தீபமேற்றும் தண்ணீரே!
தீப்பொறியை எங்கே
திருடினாய்? – தீப்பரவித்
தண்ணீர்ப் பரப்பைத்
தணலால் மெழுகினால்
உண்ணீர்க்கென் செய்யும்
உலகு!? 01
நுரைப்பல் துலக்க
நெருப்புப் பசையா?
கரைமணற் சாம்பல்
கறையா? – தரைமீதில்
தண்ணீர் எரிந்தால்
தணிப்ப தெதைக்கொண்டு?
கண்ணீர்க் கடலிலையே,
கண்! 02
அலையாத்தி கண்டோம்;
அடியாத்தி! காணோம்
அலையேதீ ஆன
அவலம்; - நிலைமாத்தி
நின்றெரியக் கூடும்தண்
ணீரென்றால் மீனினம்
ஒன்றுமிருக் காதே
உயிர்த்து! 03
ஒற்றை வரிசையில்
ஓடிவரும் சிற்றெறும்பாய்ப்
பற்றி நெருப்புப்
பரவிவர – அற்றை
மதுரைபோல் தீக்கிரையாய்
மாறிடுமோ ஆழி?
எதுவரையில் போகும்
எரிந்து!? 04
அலையே நெருப்பாய்
அடித்தால் கரையின்
நிலையென்ன ஆவது?
நீசொல்! – மலையளவு
கோபத்தால் கண்ணகி
கொங்கை எறிந்தெரித்தாள்;
பாபத்தைச் செய்யாதே
பார்த்து! 05
எறியம்பால் ஓர்கோடு
இராமன் கிழித்தான்
மறியாள் அதைத்தாண்டா
வண்ணம்; – குறிப்பாய்இத்
தண்ணீர்த்தீக் கீறலையார்
தாண்டா வணம்வரைந்தாய்?
உண்மைசொல் ஆழி!
உரத்து! 06
மறியாள் – மான்போன்ற சீதை.
மார்பினைக் கீறி
மழலை புதைப்பர்வெம்
போர்பல கண்டஎம்
பூந்தமிழர்; – நீர்த்திரைதன்
மார்பிலே கீறி
மணலில் புதைகிறதோ
போர்க்கலங்கள் காணாத
போது!? 07
நெருப்பிலே நாருரிக்க
நீகற்ற தெங்கே?
இரும்நீர் எரிபொருளா
இங்கே? – கருந்துளையின்
பக்கம் ஒளிவளையும்;
பாய்அலைக்கும் தான்வளைந்தால்
செக்கரழா தோகண்
சிவந்து!? 08
கரை,அம்மி யாகக்
கதிர்,மஞ்ச லாகத்
திரை,குழவி யாகித்
திரிக்க – நுரைமுகம்பொன்
மஞ்சலே பூசி
மணிநடனம் ஆட,இருள்
அஞ்சனமே பூசும்
அசந்து! 09
மின்னல் கொடிபோலே
தண்ணீர் கொடிதானோ?
கன்னல் அலைமேல்
கனல்தானோ? – என்னஇது
தொட்டால் சுடுமோ?
சொடுக்குமோ கைவிரல்
பட்டவுடன் மின்சாரம்
பாய்ந்து!? 10
தீயைக் கயிறாய்த்
திரிக்கும் அலைகண்டு
வாயைப் பிளந்தசரும்
வையகம்; – பாயையிட்டு
மாலைக் கதிரவன்
மல்லாந்து தான்படுத்து
காலை விழிக்குமோ
கண்!? 11
தரைக்கும் திரைக்குமென்ன
சண்டையா? ஞாயம்
உரைக்கக்கூப் பிட்டதார்
உன்னை? – துரைத்தனம்
காட்டிப் பிரிக்கக்
கதிரே! இடைபுகந்து
மாட்டித் தவிக்கிறாய்
வந்து! 12
நெருப்புப் பிழம்பா?
நெலியும் தழும்பா?
சுரும்பமரும் தண்ணீர்
அரும்பா? – விரும்பித்
தலைகீழ் எரியும்
தணலின் குறும்பா?
மலைக்கும் குறும் பா
மனசு! 13
வெய்யோன் குடலுருவி
வீசியதும் யாரோ?தீ
அய்யோ! எனவழுத
கண்ணீரோ? – மெய்யாய்
நெருப்பு நதிநடந்து
நீந்திவரும் ஆற்றின்
பெருந்தடமோ? வேறெதுவோ
பின்பு!? 14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக