திங்கள், 1 டிசம்பர், 2025

 நாய்ச்சண்டை!

Blacky Dog :–
உர்ர்ருன்னா என்முன்
உறுமுற? கோபத்தைக்
கிர்ர்ருன்னா என்மண்டைக்
கேத்துற? – டர்ர்ருன்னா
ஆய்போற ஆள்டாநீ...
அஃதை மறந்தென்முன்
வாய்ச்சண்டைக் காடா
வர?
Browny Dog :-
கரிக்கட்டைக் காரா!
கருஞ்சட்டைப் பேரா!*
உரிக்கிறேன் பாரடா
உன்தோல்; – சரிக்குச்
சரியாக நின்னு
தகராறு பண்ணப்
பெரியாளா நீ?இப்பப்
பேசு!
பேரா - பெயரன் (பேரப்பிள்ளை)
Blacky Dog :–
சங்கிப் பயடாநீ...
சாம்பார் வடைடாநீ...
பங்கம் அறியாப்
பயடாநீ... – அங்கமெல்லாம்
காவி நிறம்டாநீ...
காய்லான் கடைடாநீ...
சீவிடுவேன் நா,நீட்டாய்
நீ..!
Browny Dog :-
மாடிவீட்டுப் பேழைய,
மாநிறத்துப் பாவைய,
நாடியெங் காதல
நாஞ்சொன்னா... – ஓடிவந்து
வீணாக் குறுக்குசால்
ஓட்டுற? வீண்வம்பு
வேணாம்என் கூட;
விலகு!
Blacky Dog :–
பாப்பமடா யாருக்கு
ஃபாரின் பிகருன்னு;
கேப்பமடா யார்க்கந்த
கேர்ள்இன்னு; – தீப்பமடா
மண்ணுக்கோ பொன்னுக்கோ
மல்லுக்கு நிக்காமப்
பொண்ணுக்கே சண்டையப்
போட்டு!
Browny Dog :-
திராவிடனும் ஆரியனும்
தீந்தமிழர் நாட்டை
அராவியது போல
அவளைத் - திராணியைக்
காட்டி அடையக்
கனவுகள் கண்டேன்னா
ஊட்டியில யேமிதிப்பேன்
ஓடு!
Blacky Dog :–
மருவாதி கெட்ட
மனுசா! இனிநீ
ஒருவார்த்தை சொன்னா
உதைப்பேன்; - தெருச்சண்டை
போட உனைப்போல்நான்
புத்திகெட்டுப் போய்விடலே
மூடப் பதரேவாய்
மூடு!
Browny Dog :-
என்னை மனுஷனென்று
ஏசி அசிங்கமா
சொன்னஉன் நாக்கையிப்போ
துண்டிப்பேன்; – இன்னும்நீ
இங்குநின்னா உன்னை
இரண்டாப் பொளந்துடுவேன்
பொங்குறத விட்டுட்டுப்
போ!
Blacky Dog :–
வாயக் கொடுக்கும்
வடக்குத் தெருப்பயலே
காயம் முழுதும்
கடிச்சுவெப்பேன்; – தீயஉன்
புத்திய ஊரார்முன்
போட்டுடைப்பேன்; ஊர்கையால்
சத்தியமா உண்டுனக்குச்
சாவு!
Browny Dog :-
கொத்தடிமை பாத்தவன்டா!
கோணவாயன் பாத்தவன்டா!
கொத்தாய் எதிரணிகை
கோத்தவன்டா! – பொத்திக்கோ
ஊத்தவாய்ப் பல்லை
உடைப்பதுக்கு முன்;வெறுப்பு
ஏத்துறத நிப்பாட்டி
ஏகு!



அச்சப் படாமல் அடி!



மோடி :-
நண்பா நெதன்யாகு!
நல்லா இருக்கியா?
ஒண்டியா நின்னுநீ
ஓடவிட்ட - சண்டை
தணிஞ்சுதா? இன்னும்
தொடருதா?பா லஸ்தீன்
பணிஞ்சுதா? சேதி
பகர்!
நெதன்யாகு :-
நல்லா இருக்கேன்;நீ
நல்லா இருக்கியா?
பொல்லாரைப் போட்டுப்
பொளந்துவிட்டேன்; – டில்லியில
தில்லாயார் பாம்போட்டான்?
தேடிப் பிடிச்சவனைக்
கொல்லா மலாவிட்டே
கூறு!?
மோடி :-
தேடுதல் போகுது;
தீவிர வாதிகளை
ஆடுகள் போல
அறுத்தெறிவேன்; – கூடுமட்டும்
உள்ளூர் துரோகிகளை
உன்போல் கருவறுத்துத்
தள்ளினாத்தான் வாராது
தாழ்வு!
நெதன்யாகு :-
சிந்தூர் இரண்டுக்குச்
சிக்னல் கொடுத்துவிடு;
பொந்துதொறும் பூந்து
பொளந்துஎடு; – சிந்திக்கக்
கூடா தினிமேலும்
குண்டுவைக்க; பாகிஸ்தான்
பாடாய்ப் படஅக்னி
பாய்ச்சு!
மோடி :-
இந்த தடவை
இருமடங்கா சேதத்தைத்
தந்துவிட்டுத் தான்நான்
சமர்முடிப்பேன்; – வந்துடிரம்ப்
நிப்பாட்டச் சொன்னாலும்
நிப்பாட்ட வேமாட்டேன்
ஒப்பந்தன் னாணைஅவன்
ஒஸ்ட்டு!
நெதன்யாகு :-
கெடக்கான் மயிராண்டி
கேனையன் ட்ரம்பு
மடப்பயல்ஓ டித்தான்
வருவான்; – படக்குன்னு
நோபல் பரிசுக்கே
நூலா இளைக்கிறான்
ஆபத்தே பார்க்கந்த
ஆள்!
மோடி :-
சீனாவில் வெச்சென்னைச்
செய்யப்பாத் துட்டான்பா!
ஆனானப் பட்ட
அமெரிக்கா; – நானா
இருந்ததால்தப் பிச்சேன்;
இராகுலாய் மட்டும்
இருந்திருந்தா செத்திருப்பான்
இங்கு!
நெதன்யாகு :-
மோப்பம் புடிப்பதுல
மோடிக் கிணையுண்டா?
ஆப்படிக்க உன்போல
ஆளுண்டா? – மூப்பிலும்
இன்னோர் மொசாடாச்சே
என்நண்பன் மோடியின்னு
சொன்னா எவம்மறுப்பான்
சொல்!
மோடி :-
எப்பவோ சொன்னீங்க;
இந்திராதான் கேட்கலே;
அப்பவே போட்டிருந்தா
அல்லலில்லே; – இப்பஎன்
தாலி அறுக்கவரும்
தீவிர வாதிகளின்
சோலிமுடிச் சாத்தான்
சுகம்!
(பாகிஸ்தான் அணுஆயுத சோதனைக்குத் தன்னைத் தயார்படுத்துவ தறிந்த இஸ்ரேல் மொசாடும் இந்திய ராவும் அப்போதைய பிரதமர் இந்திராவிடன் அணு பதனிடும் நிலையங்களைத் தகர்க்க அனுமதி கேட்டனர். இந்திரா வழங்கவில்லை)
நெதன்யாகு :-
த்திஎதிர் கட்சிச்
சனியன்கள் எப்பவும்
புத்தியில் லாமல்
புளுகுவர்; – ஒத்திவெச்சு
எச்சைப் பயல்களை
எங்கேன்னு தேடிப்போய்
அச்சப் படாமல்
அடி!

இறகுப் பந்துவிடு தூது!

 

காற்றில் எழுந்து
கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின்
மண்வீழ்ந்து - தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த
அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண்
ஏகு!
ஏகும் முனமென்
இளநெஞ்சைத் தொட்டுப்பார்
வேகும் அவள்நினைவின்
வெப்பத்தால் - ஆகம்
இழைபோல் இளைத்த
இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென்
றாங்கு!
ஆங்கவளைக் கண்டால்
அருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச்
சேவைசெய் - பாங்காய்ப்பின்
என்னிலையைச் சொல்க;
எழுங்காதல் மிக்குடையாள்
தன்னிலையைச் சொல்வாள்
தளர்ந்து!
தளர்ந்து தனித்துத்
தவிக்கின்றேன்; நீபோய்
வளர்ந்தமுலை மாதை
வரச்சொல் – குளம்வாழ்
மரைமுகத் தாளும்
மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென்
றியம்பு!
இயம்புங்கால் அன்னவளின்
இன்முகத்தை நோக்கு
மயங்கும் விழிகள்;
மருள்வாள்; - தயங்காதே!
நண்டுறை நீர்த்துறையில்
நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில்
உண்டு!
உண்டா எனக்கேள்
உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்;
பின்பென்ன? - பண்டென்
உளங்கள வாடி
உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன்
வந்து!
வந்தாரக் கட்டி
வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர்
தங்குமெனும் - அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி
உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க
நயந்து!
நயந்தேன்; அவளின்
நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை
விளம்பத் - தியங்குமென்
ஆவியுண்ணும் கண்ணாள்
அருகில் இருந்தணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ
தூது!
தூதாக நீயும்அத்
தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதனால்
சொல்லிவைத்தேன் - போதாயோ?
மெல்லப்போ கின்ற
மிறல்பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம்
விரைந்து!
விரைந்துநீ போய்என்
விருப்பம் உரைப்பாய்
கரந்தமனத் தாளவளின்
காதில் - சுரந்துவரும்
வாயெயிற்றின் சாற்றில்
வழுக்கிவரும் சொல்லேயென்
காயத்தை வாழ்விக்கும்
காற்று!
அகரம் அமுதன்

அந்தி ஓவியம்!


கொடுத்துச் சிவந்த
கொடைஞரின் கையாய்
வெடித்துச் சிதறிடும்
வெற்பாய் - தடியால்
அடித்த இடச்சிவப்பாய்
அந்தி சிவக்கும்
படிக்கு நடந்ததென்
ன?
நடந்து கடந்த
நலிவால் கதிரும்
கிடந்து சிவந்து
கிழிய - படர்குருதி
அம்மாஅவ் வந்தியென்பர்;
ஆன்றச் சிவப்பழகு
செம்மாந்த வானின்
சிரிப்பு!
சிரிக்கும் சிலையின்
செழிப்பொடு செம்மண்
பரப்பின் நிறமும்
படர்வான் - விரிப்பழகை
அன்ன மெதுநடையார்
அங்கை மருதாணி
என்னல்செவ் வந்திக்(கு)
எழில்!
எழுமந்திப் போழ்தின்
எழில்சொல்ல ஒல்லா(து)
அழுமென்றன் உள்ளம்
அடடா! - தொழுகின்றேன்
விண்ணில் நிறங்களின்
வெற்றித் திருவிழா
கண்முன் தெரிகின்றக்
கால்!
காலைக் கதிர்வளர்ந்து
மாலை தனில்முதிரச்
சோலைப் பழச்சிவப்பாய்த்
தோற்றமுறும் - ஆலைபடு
செங்கரும்பின் தீஞ்சாறாய்ச்
சிந்தும் நிறப்பொழிவால்
அங்கரும்பும் அந்தி
அழகு!
அன்றொருத்தி பிய்த்தெறிந்த
அம்கொங்கை யால்மதுரை
நின்றெரிந்த காட்சியினை
நேரொக்கும் - என்றென்றும்
கீழ்வானம் பிய்த்தெறியும்
செங்கதிரால் மேல்வானம்
பாழ்பட்டு வெந்தழிதல்
பார்!
பாராண்ட பத்துத்
தலைவேந்தோ கீழ்வானம்?
சீரான் இராமன்போல்
செங்கதிரைப் - போராடி
மீட்ட உடன்தீயின்
மேலேற்றிப் பார்க்கிறதே
மீட்டுவந்த மேல்வான
மே!
மேனி கருகாமல்
மேலெழுந்த சீதையைப்போல்
வானில் கதிர்காலை
வந்தொளிரும்; - கானில்
கடுந்தீயை மூட்டுகின்ற
காற்றெனவே மேகம்
தொடுமந்தித் தோற்றத்தில்
தோய்ந்து!
தோயுங் குருதியுடன்
தொப்பென்று வீழ்கின்ற
காயுங் கதிரவனைக்
கண்டவுடன் - தாயும்
கழுகதன் குஞ்சுமெனத்
திங்களும் மீனும்
எழுகின்ற அந்தி
எழில்!
எழிலந்தி வானத்தில்
ஈழத்தைக் காய்ச்சி
வழிந்தோட விட்ட
வகையாய்ச் - சுழித்தோடும்
தேன்பாகின் ஆறாய்த்
தெறிக்கும் நிறந்தேவர்
கோன்பாருக்(கு) ஈந்த
கொடை!

உறவு!


விழுதெனவே நமைத்தாங்க
விழைவதுதான் உறவு; -நாளும்
பழிபேசிப் பரிகசிக்கும்
பண்பதுவா உறவு?
இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு; -வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?
இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு; -கையில்
இருப்பிருக்க இன்புறவே
இணைவதுவா உறவு?
வற்றிவிட்ட குளத்துடனே
வாடும்புல் உறவு; -நீர்மேல்
பற்றுவைத்துப் பறந்துபோகும்
பறவைகளா உறவு?
காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு; -நெஞ்சில்
மாசிருக்க முகத்தளவில்
மலருவதா உறவு?
அகத்தளவில் கலத்திருக்க
அமைவதுதான் உறவு; -இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?
கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு; -வானில்
இருளகன்றால் ஒளிந்துகொள்ளும்
விண்மீனா உறவு?
கண்ணிமையாய் அருகிருந்து
காக்கவேண்டும் உறவு; -அன்றிப்
புண்ணெனவே வலிதந்தால்
பூணவேண்டும் துறவு!

அவன் கவியிலையாம்!


அவன் -
ஏடகம் நடத்தும்
நாடகம் என்பது -
தவ்வித் தாவும்
நவ்வியை ஒத்தது...
விருத்தம் காணும்
அருத்தம் என்பது -
தண்டகம்
தண்ணீரில் வைத்து
முகம் காட்டும்
முண்டகம் ஒத்தது...
அவன் -
கன்னல் பற்றிக்
கவிதை கழறினால் -
கேட்போர்
காதுகள் இனிக்கும்;
விழிநீர் பற்றி
விருத்தம் விரித்தால் -
காண்போர்
கண்கள் பனிக்கும்;
தீயைப் பற்றிச்
செய்யுள் செய்தால் -
படிப்போர் பார்வை
பற்றித் தகிக்கும்;
பனியைப் பற்றிப்
பாக்கள் புனைந்தால்
வெந்த நெஞ்சம்
வெப்பைத் தணிக்கும்;
அவன் -
தவழும் வயதிலும்
சந்தம் தீட்டியவன்
விருத்த வயதிலும்
விருத்தம் விரிப்பவன்!
அவன் தீட்டினால் -
கலிப்பா
களிப்பாகும்...
ஆசிரியப்பா
ஆச்சரியப்பா ஆகும்!
பாவலம் கொழிக்கும்
பா நிலம் -அவனுள்
பாவலம் இல்லையெனப்
பகருவதோ -இருகண்கள்
குருடான
கோகுலம்?
நூல்இடை ஒசியும்
நுண்தமிழை -
நூல்நடை கொண்டு
நுகர்ந்தானை -
கவியிலை எனக்
கழறுவதோ -ஓர்
கால்நடை?
பழத்தைப் பற்றிப்
பழிசொல் பகர்வது
காலத்தால் கனியாக்
காயா?
ஞாயிறைப் பற்றி
நவைகள் நவில்வது
ஞானத்தால் தெளியா
நாயா?
எட்டைப் பற்றி
எள்ளித் திரிவது
எட்டிற் சிறிய
ஏழா?
இரத்தம் பற்றி
இழிந்தன உரைப்பது
சிரங்கில் வழியும்
சீழா?
வாளியால் முகப்பதால்
வங்கம் வற்றியடுமா?
ஈயிறகின் காற்றுப்பட்டு
இமயம் இற்றிடுமா?
கவி
குன்றேறி உலுக்குவதால்
ஆடாது -
அசையாது புவி!
மறம்
மல்லுக்கு நிற்பதால்
அடங்காது -
ஒடுங்காது - அறம்!
தீவட்டி கொண்டு
தீய்ப்பதால்
வாரணம்
வண்ணம் மாறா; -அவ்
வண்ணம் மாறா
வாரணம் நேரன்றி
பாத்தென்றல் என்னும்
பசுந்தென்றலே - நீ
வேறா?

நூல் வெளியீடு ஒன்றில் நிகழ்த்திய கவிதையுரை...

 நூல் வெளியீடு ஒன்றில் நிகழ்த்திய கவிதையுரை...

=
அன்பன் என் பேர் அமுதன்
ஆர்ப்பதெல்லாம் சீர் மரபே!
தென்னவன் நான் செந்தமிழின்
சீரெடுத்து - மன்னும்
குணத்தமிழர் மாமரபு
குன்றாது உமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன்
வந்து!
=
முகில்
முருகன்
கன்னற்
கவிதைக்காரன் என்றிருந்தேன்;
என்னளவில்
இன்று, இப்போது
கொஞ்சம்
குறும்புக்காரன் என்றறிந்தேன்!
நானோ -
பரணி பாடும்
பக்குவம் கொண்டவன்;
என்னை -
கலவியல் பாட
கட்டளை இடுக்கிறான்!
நானோ -
முரசம் கொட்டும்
மூர்க்கம் கொண்டவன்;
என்னை -
சரசம் சொட்டச்
சாணை பிடிக்கிறான்!
அகநானூறைப் பேச
புறநானூறை அழைக்கிறான்;
அகிம்சையை பேச
ஹிம்சையைக் கேட்கிறான்!
ஆத்திகம் பேச
நாத்திகத்தை நாடுகிறான்;
இச்சிப்பூ பற்றி
இரண்டொரு வார்த்தை சொல்ல
இரும்பினை ஏற்பாடு செய்கிறான்!
காமக் கதை பேச
காமனைக் கூப்பிடலாம்…
சாமக்கதை பேச
சன்னியாசியையா கூப்பிடுவது? – இருகை
கூப்பிடுவது?
கூப்பிடுவதுபோல்
கூப்பிட்டு – இப்படியா
அடியேனுக்கு
ஆப்பிடுவது?
நீ -
தீ சுமக்கும் கையில்
பூ திணிக்கிறாய்;
ஈட்டியை எற்றிவிட்டு
ஈர்க்கேந்த பணிக்கிறாய்!
கலப்புப் பால் பற்றிக்
கட்டியம் கூற
கறந்த பாலா?
நினக்கென்ன வஞ்சம் என்மீது?
நீண்ட நெடு நாளா?
ஆகட்டும்…
அகம் - புறம் பேசுவதும்
புறம் - அகம் பேசுவதும்
உலக இயல்பு என்பதால்
ஒப்புகிறேன்;
‘ஒப்பந்தமிட்ட இரவு’ பற்றி
உங்கள் முன்
சீரிய வார்த்தை சில
செப்புகிறேன்!
காதல் -
கொஞ்சம் கவினானது;
காதலினும் போதை தர வல்லதோ
அவினானது?
காதல் -
கசப்பு மருந்து;
இளமைக்கு அதுவேதான்
இனிப்பு விருந்து!
காதல்
விண் நிலவை
விட்டிலென்று நம்பவைக்கும்;
விட்டிலை
விண் நிலவென்று வெம்பவைக்கும்!
காதல் வந்தால் -
பகல் விளக்கும் ஆகும்
அகல் விளக்கு;
அகல் விளக்கும் ஆகும்
பகல் விளக்கு!
நிழலிக்கும் காதல்
நிகழ்ந்திருக்கிறது;
காதல் நிகழ்ந்ததனால்
கவிதை முகிழ்ந்திருக்கிறது!
கவிதை -
அளவிற் சிறிய மின்மினி;
அர்த்தம் புரிந்தபின்
அண்ணாந்து பார்க்கவைக்கும்
ஆகாய மணி!
கவிதை –
வாக்கிய விறகிருக்க
வார்த்தை சுள்ளி பொருக்கிக்
கூடு கட்டும்;
உள்ளே உள்ளே –
கற்பனை -
கருத்துக் கம்புசுற்றி
வீடு கட்டும்!
கவிதை -
கூழாங்கல்லை வைரமென்னும்;
கூறிய பொய்யைக்
குறுக்கு விசாரணை செய்ய முனைகிறதா
வையமின்னும்?
பேசுகிறது இந்நூல் – காதல்
பெருகுதலை;
காமன் அம்பு பட்டு
காயம் கருதுதலை;
கங்குல்கள் தோறும்
கன்னி
மஞ்சத்தில்
மருகுதலை;
தனிமை தரும்
தவிப்பில்
உள்ளம்
உருகுதலை;
காரணம் யாதெனில்
காதல் இது
ஒருதலை; - அல்ல
இருதலை!
பக்கங்களின் அளவில் – இது
சின்ன நூல்…
ஆயினும் – என்
அனுமதியோடு
திங்கள் உலாவும் - என் இரவிரண்டை
தின்ன நூல்!
என் தொலைந்து போன
இளமை நாட்களைத்
தேடிப் பிடிக்கச்
சொன்ன நூல்!
புத்தகத் தலைப்பே – என்
புத்திக்குள் பூச்சொரிகிறது…
உள்ளே கொஞ்சம்
ஊன்றிப் படிக்கிறேன் – அப்பப்பா!
மோகத்தில் என்
மூச்செரிகிறது – மயிர்
கூச்செரிகிறது!
இவர்
பக்கத்திற்குப் பக்கம்
கவிதைக்குக் கவிதை – காதலைப்
பதியமிட்டிருக்கிறார்;
வரிக்கு வரி
வார்த்தைக்கு வார்த்தை – ஏதோ
வசியமிட்டிருக்கிறார்!
வாசித்தேன் வாசித்தேன்
இந்நூல்
என்னுள்
ஏதோ செய்தது;
வாசித்தபின் யோசித்தேன்
இந்நூல்
என்னை
ஏதேதோ செய்தது…!
கோடிகளைச் செலவழித்து
மனிதன்
இன்னோர் உலகத்தில் வாழ
இயன்றுகொண்டிருக்கிறது
விஞ்ஞான வளர்ச்சி;
காலணா செலவின்றி
கண நொடியில்
அண்டம் கடத்தி
ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுகிறது
பதின்ம வயதில் எழும்
ஹார்மோன் கிளர்ச்சி!
காதல்
கண்களில் பிறப்பதாலோ என்னவோ
அதிகம்
கனவுகாண வைக்கிறது – கூடவே
விழிகள் இரண்டையும்
வெந்நீர் சிந்த வைக்கிறது!
காதல்
இதயத்தில் வளர்வதாலோ என்னவோ
இடையறாமல்
துடிதுடிக்க வைக்கிறது;
இடையிடையே
இயங்குவதை நிறுத்தி
உயிர்வரை நைக்கிறது!
காதலில் மாட்டுபவன்; -
கவிதைகள் தீட்டுபவன்; -
இருவரிடமும்
எங்கும் எப்போதும்
அகலாதும் அனுகாதும்
அனல் காய்வார் போல
இருத்தல் நலம்;
இருவர்க்கும்
ஊரவர் காதுகள்தான்
உற்றதோர் பலம்!
பேசத் தொடங்கு முன்
பேச மாட்டாரா என்றிருக்கும்;
உளறத் தொடங்கிய பின்
ஓய மாட்டாரா என்றிருக்கும்!
தோழி நிழலியிடம் – இந்தத்
தொல்லை இல்லை;
தேவை அறிந்து பயன்படுத்துகிறார்
தீந்தமிழ்ச் சொல்லை!
காதல் கொண்டவன் மனம் -
கவிதை எழுதச் சொல்லி அடம்பிடிக்கும்;
கவிஞர்கள் வரிசையில்
கால்கடுக்க நின்று இடம்பிடிக்கும்!
இங்கே நிழலியும் -
கவிதைத் தேரின் வடம்பிடிக்கிறார்;
கவிஞர் வரிசையில் இடம்பிடிக்கிறார்!
நிழலியின் கவிதை
நெடுகிலும் -
உப்புக் கண்ணீர்
உறைந்து கிடக்கிறது;
இதயக் குமுறல்
எழுந்து நடக்கிறது!
=
எழுத்துகள் மேல்நீச்சடிக்க
எண்ணங்கள் உன்னில்
மூழ்கிக் கிடக்கிறது….
இது நிழலி
இயம்பியது – என்
நெஞ்சில்
நிரம்பியது…
=
‘புரண்டு படுத்தேன்
இரவைச் சுற்றினேன்
புத்தகம் தேடினேன்
என்
மங்கிய
இருள் கலைத்து
விடியல் வந்த பின்னும்
உன் நினைவுகளின் போராட்டம்
இன்னும் முடிந்த பாடில்லை!’
இதுவெல்லாம்
இதுவெல்லாம்
யூசுவல் வரி;
பின்வரும் வரியே
நிகழ்கால எலி பிடிக்க
நீட்டிய பொறி!
‘வெடித்துச் சிதறிய
நிலத்தைக் கண்ணீரால்
நிரப்பும் விவசாயி போல
மரணித்துப் போனேன்’…
இப்படித்தான்
நிகழ் கால
நூலெடுத்து
நேர்த்தியான ஆடையைத்
நெய்து கொள்ளும் கவிதைத் தறி;
என்பதறி!
சமகால நிகழ்வை – காதல்
தனக்கு உவமையாய்
சாதித்துக்கொள்ளல்
சாத்தியம்;
தேவையெனில்
தேர்ந்தெடுத்துக்கொள்ளும்…
பண்ணிற்கு - எல்லாமே
பாத்தியம்!
=
நீருக்குள் நீராய்த்
திரிகிறது
என் நீர்த்துப் போன
மௌனம்!
இது நிழலி!
இது படிப்பதற்கு நன்றாயுள்ளது போலத் தோன்றினும்
இதில் ஓர் முரண்தொடை முகிழ்ந்து கிடக்கிறது.
வார்த்தை நீர்த்துப்போனால்
மௌனம் அங்கே முளைகட்டும்;
மௌனம் நீர்த்துப்போனால்
வார்த்தை அங்கே களைகட்டும்!
கவிதை - வாசிக்கிற போது
காட்சிகளாய் விரியவேண்டும்;
விரிந்து
விரிந்து
அனேக விஷயங்களை
அகத்தில் சொரியவேண்டும்;
இத்தகைய கவிதை
ஏட்டில் மட்டுமல்ல
எண்ணத்திலும்
எழுந்துநிற்கும் யாண்டும்!
அடுத்து வரும்
அமுத வரி
இளம் கவி நிழலி
எழுதியது…
இத்தகைய வரியை
எத்தனை முயன்றும்
கலங்கப்படுத்த முடியுமோ
காலப் புழுதியது?
‘ஒவ்வொரு பக்கத்திலும்
என் பெயருக்குப் பின்னால்
விட்டு வைக்கிறேன்
உன் பெயருக்கான
இடைவெளியை…’
இப்படி
காதல் நிறைந்த வரிகளை
காமம் கடந்த வரிகளை
நிழலி
நிகழ்த்தவேண்டும் என்பது - என்
நெஞ்சக் கிடக்கை;
வழங்குவார் என்ற நம்பிக்கையோடு
வாழ்த்துகிறது என் வலக்கை!
=
‘நூறு பக்கங்கள்
தாண்டிவிட்டன
உன் பெயரைத் தவிர
எதையும்
எழுதத் தெரியவில்லை’
என்கிறார் நிழலி;
இருட்டு வண்ணக் குழலி!
ஊரார் உறிகளை
ஒருகை பார்த்துவிட்டு…
திருடிய வெண்ணையை
தின்று தீர்த்துவிட்டு…
ஒன்றும் அறியாதவன்போல்
நின்றானே கண்ணன்;
எல்லாம் எழுதிவிட்டு
எதுவுமே எழுதவில்லை
எனும் நிழலிக்கு
அவன் சின்னன்!
மேலும் நிழலி
விளம்புகிறார்…
“எல்லோரும் சொல்கின்றனர்
சமுதாய கருத்துகளை
எழுத வேண்டுமாம்
என்னுள் உள்ள
உன்னைப் புரட்டிப் புரட்டி
எழுதிக்கொண்டிருக்கும்
என் எழுதுகோலும்
நானும்
எந்த சமுதாயத்தில்
இணையலாம் என்று
யோசித்துக் கொண்டிருக்கிறோம்” - என்று.
ஆம்
காதல் வந்தால்
எதையும் நெருங்கவிடாது;
யாரையும் ஒட்டவிடாது!
அவன்
அவள் - தவிர
எவையும்
எவரும்
அவர்களுக்கு அன்னியம்;
நத்தைக்கூடு
நல்கிவிடும் – அவர்களுக்கு
வானமும் வழங்கா
வன்னியம்!
காதலிப்பவன்
சிந்திப்பதெல்லாம் சித்தாந்தம்…
விளம்புவதெல்லாம் வேதாந்தம்…
அதற்குப்
பொருளுரையோ
பொழிப்புரையோ கேட்டுப்
புலம்பக்கூடாது;
கண்ணீர் கொண்டு
கன்னங்களை அலம்பக்கூடாது!
அந்த வகையில்
அருமைத் தோழி
நிழலி
நிகழ்த்தியதெல்லாம் கவிதை;
இன்றுபோல் என்றும்
இனிய கவி தை – என
வாயாற
வாழ்த்துகிறேன்.
இப்போது -
விடைபெற வேண்டி
உங்கள் முன்
சிரம் தாழ்த்துகிறேன்.
நன்றி. வணக்கம்!