சனி, 11 ஜனவரி, 2025

 

கணவன்:-

 

எட்டாச்சி இப்பமணி இன்னும் டிபன்வரல;

பொட்டச்சி என்ன பொழப்புபண்ற? - திட்டினா

மூக்கத்தான் சிந்தி முழியக் கசக்குற;

கேக்கக்கூ டாததெல்லாம் கேட்டு!

 

மனைவி:-

 

நாலுகை தானிருக்கா? நாலிரண்டு காலிருக்கா?

ஏலுமின்னா செய்யேனா ஏழ்மணிக்கா? - மேலுகாலு

நோவுதுன்னு சொன்னேன் நினைவிருக்கா? உம்பசி

காவுவாங்கக் காத்திருக் கா?

 

கணவன்:-

 

கால்வலிக்குக் கால்புடிச்சிக் கைவலிக்குக் கைபுடிச்சி

மேல்வலிக்கு மேல்புடிச்சே வீணானேன்; - பால்பழிக்கும்

பல்லழகி உன்னால் படாதபாடு நாம்படுறேன்

சொல்லழகி ஞாயமா சொல்!

 

மனைவி:-

 

கால்களை ஏம்புடிச்ச கைவளை ஏனொடைச்ச

கேள்கட்டில் சொல்லும் குறுங்கதைய - ஆள்நீ

இரவிலொரு பேச்சும் பகலிலொரு பேச்சும்

தரவல்ல பேச்சாளன் தான்!

 

கணவன்:-

 

ஏதோநான் பாட எதிர்பாட்டு நீபாடக்

காதோடு கேட்டுப்போய்க் காத்தாட - ஓடோடி

சுற்றத்தக் கூட்டிவந்து சோலிமுடிப் பான்ஒப்பன்

முத்தழகி பேச்சை முடி!

 

மனைவி:- (மனதிற்குள்)

 

பேசவச்சிக் கேட்டதும் பேச்சை ரசிச்சதும்

ஆசைவச்ச நாளில் அலுக்கவில்ல; - மீசைவச்ச

ஆம்பளைக்கு இப்போ அரைவார்த்தை பேசினாலும்

வேம்பாக் கசந்து விடும்!

 

5/1/2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக