நக்கல் புடிச்சவன் நான்!
தம்பியந்த புத்தகத்த
இப்போ’, எனயாரும்
ஏசாதீர்; – அப்படியே
கண்ணால் படமாய்க்
கருத்தில் நெறச்சிடுவேன்;
உண்மையில் அத்திறமை
உண்டு! 01
அச்சடிச்ச புத்தகத்த
அப்படியே நாம்படிச்சி
உச்சரிப்ப தோட
உடமாட்டேன்; – சச்சரவில்
சிக்கத் தலைகீழாச்
செப்புவேன்; ரொம்பவே
நக்கல் புடிச்சவன்
நான்! 02
மல்லாக்கத் தாம்படுத்து
வாசிச்சாப் பாடமிடும்
நல்லாவே மண்டைக்குள்
நங்கூரம்; – பொல்லாப்புப்
பத்திக் கவலைப்
படமாட்டேன்; என்னோட
புத்திக் கிதுசரிதான்
போ! 03
தலைகீழா நாம்படிச்சிச்
சாதிப்பேன்; எந்த
நிலையிலும் வீழாம
நிப்பேன்; – அலைக்கஞ்சி
ஆடலாம் கப்பல்,
அடிவானம் ஆடுமா?
ஊடறுப்ப தென்குணம்தான்
ஓடு! 04
சுதியோடு வாசிக்குஞ்
சூறா வளிநான்
மதிநெறய வாய்ச்ச
மழலை; – கதியில்
நகத்தாலக் கீறி
நதிவற்றச் செய்வேன்;
எகத்தாளம் ஜாஸ்தி
எனக்கு! 05
விஞ்ஞானி ஐன்ஸ்டீன
விஞ்சுகிற நுண்ணறிவ
பிஞ்சி வயசுலயே
பெற்றாலும் – நெஞ்சோரம்
தற்பெரும இல்லாத
தம்பிப் பயலெந்தன்
நற்பெரும பேசலயே
நாடு! 06
நித்தமொரு புத்தகத்த
நித்திரைக்கு முன்னால
புத்தியில ஏத்தும்
புலவன்நான் – மத்தியச்
சோறே எனக்குச்
சுவடிதான்; ஏழெனக்கு;
ஆறே பிறருக்கு
அறிவு! 07
சாஞ்சிப் படுத்துத்
தரவாப் படிப்பேன்நான்
மாஞ்சிப் படிக்கிறவன்
மத்தியில; – மூஞ்சிபுக்கில்
நேரத்தப் போக்காம
நீயும் எனைப்போலப்
பாரத்த விட்டுப்
படி! 08
கம்பனுக்கே பாடங்கள்
கத்துத் தருகின்ற
கொம்பனையார் வெல்வது
கோதாவில்? – வெம்புலி
வெண்பா எனக்கு
விளையாட்டுப் பொம்மையே
வெண்பால் நிலவெனக்கு
வீடு! 09
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக