காராம் பசுவாங்கிக் காடு கரைமேச்சி
ஊராங் கழுநீரை உண்ணவச்சி - சீராநான்
பத்துலிட்டர் பால்பீய்ச்சிப் பக்குவமா நெய்காய்ச்சி
வித்துவரக் காசிலொரு வீடு!
சாணி பொறுக்கிவந்து தட்டி வறட்டியிட்டுப்
போன விலைக்குவிற்றுப் பொன்வாங்கிக் - கானமயில்
தங்கைக் கணியவிரு தங்கவளை தாள்கொலுசு
தொங்கல் சரடுஇரு தோடு!
தோடென்ன தொங்கலென்ன தோப்பு தொரவென்ன
காடென்ன உண்ணுங் கறியென்ன - மாடென்ன
எல்லாமும் கைவரலாம் என்ராசிக் காட்படலாம்
கல்லுமே பொன்னா கலாம்!
ராணி கணக்காக ராசா எனக்காகக்
காணிநிலத் தோடுவந்து கைப்பிடிப்பான் - நாணி
அவன்முன்னே நிக்க அவன்பாத்து சொக்கத்
தவமிருந்து நான்வந் தவ(ள்)!
ஆஸ்திக்கோர் ஆண்பிள்ளை ஆசைக்கோர் பெண்பிள்ளை
ஜாஸ்தியாய்ப் பெற்றால் தரும்தொல்லை; - ஆஸ்பத்
திரிபோகா வண்ணமவர் தேகநலம் பேண
உரிய திறைவா! உதவு!
7/1/2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக