பல்ல ஒடைக்கிறேன் பார்!
மூக்கெனக்குக் குத்திவிட 
   முந்தானை போட்டிழுக்கும்
ராட்சசியே! மூக்கு 
   ரணமானால் – கேட்கஒரு
நாதியிருக் காஎனக்கு? 
   ஞாயமிருக் காஉனக்கு?
பீதிகிளப் பாமபதில் 
   பேசு! 01
கிழவி!
ஆணி எடுத்துவல்ல, 
   கோணிஊசி கொண்டுவல்ல,
வீணிலழ வேணாம் 
   விசனம்விடு; – சாணியிடும்
கன்னுக்குக் குண்டூசி 
   கண்டெடுத்து வந்திருக்கேன்
ஒன்னும் வலிக்காது 
   ஒனக்கு! 02
கன்று!
இப்பவே நான்பாக்க 
   எட்டூர் அழகாச்சே!
அப்புறமும் வேற 
   அழகெதுக்கு? – ஒப்புரான
சத்தியமா என்னை 
   சமாதானம் செய்யாமக்
குத்தினாப் போட்டுடுவேன் 
   கொன்று! 03
கிழவி!
தங்க எழையெடுத்துத் 
   தாம்புக் கயிறுபின்னி
அங்கத்தில் பூட்டி 
   அழகுபாக்க – இங்குவந்தா
உம்பாட்டுக் கேதோ 
   உளறித் திரியிறியே
கொம்புத் தலையாட்டிக் 
   கொண்டு! 04
கன்று!
இத்த கயிறுஅதை 
   ஏழுபவுன் இன்னுசொன்னா
செத்த பிணமும் 
   சிரிக்காதா? – குத்துறத
மூக்கோட நிப்பாட்டு, 
   மூளைக்கும் நீட்டாத,
ஏக்கர் கணக்கிலெனை 
   ஏய்ச்சு! 05
கிழவி!
வம்புப்பே சாம 
   வரலேன்னா இப்பவே
கம்பா லடிச்சிஉன் 
   காலொடைப்பேன்; – நம்பியுன்ன
புள்ளையப்போல் நான்வளர்த்தாப் 
   போக்கிரியா நீயிருக்கே;
பல்ல ஒடைக்கிறேன் 
   பார்! 06
கன்று!
நீமட்டும் திண்ணையில 
   நிம்மதியாத் தூங்கயில
நான்மட்டுங் கொட்டகையில் 
   நாறணுமா? - வாய்மட்டும்
பேசறியே எம்மேல 
   பாசத்தக் காட்டறியா?
ஏசமட்டஞ் செய்யிறியே 
   ஏன்? 07
கிழவி!
எட்டூரு மாடுகட்ட 
  ஏத்த தொழுவத்த
விட்டுவிட்டுக் கேக்குதா 
   வீடுனக்கு? – கெட்டியான
தோடுவித்த காசில் 
   தொழுவத்தச் சீரமைச்சும்
பாடுவது ஏன்பஞ்சப் 
   பாட்டு! 08
கன்று!
வெத்தலையும் சுண்ணாம்பும் 
   வெட்டிவெச்ச பாக்கோடு
கொத்தாகச் சீவல் 
   குவிச்சிவச்சி - நித்தம்
கிழவனுக்கு ஊட்டுங் 
   கிழவியொரு வாட்டிக்
குழவியெனக்கு ஊட்டுனியா 
   கூறு! 09
கிழவி!
வெத்தலை கேக்குதா 
   வெட்டிப் பயலுக்கு?
மத்ததெதும் வேணுமா 
   மாட்டுக்கு? – செத்தயிரு
மூக்கோடு சேத்துனது 
   நாக்குலயும் குத்துறேன்
ஆக்காட்டு வெக்கிறேன் 
   ஆப்பு! 10
கன்று!
நாலுகால் பாச்சலுல 
   நாலூரு சுத்திவந்து
மேலுகால் நோவுதுன்னு 
   விம்மயில, - காலுகால்
இன்னுநீ கத்தாம 
   எங்கால் அமுக்குறேன்னு
சொன்னாக் குறைச்சலென்ன? 
   சொல்! 11

 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக