என்நிலமை மோசந்தான் இன்று
பாத்துக்க வேலையாள்
வெச்சிட்டு போறல்ல
வேலைக்கி? - நச்சரிச்சி
நாளுநாள் நானழுதும்
நாணயந்தான் முக்கியம்னு
தோளுமேல் தோல்பை
சுமந்து! 01
தூக்கி எனைக்கொஞ்சித்
தோளுல தூங்கவெச்சிப்
பாக்குறது எல்லாம்
பணிப்பெண்தான்; - ஏக்கத்தில்
கேக்குறன் உன்மடி
கிட்டாதா நாந்தூங்க?
தூர்க்கிறதா உன்னன்பைத்
துட்டு!? 02
சந்தைக்கிப் போயித்
தவிட்டுக் கெனைவாங்கி
வந்ததுதான் உண்மை;
மறுபடியும் - சந்தையில
வித்துடுங்க நான்வேற
வீட்டுக்குப் போயிடுறேன்;
எத்தனதான் நாம்பொறுப்பேன்
இங்கு!? 03
பாலூட்டி என்னப்
படுக்கவெச்சி நாந்தூங்கத்
தாலாட்டுப் பாடித்
தனிமையில - மாலாகக்
கொஞ்சிக் கிறிங்க;
குலவிக் கிறிங்க;எனை
வஞ்சிக் கிறிங்கநல்லா
வச்சு! 04
பால்சோறு வேணாம்;
பழச்சாறும் வேணாமே;
பால்புட்டி வேணாம்
பசியில்ல; - வால்பய,ன்னு
பால்பல் மொளச்சயென்னப்
பாடாப் படுத்தறிங்க;
கால்நடையா நாம்போறேன்
காடு! 05
பத்திரமாப் பாத்துக்கப்
பாட்டியில்ல; தேடுகையில்
அத்தனில்ல; கொஞ்சவும்
அம்மையில்ல; - மொத்தத்தில்
பொம்மைக்குப் பஞ்சமில்ல;
பொய்களுக்கும் பஞ்சமில்ல;
உம்மைக்கே பஞ்சமுள்ள
ஊடு! 06
எங்கட்சி சேர,
எனக்காகப் பேச,ஒரு
தங்கச்சிப் பாப்பா
தரவில்ல? - எங்கிட்டப்
பேச்சுக் கொடுத்துவெறுப்
பேத்தநெனைக் காதிங்க
ஏச்சுக் கொடுத்தெனை
ஏய்ச்சு! 07
முத்துன்னும் தேச
முதல்வன்னும் நாம்பெத்த
சொத்துன்னும் ஏதேதோ
சொல்றீங்க; - அத்தனையும்
பொய்யாக்கி வேலைக்குப்
போறீங்க; ஏதிலிபோல்
மெய்யாகத் தேயிறன்நான்
வெந்து! 08
கூட இருந்தென்னைக்
கொஞ்சி, ஒளிஞ்சிவிளை
யாட மகிழ்ச்சி
அரும்பாதா? - வாடவிட்டு
வாரக் கடைசியில
வாரி அணைச்செடுத்து
ஆரத் தழுவுறதா
அன்பு? 09
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக