வெள்ளைத்தாள்!
எழுதுகோல் ஏர்நடத்தி
எழுத்து விதைநடச்
சொல்முளைத்து வாக்கியத்
துளிர்விட்டுத் தளிர்விட்டுக்
கருத்துக் கதிர்பரப்பும்
கவினார்ந்த காடுநான்!
வெள்ளை நிறத் தாள்நான்!
வெள்ளைவெளேர் நிறத்தாள்நான்!
கள்ளமில்லாக் கைக்குழந்தை
கவின்மனம்போல் வெளிர் தாள்நான்!
கவிதையோ கட்டுரையோ
கதையோ காவியமோ
எதுவான போதும்
ஏற்றுச் சுமப்பேன்நான்!
புள்ளிவைத்த எழுத்தெலாம்
பெண்களாம்; மற்றவை
சொல்லிவைத்தாற் போல்காதல்
சுமக்கும்ஆண் கூட்டமே!
சொல்லெலாம் தோரணம்…
வாக்கியம் பெரும்பந்தல்…
கல்யாண வீடுநான்!
கவினார்ந்த ஏடுநான்!
எண்ணும் எழுத்தும்என்
இருகண்கள்; என்னால்தான்
இன்றும் ஒளிபெற்றுத்
திகழ்கிறது உம்கண்கள்!
மணற்பரப்பாய் முன்னம்
மண்ணில் பிறந்தேன்
பனையோலை யாய்ப்பின்னர்
பருவம் அடைந்தேன்
ஏடாகி இன்றும்
இளமை குறையாத
பீடாகி நின்று
பிறங்குகிறேன்!
பாடுபொருள் யாதெனினும்
பாங்காய்ச் சுமப்பேன்நான்!
பாட்டுவகை யாதெனினும்
பண்பாய்ச் சுவைப்பேன்நான்!
என்மேல் எழுத
எல்லோர்க்கும் மனமுண்டு!
என்னை எழுத
எத்தனித்தார் யாருமுண்டா?
கண்ணில் மட்டுமே
கன்னியர் மையெழுத
மேனி முழுதுமே
மையெழுதும் வித்தகம்நான்!
செவ்வகக் கருவறைநான்!
வெள்ளைவெளேர் வகுப்பறைநான்!
குழந்தை சுமப்பதே
குமரிக் கழகுபோல்
எழுத்துச் சுமப்பதே
எனக்கழகு;
ஆனாலும்
காதல் கடிதமாய்க்
கைச்சேரும் போதிலும்
காவியத் தமிழாகிக்
கள்ளூறும் போதிலும்
அடையாத ஆனந்தம்
அடைகிறேன்…
சின்னக் குழந்தையின்
சிறுவிரல் தீண்டலில்
தெப்பமாய்க் கப்பலாய்த்
தெருநீரில் போகையிலே!
இப்படியாய் நானிருக்க
ஏகாந்தப் போழ்தில்
சொற்குவியல் சோபிக்கும்
சுடர்கவிஞன் எனைச்சார்ந்து…
சிந்தித்துச் சிந்தித்துச்
சுவற்றோடு சிரம்முட்டி
அண்ணாந்து வான்பார்த்து
அழகுமீன் பேன்பார்த்து
யாசித்து யோசித்து
எதையெதையோ பூசித்து
எப்பவரும்? அப்பவரும்
இப்பவரும்னு எதிர்பார்த்து
கணநேரம் கற்பனைகள்
கருவாகி உருக்குலைய
கஞ்சன் வழங்கிய
கைப்பொருளாய் ஒற்றைவரி
கொஞ்சம் உதிக்கக்
குதித்தெழுந்து குறிப்பெடுத்து
காலையில் வரச்சொன்னால்
மாலையில் வருகின்ற
காதலிபோல் காக்கவைத்துக்
கவிதையொன்று பூத்துவைக்க
சிந்தாமல் சிதறாமல்
சேகரித்துச் சேர்த்தெடுத்துக்
காகித்ததில் தீட்டியபின்
கடைசியில் பாத்தக்கால்
கவிஞனென்ற அவ்விடத்தில்
கண்டவரின் பெயரிருக்கே!?
அமுதனெனும் அவ்விடத்தில்
அடேய்சரவணா என்றிருக்கே?
மூச்சடக்கி முத்தெடுத்து
முன்வைத்தோன் அவனிருக்கக்
கூச்சமற்றுத் தத்தெடுத்துக்
கொண்டவரை என்சொல்ல?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக