சனி, 11 ஜனவரி, 2025

 

விக்டர் எனும்கவிஞர் வெல்லும் எழுத்துவழி

லிட்டர் கணக்கிலே லிக்க(ர்)விற்பார்; - சொட்டெடுத்து

வாயிலே இட்டவன் மாளாப் பெரும்போதை

நோயிலே வீழ்வான் துணிந்து!

 

போதை தவறுதான் போதைஅழைத் துச்செல்லும்

பாதை தவறுதான் ஆனாலும் - ஈதைவிட்டால்

முன்னேறும் பாவலர்க்கு முன்னேராய் வேறில்லை;

முன்னேரும் பிந்துமிவர் முன்!

 

தம்பி உடையவர் தானைப் படைத்தலைவர்

அம்பிபோல் தோற்றம்ஆ னால்'ரெமோ'; - ஜிம்னாஸ்டிக்ஸ்

பெண்ஆண் செயக்காண்போம்; பேரார் கவிஞரிவர்

பண்டமிழைப் பண்ணவைப் பார்!

 

'கமா'வைப்பார்; அஃதைக் கவிதையென்பான்; புள்ளி

'டெமோ'வென்பான்; கொள்வான் டரியல்; - சமாச்சாரம்

என்னவென்றால் அண்ணல் எழுத்தாலே வந்தவினை;

பொன்னின் துகளதுவும் பொன்!

 

கிழவனும் தின்னுகிற கிண்டர்ஜாய் அண்ணல்

வழங்கிடும் பூம்பா வரிகள்; - பழகினால்

விட்டொழிக்க ஏலாது; விட்டொழித்த ஆளேது?

கெட்டப் பழக்கமிது கிஃப்ட்!

 

பண்டோரால் கூடப் பகரஒண்ணாக் கற்பனைகள்

தண்டோரா போட்டுத் தருகின்றார்; - சண்டாளர்

மிச்சமே வைக்காமல் விள்ளுகிறார்; நானெழுத

சொச்சமே வைத்தாரா சொல்!?

 

அடாவடி காட்ட அறியார்; கவியில்

தடாலடி காட்டத் தவறார்; - சடாமுடி

போற்பிண்ணும் கற்பனையும் பொன்றாக் கருத்து(ம்);இவர்

காற்பிண்ணும் நான்கு கவி!

 

சில்லென்ற பீரும்,இவர் செப்பும் தமிழ்ச்சீரும்

அல்லை எனக்குள் அழகாக்கும்; - சொல்லுங்கள்!

உங்களுக்கும் அப்படியோர் உற்சாகம் பொங்கியதா?

பொங்கலையென் றாலது பொய்!

 

பிக்காசோ ஓவியமும் பீத்தோவன் சிம்பொனியும்

சிக்னேச்சர் காட்டுமிவர் செய்யுளிலே; - விக்டர்

முகநூலெங் கும்தன் முகம்காட்டு கின்றார்

நகலெடுக்கா தானை நவில்!

 

2/1/2025

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக