குழந்தை 1
அங்கப்பார் பூச்சாண்டி;
திங்கக் குழந்தைகளத்
தேட்றான்டி; - சங்கக்
கடிப்பான்டி; ரத்தம்
குடிப்பான்டி; கைகால்
ஒடிப்பான்டி; ஓடி
ஒளி!
குழந்தை 2
நெசமாவா சொல்ற?
நிறுத்தாதேன் கொல்ற?
பசங்கன்னா கோரப்
பசியா? - அசந்தாக்க
தூக்கி அலேக்கா
தொலைதூரம் போய்க்கறிசோ(று)
ஆக்கித்தின் பானா
அவன்?
குழந்தை 1
உளிநக மாக
உலக்கைவிர லாக
அளியென்ப தில்லா
அரக்கன், - கிளிகொடுக்கும்
கையுரலத் தூக்கிக்
கடாசி நமைப்பிடிச்சு
மையிருளில் போவான்
மறஞ்சு!
குழந்தை 2
குடல்மாலை சூடிக்
குழந்தைகள் தேடிப்
படலோரம் வாரான்
பதுங்கி; - நடமாட
ஆவுறதா வீதியில?
அச்சத்தில் நெஞ்சடச்சுச்
சாவுறதா நாம
தவிச்சு!?
குழந்தை 1
ஆளில்லா நேரத்தில்
ஆம்புடும் புள்ளைகளத்
தோளுல போட்டுச்
தொலைஞ்சிடுவான்; - நாளுக்கு
நாள்இவன் தொந்தரவால்
நாற்பது ஊர்காலி;
கேள்இவனால் நம்மூர்க்கும்
கேடு!
குழந்தை 2
மூக்குக்குக் கீழ
முழநீள மீசைக்குத்
தேய்க்கத்தான் தேடிவரான்
செங்குருதி; - காக்கத்தான்
நாதியில்லா நம்மள
நல்லாப் பயமுறுத்தும்
பேதியில போறஅச்சப்
பேய்!
குழந்தை 1
மோப்பம் புடிக்கிறான்
மூச்சும் உடாதடி;
ஆப்புட்டோ முன்னா
அதோகெதி; – சாப்பிடத்
தான்டி பசியேப்பந்
தானா விடுகிறான்;
ஏன்டி! அசையாது
இரு!
குழந்தை 2
அடிமேல் அடிவெச்சு
அடுத்தஎடம் போவோம்;
முடியலயின் னாலும்
முயல்வோம்; - தடியரக்கன்
தேடி வரதுக்குள்
சிட்டாப் பறந்துடுவோம்
ஓடிவா போயிடுவோம்
ஊடு!
குழந்தை 1
ஊட்டுக்குப் போனா
உடுவான்னா நீநெனச்சே
வேட்டுவெப் பான்டி
விரல்கடையால் – மாட்டாம
கோவிலுக்குப் போயி
கொளஞ்சியப்பன் தாள்புடிப்போம்
ஆவிமொத்தம் காப்பான்
அவன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக