நீள்கதிரும் விழியிலுண்டு
பலவும் அறிவிலுண்டு
பண்பாடும் மொழியிலுண்டு
கலவும் கற்றறிந்து
கல்லார்க்கு எடுத்துரைப்பான்
சிலவும் பலவுமென
செந்தமிழில் கவிபடிப்பான்!
விலகும் மேகங்காண்
வீரனவன் மேனியது
உலவும் மின்னல்காண்
உள்ளங்கை ரேகையது
தளரும் கொடிகள்காண்
தலைமகனார் கேசமது
புலரும் வானங்காண்
புலவனிவன் விழிகளது
அளகம் கொண்டிருந்தால்
அளகேசன் திருவுருவம்
திலகம் கொண்டிருந்தால்
தையலவள் மறுவுருவம்
உலகம் கண்டிருந்தால்
ஊருக்குத் தலைவனிவன்
கலகம் செய்தறியான்
கணேசன் பெயருடையான்!
அகரம் அமுதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக