செவ்வாய், 10 மார்ச், 2009

கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

மாந்தர் மனத்துன்கண் மாசைப் புறமகற்றி
ஆந்தனையும் ஒப்புரவை ஆங்கமைப்போம்; -சாந்தனையும்
உண்டிக்காய்ச் செய்தொழிலில் தாழ்வே(து) உயர்வேது?
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழியக்
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

ஆயிரமாய் நூல்தேடி அன்றாடம் கற்றாலும்
ஆய்ந்தறியாக் கல்வியினால் ஆவதுண்டோ? -தோய்ந்தறிவும்
நன்கமைய வேண்டின் நறும்பொருள் சேர்நூலைக்
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

தீய்க்குதென்பார் ஆளனிலார்; செக்க(ர்)வரப் பொய்மறைத்தே
மாய்க்குதென்பார் ஆளனுளார்; மாய்ப்பதுவும் -தீய்ப்பதுவும்
தண்ணுற்றே வானில் தவழும் தளிர்நிலவா?
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

துன்பத்தைக் கண்டு துவளாதே! காலத்தால்
இன்பத்தை நல்கி இடம்பெயரும்; -மண்பதையில்
விண்ணற்ற கொப்புலங்கள் வெள்ளணையப் பொய்மறையும்;
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!


அகரம்.அமுதா

2 கருத்துகள்:

 1. நல்ல நன்நெறி அகரம் அமுதா இரண்டு முறை படித்த பின் தான் பொருள்
  தெரிந்தது.
  என்ன செய்ய "ஆயிரமாய் நூல்தேடி அன்றாடம் கற்றாலும்
  ஆய்ந்தறியாக் கல்வியினால் ஆவதுண்டோ?"

  பதிலளிநீக்கு
 2. அறிவுக்குகந்தவை எப்போதும் அவ்வளவு எளிதானப் புரிந்துவிடுவதில்லையய்யா!

  பதிலளிநீக்கு