பாசத்தைப் பொழிந்தஉன்றன்
கண்ணோரக் கதகதப்பில்
காலம்பல வாழ்ந்திருந்தேன்
சிறுவன்என் கைகளிலே
சிறகுகளைக் கட்டிவிட்டு
திரவியம் தேடிவரத்
திரைகடல் தாண்டவெச்சே!
தனிமரமா ஆகிவட்ட
தவிப்பினில் நானிருக்க
"மறந்துட்டியா?" என்றுகேட்டு
மடலொன்று வரைந்தவளே!
உதட்டோடு முத்தமிட்டு
உயிரோடு சேர்த்தணைத்துத்
திகட்டாத அன்புவெச்ச
தாயுன்னை மறப்பேனா?
தடத்தில்தாள் பதியாதுன்
தளிர்த்தோளில் தடம்பதித்து
நடைபயின்று நான்வளர்ந்த
நாட்களை மறப்பேனா?
வயிற்றினில் சுமந்துகொண்டே
வேலைவெட்டி செய்தஉன்னை...
வாயோடு வயிற்றைக்கட்டி
வளர்க்கப் பாடுபட்டஉன்னை...
காலங்கள் மறந்திடலாம்- என்றன்
நாளங்கள் மறந்திடுமா?
நெஞ்சமதை மறந்துவிட்டால்
நல்லகதி சேர்ந்திடுமா?
கடையாணி உடைந்துவிழ
கடைக்குட்டி வண்டிக்குக்கீழ
உடையாத மனமுடைந்து
மூர்ச்சையற்றுப் போனதந்தை
அறியாத சிறுவன்நான்
தெரியாமல் தவறுசெய்ய
திட்டினால் திருந்தேனென்று
தூணில்கட்டித் தோலுரித்தார்
கேள்விப்பட்டு ஓடிவந்து
"கோ"வென அழுதுகோண்டு
இரத்தக்கண்ணீர் வடித்தஉன்னை
இராக்கனவும் மறந்திடுமா?
பெற்றபிள்ளை அறிவுகெட்டு
பேசிய பேச்சையெல்லாம்
ஒற்றைநொடிப் பொழுதுக்குள்ள
பெற்றவள்நீ மறந்திடுவாய்...
அத்தனையும் கனவோடு
அம்புமழை பொழியுதம்மா...
நித்தநித்தம் நினைவிலாட
நித்திரையும் போனதம்மா...
"நான்பிறந்த அப்புறந்தான்
நெல்லுசோற்றைக் கண்டோ"மென்ற
தித்திக்கும் செய்திசொல்லி
திருட்டிசுற்றிப் போட்டவளே
நெல்லுசோற்றை விட்டுத்தள்ளு
நேசமனம் கொண்டவளே
நான்பொறந்த அப்புறம்நீ
நல்சோறு தின்றதுண்டா?
அறுவை சிகிச்சைசெய்து
அம்மாநீ கிடக்கயிலே
அன்புமுகம் பார்ப்பதற்கு
அருமைமகன் நான்வரலே
கருணையுள்ள தாய்மனசு
அதற்கும் கலங்கவில்லே
நினைத்தால் அழுகைவரும்
நதியூறும் கன்னத்திலே
மூன்று அகவையில்நான்
உன்நெஞ்சில் உதைக்கையிலே
உதைத்த காலைச்சுற்றி
முன்னூறு முத்தம்வைப்பாய்
பதினாறு அகவையில்நான்
படுத்திய பாவத்திற்குப்
பிணத்திற்கும் சாபம்சேரும்
பிணந்தின்னி விலகியோடும்
ஆத்தா! அடிஆத்தா!
நான்செத்தாக் கொள்ளிவை
முந்திக்கொண்டு போயிட்டின்னா
பெயரன்கிட்டச் சொல்லிவை!
அகரம்.அமுதா
தாயன்புக்கு மட்டும் உலகில் ஈடேக்கிடையாது. தாய்மை மட்டும் தான் எதிபார்ப்பு இல்லாமல் கொடுத்து கொடுத்து,இழந்து இழந்து அதில் இனிமை காண்பது.அந்த உணர்வை துல்லியமாக கவிதையாக்கியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.உங்கள் அம்மா எங்கள் கண் முன் வந்துவிட்டார்.
பதிலளிநீக்குமிக்க நன்றி உமா அவர்களே
பதிலளிநீக்கு