சனி, 11 ஜனவரி, 2025

 

சேப்பிலே என்ன? சிலநூறு காசிருக்கா?

மாப்பிளே! வாய்யா! மதுகுடிப்போம்; - தோப்பிலே

மூனுசீட் டில்வச்சா மொத்தமா அள்ளிடலாம்;

நானுனக்குத் தோதுசெய்வேன் நம்பு!

 

கைநடனம் ஆடுதுபார் கண்ணதன்பின் ஓடுதுபார்

பொய்நடனம் பொம்மலாட்டம் போடுதுபார்; - ஐ!நடுவில்

இட்டசீட் டில்தான் இருக்கு நமது'லக்கு';

துட்டையெல்லாம் கட்டிஅதைத் தூக்கு!

 

சொன்னேன்ல? சொன்னபடிப் போட்டபணம் ரெட்டிப்பாத்

தன்னால வந்ததைநீ பாத்தேல்ல? - இன்னபடிக்

காப்பீடு தந்திடுமா? கார்பரேட்டு தந்திடுமா?

கூப்பிடுநீ பாப்போம் குறி!

 

ஆட்டமிப் போதுதான் ஆரம்பம்; மாப்பிளே!

நோட்டை விரலின் நுனியில்வை! - போட்டதன்மேல்

தாக்கிட லாம்;சமந் தாவைப்பெண் கேட்கலாம்;

'பீக்'கில்நாம் இப்போ பிளாய்!

 

அஞ்சிநூ றோடுவந்தாய் ஐயா யிரமாச்சா?

நெஞ்சறிஞ்சி சொன்னேன் நெசமாச்சா? - கொஞ்சமிரு

லட்சங்கள் ஆக்கிடலாம் லாடுலபக் காகிடலாம்

'தட்மொமண்ட்'டில் காசவச்சித் தாக்கு!

 

ஆட்டத்தை மாத்துகிறான் ஆள்நிறம் மாறுகிறான்

நோட்டத்தை நம்மேல் நுணுக்குகிறான்; - சீட்டைத்தான்

சுண்டு விரலால் துரிதமாய் மாற்றிநம்

கண்ணைக் குருடாக் கறான்!

 

சீட்டுல கட்டும்முன் நோட்டுல முத்தமிடு;

ஈட்டுற லாபத்தில் எண்ணமிடு; - மாட்டல;

இந்தாட்டம் தான்நம்மை ஏமாற்றி விட்டது;

வந்த வரைலாபம் வா!

'மப்பாலே நம்நிலைமை மாறாது; சூதுநமைக்

குப்புற வீழவைக்கும் கூறாது; - அப்பாலே

போய்விழுந்த சீட்டால்தான் போச்சுநம் காசெல்லாம்;

வாய்ப்பிருக்குத் துட்டெடுத்து வை!

 

பணமெல்லாம் போச்சா?உன் பைகாலி யாச்சா?

பணத்தால் பலிக்காதா பாச்சா? - பணம்வரும்

போகும்; மனமுடைந்து போகாதே! கைவாட்சால்

ஆகும்நாம் விட்டதையள் ள!

 

விட்டது போல்விட்டு விட்டதுக்கும் மேலநமை

மொட்டை அடிச்சி முடிச்சிவுட்டான்; - கெட்டதுபோ!

காதும்கா தும்வச்சிக் காத்திருந்தாற் போல்நமைச்

சூதும் முடிச்சிருச்சே த்தூ!

 

9/1/2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக