செவ்வாய், 9 மார்ச், 2010

தேர்ந்தவர் வாழ்வினில் சேர்ந்திடும் மகிழ்ச்சி!

கூழும் மொர்மிள காயுமே உணவெனக்
குடிசையில் வாழ்வோரைச்
சூழும் மிக்கதோர் மகிழ்ச்சியிற் களவிலை
தூக்கமும் வந்தேகும்
பாழும் செல்வமே பாரினில் மேலெனப்
பார்த்திடும் பேர்கட்கு
வாழும் நாட்களில் மகிழ்ச்சியும் அமைதியும்
மனத்தினில் தங்காதே!

அன்பு பூப்பதும் அறத்தொடு மனிதமும்
அகத்தினில் வைத்தாரை
என்பு தோலுடை இறையெனப் போற்றுவார்
இன்பமும் நிலைகொள்ளும்
பொன்பு கழ்செயும் என்னுமோர் கொள்கையில்
பொழுதினைக் கழிப்பார்க்கு
பண்ப ழிந்திடும் பணத்தினைப் பற்றிடப்
பறப்பார் மண்மேலே!

தேங்கு நீரிலே பாசியும் நாற்றமும்
சேர்ந்திடும் நிலைபோலாம்
தேங்கு செல்வமும் தீங்கினைச் செய்வதைத்
தேருதல் உயர்வாகும்
வீங்கு தொந்தியும் விரும்பிய செல்வமும்
விளைத்தடும் எந்நாளும்
தீங்கு நன்றிதைத் தேர்ந்தவர் வாழ்வினில்
சேர்ந்திடும் மகிழ்வன்றே!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக