புதன், 25 மார்ச், 2009

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அமெரிக்காவுடன் இந்தியா அணுவொப்பம் செய்தபோது:-

மின்சாரத் தேவைக்காய் மேற்கின் அடிவீழ்தல்
தன்மானப் போக்கா? தகுமோதான்? -நன்காய்ந்(து)
உணர்ந்தேயிவ் வொப்பம் உதவா தெனத்தேர்ந்(து)
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

நம்பி அவருறவை நாமேற்றுப் பின்னாளில்
வெம்பி விழுவதுவும் வேண்டாமே! -தெம்பால்
திணவெடுத்தத் தோளர்தம் தீயுறவுக் கஞ்சி
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

வல்லார் வகுத்ததே வாய்க்கால் எனவானால்
இல்லாரின் சொல்லோ எடுபடும்? -வல்லார்
பிணக்கின் இலார்க்குப் பெருந்துயரே மிஞ்சும்;
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

மேற்கு கிழக்கென்று மேதினியைத் துண்டாக்கி
மேற்கு கிழக்கையாள விட்டுவிட்டோம் -மேற்கை
இனியும்நாம் நம்பும் இழிநிலை ஏனோ?
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!


அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. மேற்கின் அடிவீழ்தல் இல்லையிது காண்பாயே
    ஏற்கின் கிழக்கும் உயர்ந்திடுமே -மேற்கு
    கிழக்கிரண்டும் கைக்கோர்த்தே வையம் சிறக்க
    அணுவாற்றல் வேண்டும் அறி.

    நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை
    கண்டவரே வந்திட்டார், மாறும் உலகிலிவர்
    வல்லார் இவரல்லார் என்பதெல்லாம் நன்காம்
    அணுவாற்றல் வேண்டும் அறி

    வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க
    பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை
    ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க
    அணுவாற்றல் வேண்டும் அறி

    பதிலளிநீக்கு
  2. பொக்ரான் அணுவாய்வைப் போலென்றைப் பிந்நாளில்
    தக்கார்நாம் செய்யா தடங்கவே -மிக்க
    துணிவோ(டு) அணுவீந்தார் தோகாய் அறிவாய்
    அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

    பதிலளிநீக்கு