மதுப்பிரியர் 1:-
பாதையில ஒக்காந்து 
   பட்டப் பகலுலயே
போதையப் போட்டுப் 
   புளகிப்போம்; – கீதைகள
அப்புற மாக 
   அவுத்து உடலாம்நீ
இப்பக் குடிடா 
   இதை! 01
மதுப்பிரியர் 2:-
பச்சைத்தண் ணீரையே 
   பத்துருவா மேல்வச்சி
எச்சைப் பயலுக 
   ஏய்க்கிறான்; – பிச்சையெடுத்து
அன்னாடம் கோட்டருக்கே 
   அல்லாடும் நம்மிடமே
என்னாடா கொள்ளை 
   இது!? 02
மதுப்பிரியர் 1:-
தண்ணியப் போட்டாலே 
   தத்துவம் பேசுவநீ...
புண்ணியமாப் போகும், 
   புலம்பாதே! – ‘அண்ணியார்
கண்ணாலச் சேதியக் 
   கண்டதுஞ் சின்னவர்
புண்ணானார்’; கட்டிங்கப் 
   போடு! 03
மதுப்பிரியர் 2:-
எம்பது கோடியில 
   பேனா சிலையெடுத்து
அம்பது கோடிக்கு 
   மைவாங்கி – அம்பதுல
பாதிக்குக் காகித 
   பண்டலுமே வாங்கிருக்கான்
பேதியில போற 
   பெரிசு! 04
மதுப்பிரியர் 1:-
அடிச்சேன்றான்; கால 
   ஒடிச்சேன்றான்; கொன்னு
முடிச்சேன்றான் ‘சிந்தூர்’ல 
   மோடி; – வெடிச்சத்தம்
காத்துவாக் கில்வந்து 
   காதில் விழும்முன்ன
தீத்துவச் சேன்றானே 
   ட்ரம்பு! 05
மதுப்பிரியர் 2:-
பக்கத்து நாடெல்லாம் 
   பத்தி எரியுதே
வக்கத்த தீயிங்கே 
   வாராதா? – கொக்கரிக்கும்
சங்கிப் பயலுகளச் 
   சாவள்ளிப் போகாதா?
இங்குத் திராவிடமும் 
   இத்து! 06
மதுப்பிரியர் 1:-
என்னடா இந்த 
   இசுரேல் நெதன்யாகு
சொன்னாலும் கேட்காம 
   துள்ளுறான்? – இன்னிவரை
பாவத்துக் கஞ்சாம 
   பாலத்தீன் மக்களக்
கோவத்தில் கொன்னு 
   குவிச்சு! 07
மதுப்பிரியர் 2:-
கோட்டர் விலையேறக் 
   கூடும் டொனால்ட்ட்ரம்ப்
போட்டவரி யால்,அதுக்குப் 
   பொங்காம – மேட்டரை
நாடுவிட்டு நாடு 
   நகத்துறியே என்னடாஉன்
கேடுகெட்ட புத்தி? 
   கிளம்பு! 08
மதுப்பிரியர் 1:-
மரியாத இல்லாம 
   பேசாத மச்சான்;
புரியாம பண்ணுதா 
   போதை? – தெரிஞ்சிருந்தும்
கூப்பிட்டு வந்தவனைக் 
   கூர்பார்க்கச் சொல்லுதா
சாப்பிடத் தந்த 
   சரக்கு!? 09
மதுப்பிரியர் 2:-
பொத்துடா வாய 
   பொறம்பொக்கு; போதையிப்போ
பத்தல, வேற 
   பணமிருக்கா? – சுத்துற
உந்தலைய வித்தா 
   ஒருநூறு தேராதே;
எந்தலையும் விப்போம் 
   எழு! 10

 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக