் முந்தி;
அவன் -
இழுக்க இழுக்க முந்தி -
ஈந்தாயே முந்தி - நீதான்
இந்தச் சொற்றொடர்
இழுக்குறாமற் காத்த சந்தி!
என் -
இல்லுக்கும் - நீளும்
அல்லுக்கும் வாய்த்த
ஐவர்க்கு
மெய்கொடுத்தேன்; - ஆனாலென்ன?
மானம்
மன்றேறியபோது
கண்ணா! - நீதானே
கைகொடுத்தாய்!
கள்வன் முயன்றான்
கலிங்கத்தைக் கல்ல;
கண்ணன் முயல்வானா - அக்
கலங்கத்தைக் கல்ல?
அபயம் அளிப்பானா?
அவலம் அழிப்பானா?
என -
என்னுள் -
அரும்பியது
ஆயிரம் யோசனை;
அரும்பிய யோசனை
அரும்பும் முன்னம்
ஆடை அருளினாயே
ஆயிரம் யோசனை!
கதறி அழுதபோது - நான்
கைகூப்பித் தொழுதபோது -
கணப் போழ்தில்
கொடுத்துதவினாய் கலை;
அடடா! - அது
அற்புத கலை;
அத்தகு
அற்புத கலையை
நிலமிசை
நிகழ்த்தினார் இலை!
பாவை நான் உடுத்ததோ
பதினாறு முழம்;
ஓர் உதவாக்கரை அதை
உருவியபோது -
பரந்தாமா! - நீ கொடுத்ததோ
பதினாயிரம் முழம்!
தோகை என்
துடியிடை பொருந்திய
தூசை - ஒரு
தூசைப்போல்
அகற்றினான்
அலியன்;
அவன்
அகற்ற அகற்ற...
தொய்வின்றித்
துகிலை நீ
அகட்ட அகட்ட...
அப்பப்பா! - இத்
தங்கை வரையில் நீ
தண்ணளியன்!
நீ -
கோபியர் வரையில்
கொசுவம் எடுப்பவன்; - இக்
கோதை வரையில்
கொசிகம் கொடுப்பவன்!
கந்தையில்
விந்தை செய்தவனே! -என்
பீற்றலில்
பேராற்றல் புரிந்தவனே!
மலையைக் கொண்டு
மழையிடமிருந்து - இந்த
மண்ணைக் காத்தாய்;
கலையைக் கொண்டு
பிழையிடமிருந்து -இந்தப்
பெண்ணைக் காத்தாய்!
வீமனின் மாமனே!
வணக்கத்திற் குரியவனே!
பஞ்சவரில் முன்தோன்றல் - என்
பிணக்கத்திற் குரியவனே...
ஐத்தான் எனநான்
அழைத்த காலம்போய் -
பொய்த்தான் எனநான்
புலம்பிட வைத்தான்;
கவறு -
தவறு - எனத்தெரிந்தும்
தன்னிலை மறந்து
தன்னை வைத்தான்; - பின்
என்னிலை அறிந்தும்
என்னை வைத்தான்;
ஐவர்க்கும் பொதுவான
தீவைத்தான் - வைத்துக்
கவறாடி என்கற்பிற்
தீ வைத்தான்!
விளையாட்டு
வினையாகிப் போனது
முதன் முதலில் - என்
விஷயத்தில்...
வினையாட்டிலும் - ஒரு
விளையாட்டை நிகழ்த்தினாயே!
நீதான் - என்
நிறைகாத்த வேலி;
நீ உதவவில்லையேல்
நீணிலத்தில்
இன்றளவும் பேசப்படுவாளா
இந்தப் பாஞ்சாலி?
பெற்றம் மேய்ப்பவனே!
அற்றம் மாய்ப்பவனே!
நேரார் எண்ணம்
நிறைவேறா வண்ணம் செய்வதில்
நினக்கு
நேரார்?
உன்னை -
உறி திருடன்
உடை திருடன் - என்பர்
ஊரார்;
அரிவை நான் வேண்ட
அறுவை அளித்ததை
உளத்தில் வைத்து
ஓரார்!
என்னவர்க்கு மூத்தோனாய்
வாய்த்த முன்னன்...
எனக்கு மூத்தாராய்
வாய்த்த கன்னன்...
கொடைஞனாம்
கொடைஞன்; - என்வரையில்
கொடுத்தானா கொடை?
கொஞ்சம் உடை?
உடைதான் எனக்குக்
கொடுத்தானா?
இல்லை
இடையிற் புகுந்து தடுத்தானா?
இல்லையே!
என்னளவில் அவனும்
எனக்குற்ற
தொல்லையே!
சொல்லுக்கு ஒருவர்;
வில்லுக்கு ஒருவர்;
மல்லுக்கு ஒருவர்;
பிந்தைய இருவர் - அவர்தம்
பின்னுக்கு வருவர்;
என -
இயம்பவல்ல
பாண்டவர்; - என்னளவில்
மாண்டவர்...
இடும்பை என்றதும்
இடையறாது கண்ணீர்
இழித்தவை
என்னிரு கண்கள்...
பிறகெதற்கு எனக்குப்
பன்னிரு கண்கள்?
உடும்பைப்போற் பற்றி ஒருவன்
உடுப்பை உருவியபோது
உதவிக்கு வந்தவை
உன்னிரு கால்கள்...
பிறகெதற்கு எனக்குப்
பன்னிரு கால்கள்?
என் கைகளோடு சேர்த்துப்
பன்னிரு கைகள் எனக்கு...
உன்னொரு கைதானே - என்
இழுக்கை இழித்தது;
கற்பிற் கலக்கவிருந்த
அழுக்கை அழித்தது!
மொத்தம் என் கழுத்தில்
மூவைந்து முடிச்சு...
ஆனாலும் - என்
ஆடை
அவிழா வண்ணம்
அணைபோட்ட தென்னவோ
மாயவா! - நீயிட்ட
முந்தாணை முடிச்சு!
ஐந்து கட்டில்களுக்கே
ஆனவள்...
நூறு கட்டில்கள் என்னை
நோக்கலாமா?
பத்துக் கைகளுக்குத்
தானிவள்...
நூறிரு கைகள் வந்து
நூற்கலாமா?
நெஞ்சவர் - என வாய்த்த
பஞ்சவர்
நோக்கத்தான்
நூலிடை;
அதை -
நூற்றுவர்
நோக்காமல்
காக்கத்தான் வேண்டினேன்
கண்ணா!
நீட்டினாய்
நுவலரும் நூலுடை!
அணங்கு நான்
அணிந்த ஆடைக்கு
ஆதி உண்டு;
அந்தம் உண்டு;
நீ -
அளித்த ஆடைக்கு -
ஆதி உண்டு;
ஆர் சொன்னார்
அந்தம் கண்டு?
ஓராடையில் இருப்பதையும்
ஓராது
தாவி இழுத்தான்
தாயனையள் என்றுணராத்
துரியன் தம்பி
விரியன்;
சேலையை மட்டுமா?
சேர்த்தே உயிரையும்...
மேவி உதவினாயே
மேழி பிடித்தவா!
சேலையை மட்டுமா?
சேர்த்தே உயிரையும்...
முன்நின்ற ஐவர்
முன்வர வில்லை;
பின்நின்று நீதானே
பிழையறக் காத்தாய்!
என்னென்று கேட்க
என்னவர்க்கு உரமில்லை;
உண்டுநான் என்றே நீ
உடைதந்து ஆர்த்தாய்!
நீ உதவிய உடுக்கை -
நீக்கியது
நேரிழை என்
நடுக்கை!
அடடா!
அன்றுமுதல்
எந்தாய்! -நீ
என் தாய்!
என் -
மடிமீதுற்ற
மடிமீது
வன்கை வைத்தொருவன்
மன் றாடிய போது...
மாயவா!
மாலவா!
மடி மறைக்க
மடி தாராயோ? - எனநான்
மடிப்பிச்சை கேட்டு
மன்றாடிய போது...
மடி கொடுத்து
மிடி தடுத்து
மாதவா தீர்த்த
மாதவா!
யார்க்கும் வாய்க்கலாம்
நூலாடை; நாலாடை;
யார்க்கும் வாய்க்குமோ - நீதந்த
நூலாடை போலாடை?
உன்னாலல்லவா
செல்லவிருந்த மானம்
செல்லாமல் இருந்தது;
உன்னாலல்லவா
துரியனின் எண்ணம்
வெல்லாமல் இருந்தது!
வெண்ணை உண்ட
வாயா! -இந்த
மண்ணை உண்ட
வாயா! - உன்
திருக்கை
சேதித்தது
சேலை பறித்தவன்
செருக்கை; செருக்கின்
கூரிய
கருக்கை;
ஒப்புகிறேன்!
ஒண்டொடி
என் நா -
உன் நாமம் இருக்க
ஏற்றதோர்
இருக்கை!
உன்னொருவன் கை போல்
ஒறுக்கவல்லதோ
இவளுற்ற இன்னலை
இன்னொருவன் கை?
நீ -
வையம் காப்பவன்;
வானம் காப்பவன்;
கூடவே -என்
மானம் காப்பவன்!
வாயே! - வார்த்தைகளின்
தாயே! - நீ
விசனப் பட்டபோது
விரைந்து
சீரை ஈந்தோனின்
சீரைப் பேசு!
புடவை தந்தோனின்
புகழைப் பாடு!
காழகம் களவுண்ட
கணத்தில்
முதலில் தடுக்க
முனைந்தது
என் கையா? - ஆழி துயில்வோன்
அம் கையா?
என நான்
எப்போதும்
கேள்விகள் கேட்டுக்
கிளத்துமாறு - என்
மெய்க்கு
மெய்யாய் வாய்த்த கையே!
மெய் வரை - என
மிழற்றவல்ல
ஐவரை
அணைத்தது போதும்;
மை வரை - என
விளம்பவல்ல
மெய் இறை தொழுதிரு
எப்போதும்!
உள்ளே உறையும்
உளமே! - நீ
கூவித் தொழுதபோது...
கேவி அழுதபோது...
துணிந்தெவன் தந்தான்
துணி?
நான் உள்ளளவும் - என்னுள்
நீ உள்ளளவும்
ஓயாமல் அவன்நாமம்
ஓதிடத் துணி!
கண்ணே!
கருமணியே! - நீ
நீரை வார்த்தபோது - நீண்ட
தாரை வார்த்தபோது...
எவன்கை தடுத்தது?
இருகண் துடைத்தது? - அத்
தீதறுத்தவன் நிற்கும்
திசையில் விழி;
அரியவனாம்
அரி அவனின்
தாள்கள் கழுவத்
தக்கதோர் தீர்த்தமெனச்
செவ்விழி வழி
தினமும் நீரை இழி!
இடை - உண்டா?
இலையா? - என்பதை
உறுதிப் படுத்தத்தான்
உருவினானோ உடை?
என்றெண்ணுமாறு
இளைத்த இடையே!
நீ உடுத்த உடை
நெய்யும் உடை; - உடுத்த
நையும் உடை;
இடையறாமல்
இடையே!
உனக்கு
உதவினானே உடை - அது
கண்ணன் கொடை; - என்
கற்பின் விடை!
ஐவர்க்கும் சமமாய்
இன்ப வெண்ணை
திரட்டித்
தரு மத்தாய் ஆனேன்; - அவன்
கருணைப் பார்வை பட்ட
கணம் முதல்
தரணியில்
தருமத் தாய் ஆனேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக