சனி, 28 பிப்ரவரி, 2026

வேணாம் நமக்கெதுக்கு வம்பு!

 

ஷீலா -

 

அக்கா அலமே(லு)! அறிஞ்சேன் ஒருசேதி;

நிக்காம‍ப் போனா நியாயமா? – ஒக்காந்தால்

கூறுவேன் காதில்; குறிப்பறிந்து கொண்டாயேல்

சேருமே ஊர்காதில் சென்று!

 

அலமேலு

 

அப்படி என்னடி அந்தரங்கம்? என்னிடம்

ஒப்புவி ஊரே உனைவணங்கும்; – இப்பநான்

போய்ப்பார்க்க வேறு பொழப்பில்லை; உன்னுடைய

வாய்பார்த் திருக்கேன் வழங்கு!

 

ஷீலா -

 

கூத்தப்பன் பேரன் குமர குருவுக்கும்

காத்தாயி பேத்திக்கும் காதலாம்; – ஆத்தோரம்

நாணலாம்; ஊரார் நடமாட்டம் ஓய்ந்தபின்

காணலாம் லீலை களாம்!

 

அலமேலு -

 

சீவி மினுக்கிச் சிலுக்கு நடைநடந்து

தேவிவரும் போதே தெரியுமடி; – நாவிதமாய்ப்

பேசி எவனாச்சும் பேதலிக்க வைப்பான்னு;

போய்சிக்கிட் டாளாஅப் பொண்ணு!?

 

ஷீலா -

 

அம்புவிட்டுக் கண்ணை அலையவிட்டுப் பெண்ணவளை

நம்பவச்சுப் பின்னால் நழுவிவிட்டான்; – நம்ம‍ஊர்

தெக்கால வீதி சிவனாண்டி சின்னமவன்

முக்காலும் சோலி முடிச்சு!

 

அலமேலு -

 

அவனுக்கு முன்னால் இவனா? இரண்டோர்

தவறுமே செய்யா தவனா? -  அவள்கெட்டக்

கேட்டுக்குக் காதல் கிறுக்கல்கள் ரெண்டா?ஊர்

நாட்டுக்குள் இஃதா நடப்பு?

 

ஷீலா -

 

அறிஞ்ச வரைசொன்னான் அக்கா! அடநான்

அறியா ததையா அளந்தேன்? – நெறிமறந்தும்

காணாத ஒன்றைக் கதையாத் திரிப்பேனா?

வேணாம் நமகெதுக்கு வம்பு!

 

அலமேலு -

 

அலர்பேச நாமதான் ஆளா? அதுக்குச்

சிலருண்டே ஊரிலே ஷீலா! – குலசாமி

கும்பிட்டுப் பார்ப்போம் குடும்பத்தைப் போகையிலே

எம்புட்டுப் போறோம் எடுத்து!?




வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

 

பையன் 1

 

யாரோ கொடுக்க எவரோபோய் வாங்கிவர

ஊரோடு நாம்கூடி உட்கார்ந்து – மாரோடு

வண்ணக் கொடிகுத்தி வைப்போம் வணக்கத்தை

எண்ணிச் சுதந்திரத்தை ஏற்று!

 

பையன் 2

 

என்னா சுதந்திரம்? எங்கே பறந்திடும்?

பொன்னாள் இதாலா பொறந்திடும்? – சொன்னால்கேள்

என்னிடம் உள்ளதில் இந்த‍ஒரு சட்டைதான்

இன்னும் கிழியா திருக்கு!

 

பையன் 1

 

குண்டூசி குத்திக் குடிமுழுகிப் போகாது

கண்டஞ்சிக் கத்திக் கதறாதே; – கொண்டாடி

ஆரஞ்சு மிட்டாய்கள் அஞ்சாறு வாங்குகிற

நேரம் வரையணிவோம் நெஞ்சு!

 

பையன் 2

 

கொடியேத்தி வச்சாக் குறைந்திடுமா நம்ம

மடியேத்தி வச்ச வறுமை? – அடியாத்தி!

கொண்டாட்டம் போட்டுக் கொடிகுத்திக் கொண்டால்நம்

திண்டாட்டம் போய்விடுமா தீர்ந்து!?

 

பையன் 1

 

நாலாப்புக் கற்றதுக்கே நல்லாத்தான் சாடுகிற

பாலாறே ஓடுமென்ற பாவிகளை; – கோலாறே

நாட்டுக் கவங்கதான்; நாம்படிச்சு முன்னேறி

வீட்டுக் கனுப்புவோம் வென்று!

 

பையன் 2

 

கனிம வளங்காக்கக் கஞ்சாவை நீக்க

இனிமதுவே இல்லா திருக்கத் – தனித்திரவில்

பெண்போகச் செந்தமிழன் பேராட்சி யைநிறுவிப்

பண்பாடு காப்போம் படித்து!

 



வியாழன், 26 பிப்ரவரி, 2026

பீக்குண்டி யான பிறகு!

நிக்காமப் போகிற கக்காவை நிப்பாட்டி

வக்காளி நாங்கஇப்போ வைக்கணுமா? - தொக்காகப்

போச்சாஎம் போர்வீரம்? போக முடியலையே

மூச்சாவைக் கூடத்தான் முன்பு!

 

பெத்தாம் பெருங்கப்பல் பேருக்கே; ஆய்போகக்

கொத்தாய்நிற் கின்றோம் கியூவிலே – செத்தாலும்

இந்தப்போர் வேலைக்(கு) இனிவரக் கூடாது;

குந்திச்சா கின்றோம் குதம்!

 

அக்கப்போர் பண்ணும் அமெரிக்கப் கப்பலிலே

க‍க்காப்போர் ஒன்னு கதிகலக்க – எக்கணமும்

சீறுதே எங்கள் சிறுநீர்; கழிவறை

நாறுதே கப்பல் நகர்த்து!

 

ஆய்போக ஆகா அமெரிக்கப் போர்க்கப்பல்

போய்ப்போய்ஈ ரானுடனா போர்வெல்லும்? - சேய்நின்று

சூர்காட்டு மன்றிச் சுடாதுஇக் கப்பலைப்

பார்பார்த்தும் அச்சப் படாது!

 

போய்க்குண்டு போடப் புறப்பட ஆகிடுமா?

வாய்ச்சண்டை போடுகிற வல்லரசே! – பாய்மார்தம்

மூக்கறுக்க ஆகிடுமா? முட்டிதேய நேர்ந்திடுமா?

பீக்குண்டி யான பிறகு!?

 

குண்டிக்குப் பின்னால் குடைகிறதே; செய்திடுவோம்

சண்டைக்கு முன்னால் சமாதானம் – தண்டிக்க‍க்

க‍க்கூஸே எங்களின் காலனாய் ஆனதனால்

அக்கூச்சம் கொல்கிறதே ஆள்!





புதன், 25 பிப்ரவரி, 2026

 கெத்தென்பார் இந்தக்

கிழவனை; ஆனால்நான்
வெத்தென்பேன் இந்த
விருத்தனை; – செத்தும்
செருப்படி வாங்கும்
தெலுங்கனா நல்ல
உருப்படி? தூர
ஒதுக்கு!

 எட்டுக் கழுதைவய(து)

எட்டிபின் நாம்செய்யும்
குட்டிக் குறும்பும்
குறும்பாமோ - எட்டி
அழைப்பு மணியடித்து
ஆங்கொளியும் பிள்ளை
இழைக்கும் குறும்பே
இனிது!

ஓசைவாய் அன்பே உரை!

 

ஆண்:-

ராவுணவு என்ன? ரவையா?சப் பாத்தியா?

நோவுதுன்னு சொல்லியே நோன்பிருப்பா? – தேவுடா!

தோசைக்குச் சட்னியா? சூடுசெய்த சாம்பாரா?

ஓசைவாய் அன்பே! உரை! 1

 

பெண்:-

மல்லிகைப்பூ இட்லி மணக்கும்தேங் காய்ச்சட்னி

நல்லபடி செய்துதர நான்முனைந்தேன்; – மல்லிகைப்பூ

வாங்கிவந்த மாமனுக்கு வந்தருந்த வாய்ப்பிருக்குத்

தேங்கியுண்டு செவ்விதழில் தேன்! 2

 

ஆண்:-

வம்பைப்பூப் போல்கிள்ளும் வைபவமே, நீவார்க்கும்

தும்பைப்பூ இட்லி தொடுகையிலே; - கும்பிக்கும்

ஓவ்வாமை இல்லை; செரிமானச் சிக்கலில்லை;

செவ்வாழைத் தண்டே!வாய் சேர்! 3

 

பெண்:-

தோளிலென்னைத் தூக்கினால் தோசையெங்கு வார்ப்பது?

தாளிலுன்னால் மின்சாரம் தாக்குது; – வாளிகொண்டு

மோகத்தை நீயிறைக்க, மொத்த‍உடல் நானிளைக்க,

தாகம்தீர்ந் தாலும் தவிப்பு! 4

 

ஆண்:-

மணக்கின்ற பேச்சால் மனங்கவரு கின்ற

குணவதி!வா! சேர்ந்து குளிப்போம்; - உணவைக்

குடற்பசிக்குப் பின்னே கொடுக்கலாம்; முன்னே

உடற்பசிக்குத் தாராய் உனை! 5

 

பெண்:-

வாய்ப்புக் கிடைத்தால் வகையாய்ச் சுவைக்கத்தான்

பாய்க்கழைக் கின்றாய் பரவசமாய்; – வாய்க்குணவு

போடுங்கள் என்றுநான் பொங்கி வடித்தளித்தால்

நூடுல்ஸ் இடையினிலே நுங்கு! 6

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

ஜானகி! சங்கோ ஜமா?

ஜானகி! சங்கோ ஜமா?


உன்வாசம் வேண்டி உயிரை எடுக்கிறது

தன்வாசம் போதாத் தளிரிளம்பூ; - என்றன்

சிபாரிசை வேண்டிச் செருமிடுது; தன்னின்

அபாக்கியம் சொல்லி அழுது!


அந்திவான் கூட அடம்பிடிக்கும் உன்கன்னம்

தந்தநா ணச்சிவப்பைத் தான்பெறவே; - சொந்தமாய்

உன்குளிர்ச்சி வேண்டி ஒருகாலில் ஊதைநிற்கும்

தன்குளிர்ச்சி மொத்தம் தவிர்த்து!


'ஏழாங்கல் ஆட எடுத்துக்கொள் என்னுடைய

கூழாங்கல், மாற்றாய்க் கொலுசுகொடு' - தாழாத்

தலைதாழ்த்தி ஆறு தவம்கிடக்கும்; தண்ணீர்

அலைத்தூது விட்டே அலுத்து!

தேயா நிலாவுன்போல் தேயா திருப்பதற்கே

ஓயாமல் ஆராய்ந்தே ஓய்ந்த‍நிலா – நேயா!நீ

கேட்டால் ரகசியம் கிட்டத் தருவாள்உன்

வீட்டாள்’, எனப்புலம்பும் வீற்று!


நன்றாய் இசைபூக்கும் நாணற்புல் லின்வகையில்

ஒன்றான மூங்கிலழும் உட்கார்ந்து; - மென்குரலாள்

தன்குரலைத் தந்தால் தரிப்பேன் உயிர்இன்றேல்

இன்குரலாள் முன்னிறப்பேன்’, என்று!

வானவில் பாவம் வளைந்தே ஒடிகிறது

ஏனவள் போல்நிறத்தில் இல்லையென்று; - தேனருந்த

பூவிட்டுன் வீடு புகுந்ததே பொன்வண்டு;

ஏவியது நானா? இலை!


இருக்கின்ற கூந்தல் இருட்டினும்மேல் என்று

திருக்குறள் போலநான் செப்பக் – கருக்கலில்

தூக்கத்தை விட்டே துள்ளிக் குதித்தெழுந்து

ஏக்கத்தில் செத்த திரா!


உன்றன் மனம்குளிர ஒன்றும்நான் இப்படி

நின்று கவிதை நிகழ்த்தவில்லை; - இன்றளவும்

நான‍றிந்த வற்றைத்தான் நன்றாய் எடுத்துரைத்தேன்

ஜானகி! சங்கோ ஜமா?