பளிங்கு போன்ற மேனி;
சேலை ஒக்கும் கண்கள்;
சிலந்தி வலையாய்ப் பார்வை;
மாலை வானின் மஞ்சல்
மங்கை மேனி வண்ணம்;
நூலை ஒத்த இடைமேல்
நுங்குகள் இரண்டு தங்கும்!
சோலை என்ற ஒன்றைச்
சுழலும் இடையில் வைத்துச்
சேலை சுற்றிய தென்றல்;
தெருவில் நடக்கும் மின்னல்;
காலையில் தோன்றும் நிலவு;
கண்முன் உலவும் கனவு;
ஆளைக் கொல்லும் அழகி;
அவள்தான் என்றன் மனைவி!
பூமன் வடிக்க ஒன்னாப்
பூவை அவளை என்றன்
மாமன் வடித்தான் நன்றாய்;
மலரம் பேந்தி நிற்கும்
காமன் என்னும் கள்வன்
கரும்பு வில்லை உடைக்க
மாமன் எனக்குத் துணையாய்
மஞ்சம் சேர்ந்தாள் மங்கை;
தேடிக் காற்றும் தோற்கும்
சேரும் எம்மிடைப் பிளவை;
நாடிக் காமன் நிற்பான்
நங்கையின் மலர்விழி அம்பை;
ஆடிக் காற்றாய் நானும்
ஆடும் போது நாணம்
கூடிக் கண்கள் மூடும்;
கூந்தல் போர்வை ஆகும்!
இதழில் இதழைச் சேர்ப்பாள்;
இன்பத் தேனை வார்ப்பாள்;
குதலை மொழியால் என்னைக்
கொஞ்சம் கொன்று தீர்ப்பாள்;
எதையோ சொல்லும் கண்கள்
என்னைத் தின்று தீர்க்கப்
புதிதாய்ப் பிறந்தேன் நானும்
பூக்கும் இன்பத் தாலே!
அகரம் அமுதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக