துயர்சொல்லும் ஓர் கடிதம்
உயிர்சுமந்த கடிதமல்ல –என்
உயிர்கறைந்த கடிதம்!
அடுக்கிவைத்த ஆசைகளால்
அரும்பும்கண் ணீரெடுத்து
அடிநெஞ்சின் துயரத்தை
அணிந்துகொண்ட கடிதமிது!
தனியே அமர்ந்துகொண்டு
தன்னிலை மறந்துவிட்டு
தலைமகள் நலங்காண
தலைவன்? எழுதுகிறேன்!
சங்கடம் உனக்கிருக்கும்
காரணம் பிணக்கிருக்கும்
பிணக்குகள் இருந்தபோதும்
படிக்கவும் மனமிருக்கும்
கண்ணீர் கரையுடைத்துக்
கடித்ததை நனைக்கவேண்டாம்
காரணம் இருக்கிறது –கடிதம்
கண்ணீரில் எழுதியது!
வார்த்தெடுத்த சிற்பமென
வளர்ந்துவரும் நிலவுமென
மொட்டவிழ்ந்த மலர்சூடி
மங்கைநீ நடந்துவர
காமம் தலைக்கேறும்
காதல் சிறகடிக்கும்
கற்பனை மரம்தழைத்துக்
கவிதைப் பூப்பூக்கும்
புதுப்புது இரவு –அதில்
புதுப்புது கனவு
புதுப்புது கவிதை –தந்தது
புது உறவு
புத்துயிர் பெற்றவனாய்ப்
பூத்திருந்த வேளையிலே
வறுமை உருவெடுக்க
வளைகுடா சேர்ந்துவிட்டேன்
“காதலா! சென்றுவா!
காலனே வரினும்கலங்கேன் –நான்
கடைவிழு உறங்கேன்” என்றாய்
கனவுகளை மறந்துவிட்டு
இரவுதனை இழப்பதற்கா?
காதலனை மறந்துவிட்டு
காசுள்ளவனை மணப்பதற்கா?
உன்திருமண செய்திகேட்டு
உயிர்துறந்த சடலம் –நான்
உன்விழியுள் புதைந்து
உயிர்தேடும் படலம்!
புனைந்தேன் புனைந்தேன்
புதுப்புது கவிதை
அத்தனைக்கும் உயிரில்லை
தின்றுதீர்த்தது கழுதை!
நீ
மாற்றான் தோட்டத்து
மல்லிகை அல்ல –என்
மனத்தோட்டத்தில் பூத்து
மாற்றானிடம் மணம்போனவள்
நெஞ்சில் உனைச்சுமந்து
நிசத்தில் சுமையாய்ஆனேன்
நினைவலைகள் அறுந்துவிட
நித்திரை மறந்துபோனேன்
அன்றென்னைக் காணாஉன்னிடை
இளைத்தது ஓரளவு
இன்றுன்னைத் தொலைத்து
இளைத்தேன் நூலளவு
இறுதிமூச்சை உரையில்வைத்து
உத்தமிக்கு அனுப்புகிறேன்
சத்தமின்றி முத்தம்தந்து
திருப்பியதை அனுப்பிவிடு!
அகரம் அமுதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக