திங்கள், 8 செப்டம்பர், 2025

நம்பிப் பொறுகொஞ்ச நாள்!

 
நம்பிப் பொறுகொஞ்ச நாள்!

மொட்டு விழியோடு
முத்து மலரேநீ
சொட்டிக்கண் ணீரைச்
சொரிவதேன்? – திட்டியே
அம்மா அடித்தாளா?
அப்பா முறைத்தாரா?
இம்மாம் விசனம்
எதற்கு? 01
புன்னகை சிந்தாத
பூவுண்டா? கண்ணீர்ஏர்
கன்னம் உழுவது
தான்நன்றா? – இன்னமும்
நெஞ்சில் நிறைவேறா
நேசக் கனவுண்டா?
அஞ்சி அழலாமா
அஞ்சு!? 02
சின்ன மகராணிக்கு
என்ன பெருஞ்சோகம்?
சொன்னால் குறையும்
துயர்யாவும்; – அன்றாடம்
ஆட்டத்தில் சேர்க்காத
அண்டை மழலையரால்
வாட்டமடைந் தாயா?சொல்
வாய்! 03
ஆராரோ பாடுகையில்
அன்னை உனைப்பற்றிப்
பாராட்டிப் பாடிய
பொய்பலவும் – நேராத
சோகத்தி லாகண்ணீர்
சிந்துகிறாய்? ஏதோஒர்
வேகத்தில் சொன்னாள்;
விடு! 04
நண்டு பிடித்துனக்கு
நல்கிடவா? பூமேற்பொன்
வண்டு பிடித்து
வழங்கிடவா? – கண்டொரு
தும்பி படித்துத்
தரவா? எதைநினைந்தும்
வெம்பிப் பிடிக்காதே
வீம்பு! 05
பாடம் புரியலையா?
பள்ளி சரியிலையா?
மேடம் விரட்ட
மிரண்டாயா? – தேடரிய
பொன்னே! சிறுகரடிப்
பொம்மை தொலைத்தாயா?
என்னேஉன் ஏக்கம்
இயம்பு! 06
அத்தை அடித்தாளோ
அல்லிப்பூச் செண்டாலே;
சித்தி அடித்தாளோ
சிண்டாலே; – ஒத்தையில்
தம்பி துணைகேட்டுத்
தான்வெம்பு கின்றாயோ?
நம்பிப் பொறுகொஞ்ச
நாள்! 07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக