சனி, 11 ஜனவரி, 2025

 

அண்ணணே! பேசாயோ? அன்பள்ளிப் பூசாயோ?

வண்ணம் கரியனே வாராயோ? - எண்ணத்தின்

ஏக்கங்கள் தீராயோ? இன்றென்னைச் சேராயோ?

ஊக்கங்கள் தந்துதவா யோ?

 

நள்ளிரவு ஆகட்டும் நல்லிரவு; நீவந்து

கொள்ளுறவு இப்பொழுது கொன்றிரவு; - நல்வரவு

பாடுவதில் சச்சரவு; பல்லிளிக்கும் நச்சரவு;

ஊடல் தகர்க்க உதவு!

 

பட்டம் படித்தவன்நீ பன்னூல் பயின்றவன்நீ

ஒட்டியுற வாடபலர் உள்ளவன்நீ; - கட்டிலின்மேல்

மத்தாப்புப் பூங்கவிதை வார்ப்பவன் நீ;நானோ

பத்தாப்புத் தாண்டாப் பயல்!

 

பகலெல்லாம் வேறு பணிசெய்; உனது

தகவறிவேன் செய்யேன் தணிக்கை; - சகமுறங்கக்

காத்திருடா என்றென்னைக் காக்கவைக் காதிந்த

ராத்திரி ரா! மீசைக்கா ரா!

 

பகல்விளக்கு நீ;உன்னால் பாராட்டுப் பெற்ற

அகல்விளக்கு நான்;ஊர் அறியும்; - நகலெடுக்க

ஆயிரம் பேருள்ளார் ஆங்குனக்கு; நீயெனக்கு

ஆயிரத்தி லேயொரு வன்!

 

6/1/25

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக