மூட்டத்தைத் தான்போட்டு முன்னாடி குந்திடணும்;
சூட்டைத்தான் ஏற்றிச் சுகம்பெறணும்; - வாட்டிக்
குறைச்சாத்தான் போச்சு குளிரதிகம் ஆச்சு
விறைச்சித்தான் போச்சு விரல்!
போர்வைக்குள் தப்பிக்கப் போயொளிந்த போதினிலும்
தீர்வில்லை போனேனே சில்லிட்டு; - மார்கழியில்
மண்ணும் குளிருமாம் மாமன் குளிருகிறேன்
பெண்நீ மருந்திப் பிணிக்கு!
மகளொரு பக்கம் மகனொரு பக்கம்
திகழ்குளிரில் தோளணைத்துத் தூங்க - நிகழ்வதைநான்
தள்ளிப் படுத்துத் தலைசொறிந்து நோட்டமிடக்
கள்ளி சிரிக்கின்றாள் கண்டு!
போர்வை தலையணையே போதும் எனஉறங்க
யார்நான்? இரும்பிலான எந்திரமா? - கார்காலக்
கூதலுக்குத் தோதவள் கூடலே; உள்ளூறும்
காதலுக்குச் செம்மாங் கனி!
வெந்நீரைக் கேட்டு வெடவெடக்கும்; பாழ்பச்சைத்
தண்ணீர்க்குத் தாடை தடதடக்கும்; - பெண்ணேநீ
காய்ந்த விறகெரித்துக் காய்ச்சிக் கதகதப்பை
ஓய்ந்த உடம்புக்கே ஊத்து!
துண்டெடுத்து வாடி துவட்ட; குளிப்பதைக்
கண்டெடுத்த தெந்த கழிசடை; - மண்டும்
தவளைச் சொறிபோல் தலைகால் வரைக்கும்
குவளை மலர்போல் குளிர்க்கு!
மயிர்க்கால்கள் நிற்கும், வயல்மேற் பரப்பில்
பயிர்க்கால்கள் நிற்கும் பவிசில்; - தயிர்சாதம்
மிக்கப் பகைகுளிர்க்கு; வேக்காட்டில் முங்கிமுங்கி
முக்குளித்த இட்லிபோதும் மூன்று!
ஆவி பறக்கும்டீ ஆகக் குளிருக்குச்
சாவு மணியடிக்கச் சம்மதிக்கும் - பாவிமகள்
கையிலே மாவெடுத்துக் காலையிலே போடுகிறாள்
தையிலே மாக்கோலத் தை!
10/1/2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக