வெள்ளி, 20 மார்ச், 2009

ஒரு கொள்கையாளனின் குமுறல்கள்!

திரைகடல் ஓடியும்
திரவியம் தேடென்ற
பரம்பரைப் பாட்டிற்குத் தன்னை
பக்குவம் செய்து கொண்டு
இரவு பகலென்றும் பாராமல்
இனிதே உழைத்துயர
திரைகடல் கடக்கும்
தோழர்கள் ஏராளம்!

விழியில் எதிர்பார்ப் புக்களோடும்
வண்ணக் கனவுகளை
மொழியில் ஏற்றியும் வரும்
மனிதர் எண்ணிக்கை தாராளம்!

சூழ்கின்ற வறுமைக்கு மெல்ல
சூடுவைக்கும் நோக்கோடு
ஆழிதனைக் கடக்கும்
ஆடவரும் ஏராளம்!

ஒவ்வொரு குணவான்களும்
ஒன்றுசேரும் பாலைவனம்
வெவ்வேறு திசைப் பறவைகள்
வந்துபோகும் வேடந்தாங்கல்

காலும் அறையுமெனக்
காணிகள் இருந்தபோதும்
நாளும் அதையெண்ணி
நானும் நாடுகடந்தேன்

பாலும் தோற்கும் மனம்
படைத்த பெற்றோருக்காய்
வேலும் தோற்கும் அல்லி
விழித் துணையாளுக்காய்

சிந்திய வியர்வைத் துளிக்காய்
சிலநூறு கைக்குவரும் -அதைச்
சிந்தாமல் சிதறாமல் அனுப்ப
சிறகடித்துக் கடிதம்வரும்

தளிர்கள் அனுப்ப முகத்தில்
தழும்பேறி வரும்மடல்
குளிருக்கும் வெயிலுக்கும்அதுவே
குடையாய் எனைக்காக்கிறது

தொலைதூர உறவுகளுக்குத்
தகர்க்கப்பட்ட மனதினூடே
தொலைபேசி உரையாடல்
தேனினும் தமிழினும் இனிது

நலமா? சுகமா? என
நாலுவரி கேட்டுமுகக்
களையோடு கண்ணுறக்கம்
கனவுகளும் சிறகடிக்கும்

மலரெனப் பூக்கும்முகம்
மறுநாளே மாறிவிடும்
தளிரெனத் தழைக்கும் இன்பம்
தாரகையாய்ச் சிறுத்துவிடும்

களிறுடல் இளைத்துவிடும்
கனவுகளும் குறைந்துவிடும்
பிளிறுகின்ற யானைப்போலே
பாவிமனம் படுத்திவிடும்

காலமது எடுத்துச் சொல்லும்
கட்டளைக்கு அடிபணிந்து
நாளமதை முறுக்கேற்றி
நாளுமெனை வதைக்கின்றேன்

காலமது கறைந்தபின்னும்
கோலமது களையவில்லை
சாலளவு ஆசைகளோ -ஏழ்மைச்
சாக்கடையில் மூழ்கியதே!


அகரம்.அமுதா

3 கருத்துகள்:

  1. //சூழ்கின்ற வறுமைக்கு மெல்ல
    சூடுவைக்கும் நோக்கோடு
    ஆழிதனைக் கடக்கும்
    ஆடவரும் ஏராளம்!//

    //மலரெனப் பூக்கும்முகம்
    மறுநாளே மாறிவிடும்
    தளிரெனத் தழைக்கும் இன்பம்
    தாரகையாய்ச் சிறுத்துவிடும்//

    உண்மைதான்
    தன் ஊரைவிட்டோ ,நாட்டைவிட்டோ வெளிச்சென்று உழைப்பவர் பாடு மிகக் கடுமையானதுதான்.

    பதிலளிநீக்கு
  2. தாயைத் தந்தையைப் பிரிந்து,குழந்தை குடும்பம் இன்பம் அனைத்தையும் இழந்து ஏன் தாய் மொழியையும் முழுதாக பேசமுடியாமல் [ வெளியிடங்களில் வலித்தால் கூட oh mom என்றுதான் அழவேண்டும். அம்மா என்றலறமுடியாது ] இவர்கள் படும் பாடு கடினம் தான். ஆனால் சில வருடங்கள் கழித்து அவர் தம் நாட்டையே பழித்து ஒரே குப்பை கொஞ்சம் கூட நாகரீகமில்லை என சொல்வதுதான் வலிக்கிறது. வெளிநாடு செல்பவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் திரும்ப வருவதில்லை.அந்த மோகத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.இப்படி இல்லாமல் தன் வேரை மறக்காத மரங்கள் மிகக்குறைவு. பெற்றதாயையும் பிறந்த மண்ணையும் மறக்காத சில நல்ல உள்ளங்களுக்கு இந்த கவிதை நினைவு மலர்களை தூவிச்செல்லும்.

    பதிலளிநீக்கு