சனி, 11 ஜனவரி, 2025

 

என்னாத்த ஓட்டுற? இப்படியேன் ஆட்டுற?

பின்சீட்டில் என்இடுப்பைப் பேக்குற; - சொன்னாக்கேள்!

ஆட்டாம ஓட்றா அடங்கொப்பன் தன்னான!

வாட்டுது குண்டி வலி! (1)

 

ஆறுல போடா அட!அறிவு கெட்டவனே!

நூறுல போயிதான் நொட்டணுமா? - ஏறுனவன்

வாந்தி எடுத்து வயித்தால போணுமா?பஸ்

மாந்தன்மேல் ஏறணு மா? (2)

 

ரோடாவும் ரோடில்ல பஸ்ஸாவும் பஸ்ஸில்ல

போடாநீ மெல்லமாப் போடாநீ; - ஆடாம

நாங்க அலுங்காம நல்லபடிச் சேரோணும்;

தூங்காம ஓட்டித் தொலை! (3)

 

காது கிழியுதடா கஸ்மாலம்; ஹாரனொலி

ஏதுக்குத் தான்நீ எழுப்புறியோ? - போதுமடா!

பீதி கிளப்பாமப் பேருந்தை நீஓட்டிப்

பூதி கிளப்பாமப் போ! (4)

 

'ஜெட்'டையா ஓட்டுற? ஸ்டீயரிங்ஏன் ஆட்டுற?

கெத்தெதுக்கு நீகெட்டக் கேட்டுக்கு? - விட்டாநீ

ஆக்சிடென்டு ஆக்குவ ஆள்கொல்லப் பாக்குவ

ஏக்கிறுக்கா! பஸ்விட்(டு) இறங்கு! (5)

 

பாம்பா நெலிநெலிஞ்சிப் பாடாப் படுத்திவச்சி

வீம்பாக் கிளம்புறியே வேகமா; - ஏம்பா!உன்

வீட்டில சொல்லிட்டு வந்துட்டி யா?எங்கக்

கூட்டில் உசுரில்லை யே! (6)

 

இதுதான்சாக் குன்னொருத்தன் எப்டி விழுறான்?

அதுதான்சாக் குன்னொருத்திக் காட்றா; - பொதுவாக

நிக்கிறவர்க் கிந்தவேகம் நிம்மதிதான்; பார்த்தெரிவான்

ஒக்காந்த பேர்கள் உளம்! (7)

 

முந்துறவன் முந்தட்டும் முந்தாம போடாநீ!

சந்துல பூந்தேன் தமாஷ்காட்ற? - எந்திரிநீ!

ஏய்!டேய்!கண் டக்டர்! எடுடாநீ வண்டிய;

போய்பாக்க ணும்நான் பொழப்பு! (8)

 

குண்டுங் குழியுமா கோணலும் மாணலுமா

சண்டாளன் போட்டுவச்ச தார்ரோட்டில் - வண்டிய

உன்னோட இஷ்டத்துக்(கு) ஓட்டினா எங்ககதி

என்னா வதுநீ எழு! (9)

 

இந்தக் களேபரத்தில் இஷ்டசாங் கேக்குதா?

எந்தப் பயல்போட்டான்? ஈதிசையா? - சந்தடியில்

ஓரக்கண் ணாலொருத்தி ஓலை அனுப்பஅவள்

சார்நிற்கி றார்படியில் சாய்ந்து! (10)

 

3/1/2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக