செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

 

11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை

 

சிலையைப்போல் அமைதி காக்கும்

திரனெல்லாம் பெற்றும் வெந்நீர்

உலையைப்போல் கொதித்தெ ழுந்துன்

உப்புநீர் அலைக்கை நீட்டி

மலையைப்போல் உறுதி கொண்ட

      மக்களைத் தாக்கி எச்சில்

இலையைப்போல் கிழித்து வீசி

      எறிந்ததேன் கடலே! வண்ண

முலையூட்டும் தாயின் மார்பில்

மிதித்திடும் பிள்ளை போல

அலைநீட்டிக் கரையை நீயும்

அன்றாடம் மிதிக்கும் போதும்

இலையீது வன்மம் என்ற

ஏமாப்பில் வாழ்ந்தி ருந்தோம்

தலைமீதே ஏறி நின்று

தாண்டவம் இட்ட தேனோ?

 

நீரலை என்று நாமும்

நினைத்ததைப் பொய்யாய் ஆக்கி

நீரலை அல்ல ஈது

நீவீசும் வலையே என்று

பாரவர்க் குணர்த்தத் தான்நீ

      பாய்ந்துவந் தாயோ? நன்றாய்ப்

பாரவர் பட்ட துன்பம்

      பற்பல பலவே யன்றோ?

 

தண்ணீரால் ஆன ஆழி

தரைதனிற் கண்டோம்; உப்புக்

கண்ணீரால் ஆன ஆழி

கன்னத்திற் காண வைத்தாய்;

உண்ணீருக் காகா உன்னை

உலகினில் முக்காற் பங்காய்ப்

பண்ணிய கார ணத்தால்

பாழ்செயல் புரிந்திட் டாயோ?

 

வாரிதி என்றோம் உன்னை;

வளம்பல கொண்ட நீயும்

வாரியே தருவாய் என்ற

வாஞ்சையில்; ஆனால் நீயோ

வாரிதின் றாயே எங்கள்

வளங்களை; உயிரை; ஈது

சீரிலாச் சிறப்பு மில்லாச்

செய்கையென் றுணர்ந்த உண்டா?

 

வேலையென் றுன்னை நாமும்

விளித்திட நீயோ வெட்டி

வேலைகள் செய்யத் தானே

விழைந்தனை; அலைகள் என்னும்

வாலையே ஆட்டு கின்ற

வல்வெறி நாயே! நீஆன்

தோலையே போர்த்து நின்று

துயர்தரும் புலியே யன்றோ?

 

நீருள(து) ஈரம் இல்லை;

நினைக்கடல் ‘அம்மா’ வென்றிங்(கு)

ஆருரைத் தாரோ? அந்த

      அறிவிலிச் செயலைச் சுட்ட

பேருடற் பேயே! நீயும்

பெயர்ந்துவந் தாயோ? உப்பு

நீருடல் நோயில் வீழ

      நீயழி வெய்தி டாயோ?

 

உப்பிட்ட பேரை என்றும்

உள்ளுதல் எங்கள் பண்பாம்;

உப்பிட்ட நீயோ எங்கள்

உயிர்கொளல் என்ன பண்பாம்?

உப்பிட்டுத் தின்றால் தோன்றும்

உணர்ச்சி;உன் உடலம் எங்கும்

உப்புள்ள போதும் கொஞ்சம்

      உப்புக்கும் உணர்ச்சி உண்டா?

 

கடலென்றோம் உன்னை; நீயோ

காலனை ஒத்தாய்; உப்பு

உடலென்றோம்; உடனி ருந்தே

உயிர்க்கொல்லி யானாய்; தண்ணீர்த்

திடலென்றோம்; நிலப்ப ரப்பைத்

தின்னநாள் பார்த்தாய்; முந்நீர்க்

குடமென்றோம்; சாக்கா டீந்து

குடமுடைத் தேகி னாயே!

 

நுரைமுகம் காட்டு கின்ற

நுட்பமே! உன்றன் வன்மத்

திரைநகக் கீறல் பட்ட

தேசத்தின் தெருக்கள் எங்கும்

தரைமுகம் காண ஒல்லாத்

தண்ணீரில் தத்த லித்துக்

கரைமுகம் ஏற மக்கள்

கதறிடும் காட்சி காணாய்!

 

அடக்கமே அறியா உன்றன்

அத்துமீ ரலால்எம் மக்கள்

அடக்கமே செய்யப் பட்டார்

அறந்தானோ? தகுமோ? சொல்வாய்;

இடக்குமே இயற்றி நீயும்

எழுந்ததால் இன்னு யிர்போய்க்

கிடக்கிற பிணங்கள் மீது

கிடந்தழும் மக்கள் பாராய்!

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக