பழைய கவிதைதான். உணர்வில் என்ன பழையது புதியது? இல்லறம் என்றொன்று இருக்கின்றவரை, கற்பென்ற ஒன்று காப்பாற்றப் படும்வரை, ஆண் பெண்ணை வஞ்சிக்கும் வரை இந்தக் கவிதைக்கு 'என்டே' கிடையாது...
(பெயர் ஊர் தவிர்க்கப் பட்டது) முதலிரவில் உடலுறவைக் காணலைக் காட்சியாக மாப்பிள்ளையும், மாப்பிள்ளையின் தாய்மாமனும்எடுத்துள்ளனர். மணப்பெண் காவல்நிலையத்தில் புகார்.
-செய்தி- (2007 ஆக இருக்கலாம்)
கல்லான கடவுள்களா!
இல்லாம போனீகளா?
கொல்லாம எனைக்கொல்லும்
கொடுமையைக் கேட்டீகளா?
சிறுக்கிக்குப் பிறந்தமகன்
சீமைக்குப்போய் வந்தமகன்
படுத்தென்னைப் படமெடுக்கப்
பழிநேரப் பார்த்தீகளா?
மானத்தைக் காப்பவனே
மானத்தைப் பறிச்சாக்கா
மூன்று முடிச்செதற்கு?
முறையான உறவெதற்கு?
நாலு சுவரெதற்கு?
நள்ளிரவுந் தானெதற்கு?
நாலுசனம் பார்க்குதுன்னு
நாணமுண்டா நாய்களுக்கு?
தாய்காணா இடமெல்லாம்
நாய்காண விட்டேனே...
வேசிக்குப் பிறந்தமகன்
மோசத்தைச் செஞ்சானே!
எட்டி இதழ்கடிச்சிக்
கொத்திக் கனிபறிச்சி
முட்டி உயிர்நெரிச்சி
மூனுமுறை ஆனபின்னே...
நான்குகண்கள் தூங்கையிலே
நள்ளிரவும் போகயிலை
மூன்றுகண்கள் விழித்திருக்க
முதல்முதலாப் பார்த்தேனே!
காற்றும் தீண்டாத
கட்டழகு பாகமெல்லாம்
‘காமரா’ மொய்த்ததென்ன?
கண்சிமிட்டிப் பார்த்ததென்ன?
விசுக்குன்னு எழுந்தென்ன?
மேலாடை அணிந்தென்ன?
பொசுக்குன்னு போனவுயிர்
போனவழி மீளலையே!
கத்தி அழுதேனே!
கதவுடைத்துப் பார்த்தேனே!
பொத்தி அழுதேனே!
புலம்பித் தீர்த்தேனே!
உதவிக்கு ஊர்சனம்
ஓடிவரக் கூடலையே!
கதறி அழுதாலும்
‘காமரா’கண் மூடலையே!
தாயைப்படம் பிடித்தபின்னே
தாரமென்னைப் பிடித்தானோ?
தாய்க்குப்பின் தாரமென்று
தாய்த்தமிழில் சொல்கிறோமே!
முக்கோடி தேவர்களே!
மூட்டிய அக்கினியே!
உங்களை சாட்சிவச்சி
மங்கல கயிறுகொண்டேன்...
தாலியே பாசக்
கயிறாச்சே நியாயமா?
வேலியே பயிரை
மேஞ்சிருச்சே சம்மதமா?
தலையெழுத்தே! எனைக்கொன்ற
கொலையெழுத்தே! மாற்றமில்லா
நிலையெழுத்தே! இப்போது
நிம்மதியா சொல்உனக்கு?
ஒசந்துநிற்கும் கோயில்களின்
உள்ளிருக்குஞ் சாமிகளே!
வேளை பார்த்தும்மை
விதிவந்து வளைக்காதா?
சதியே செய்திந்தக்
கதிக்காளாய் எனைச்செய்த
விதிக்கே விதியெழுத
விரலொன்று முளைக்காதா?
அருந்ததி பார்த்தேனே
வருந்துயரம் பார்த்தேனா?
அம்மி மிதித்தேனே
அசிங்கத்தைக் கண்டேனா?
கால்விழுந்து வணங்கையிலே
கள்ளப்புத்தி உணர்ந்தேனா?
மேல்விழுந்து ஆடயிலே
விபரீதம் உணர்ந்தேனா?
படுக்கை எனக்குத்தேள்
கொடுக்கைப்போல் கொட்டியதே...
தேனிலவு எனக்குத்
தீநிலவு ஆகியதே...
எருமை கெடாவேறும்
எமன்வந்து வாய்த்தபின்னும்
அருமை சாவென்னை
அள்ளிக்கொண்டு ஓடலையே...
கருவோடு இருக்கையிலே
கள்ளிப்பால் கொடுக்காம
தொட்டிலிலே கிடக்கையிலே
தொண்டைக்குழி நெரிக்காம
விட்டவளைச் சொல்லோணும்
விடங்கொடுத்துக் கொல்லோணும்
வட்டியொடு முதலாக
வாய்க்கரிசி போடோணும்
கட்டிலிலே சாஞ்சவனே!
கட்டையிலே போறவனே!
பொத்திவச்ச அழகையெல்லாம்
ப்ளூஃபிலிம்மா எடுத்தவனே!
நேரடி ஒளிபரப்பா?
நகலெடுத்த ஒளிபரப்பா?
சின்னத் திரையினிலா?
சினிமா தியேட்டரிலா?
சண்டாளி எம்மானம்
தவணையில் போய்விடுமா?
‘சயனைடு’தின்ற உயிராட்டம்
சட்டுன்னு போய்விடுமா?
நாளைக்கு விடிந்தால்
நாலுசனம் கூடிடுமே...
நாலுசுவர் நடந்தகதை
நான்சொல்ல நேர்ந்திடுமே...
சாயாத கதிராட்டம்
தலைநிமிர்ந்து ஊர்பார்க்க
செய்யாத பிழைக்காக
சிரம்தாழ்த்தி நிற்கணுமே...
உள்ளதை உள்ளபடி
ஒப்பாரி வைப்பேனா?
ஒளிச்சி அதைமறைச்சி
ஒருவாறு சகிப்பேனா?
எமனைப் பெத்துவிட்டு
எம்மேலே ஏவிவிட்டு
சிவனேன்னு மூலையிலே
சாய்ந்துவிட்ட சண்டாளி!
உனக்கொரு மகளிருந்து
உம்மகளைப் படமெடுத்தால்
எனக்கென்ன என்பதுபோல்
ஏக்கெறிஞ்சா கிடப்பாய்?
மஞ்சள் கயிறே
தூக்குக் கயிறாச்சே...
பந்தல் கால்குழியே
பிணக்குழியா மாறிடிச்சே...
இமைவாளி கொண்டிறைத்தும்
விழிக்கிணறு வற்றலையே...
நெஞ்சு இற்றிடுச்சு -அதில்
நெறஞ்சசுமை குறையலையே...
உயிரோட எம்மானம்
உயரத்தில் பறக்கையிலே
பழுதும் கிடைக்கலையே
பரணிட்டு நான்தொங்க!