சனி, 28 பிப்ரவரி, 2009

கதி -திக!

‘கதி’யென் றியம்புவார் கம்பனை; இந்தச்
சதிவீழ தக்கஉரை சாற்றிக் -‘கதி’யைத்
‘திக’என மாற்றித் திருக்குறட்பின் கம்பன்
தகுமெனச் சொல்வோம் தகைந்து!

எக்காலும் போற்ற எடுத்துரைத்தான் வள்ளுவர்ஓர்
முக்கால் அடியில் முதுமொழிகள் -எக்கவியும்
இக்கவிக்(கு) ஈடில் எனுங்கருத்தை மேடைதொறும்
மக்களுக்குச் சொல்வோம் மதித்து!

ஈந்தவனைப் பாடா தெலியோர் நலம்வாழச்
சாந்துணையும் நற்பாக்கள் சாற்றிவைத்தார் -வேந்தனையும்
பாட்டுக்குள் போற்றாப் பெருமதியோன் வள்ளுவரை
ஏட்டுக்குள் வைப்போம் இழைத்து!

செந்தமிழ் பெற்ற திருவாந் திருக்குறள்
எந்தமொழி பெற்ற திதுபோன்று -செந்தமிழர்க்(கு)
ஊனாகும் ஒப்பில் உயர்குறள் பூவிதழ்மேற்
தேனாகும் என்போம் தெரிந்து!

ஏடெடுத்த எண்ணில் எழிற்கவிஞர் எக்காலும்
பீடெடுத்து வாழ்ந்ததுவாய்ப் பேரில்லை -நாடெடுத்(து)
ஓதுகுறள் ஓதுவதால் ஓங்கும் அறிவெனிலோர்
தீதில்லை கண்டோம் தெரிந்து!



அகரம்.அமுதா

புதன், 25 பிப்ரவரி, 2009

உளறல்!

உளறல் எனுமோர் உயர்தமிழ்ச் சொல்லுக்(து)
உளநற் பொருளும் உரைக்கின் -குளறல்;
உதவாக் குழறல்; உரைதடு மாறல்;
பிதற்றல் எனலாம் பெரிது!

கட்டித் தழுவிநாற் கால்சேர யாக்கையிரண்(டு)
ஒட்டி உறவாடி உய்கையில் -மெட்டி
தளர்ந்து தவித்துத் தளிர்க்கொடியாள் செப்பும்
உளறல் மொழிக்குண்டோ ஒப்பு?

அகரம்.அமுதா

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வீணை வருடும் விரல்!


காலத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
ஞாலத்தை ஆள்கணினி நற்பயன்மேல் -மாலுற்றே
காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
வீணை வருடும் விரல்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

துன்பத் தீர்ப்பு!

(திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டபத் தீநேர்ச்சியில் வாழ்விழந்த மணப்பெண் சுபஸ்ரீயின் நிலைநின்று எழுதியது!)

திருமணம் என்னும் தேரில் ஏறுமுன்
தீக்குழி மூழ்கிய நிலவுயிவள்!
நறுமணம் வீசுமுன் நாராய்க் கிழிந்த
நிமலன் தோட்டத்து மலருமிவள்!

செண்டுகள் சூடியப் பெண்டிவள் வாழ்வும்
சதுரங்க மேடை ஆகியதே!
அன்றொடு தலைவன் தலைதகர்ந் தேகினும்
சதுரங்க ஆட்டம் தொடர்கிறதே!

விழியில் தீட்டிய மையின் அளவோ
மேக மந்தையின் ஒருபாதி!
விழிகள் ஊற்றியக் கண்ணீர் மட்டும்
சிரபுஞ்சி மழையில் சரிபாதி!

ஜதிகள் போடும் சலங்க சோகச்
சாசனம் எழுதி வாசிக்கும்!
திதியும் வைப்பதோ திருமண நாளில்
இந்நிலை வேண்டாம் வேசிக்கும்!

சதியே செய்யும் விதியே! என்னை
சந்தித்த வேளை சரிதானா?
விதியைத் தலையில் எழுதிய இறைவன்
விதிக்குத் தப்பித் திருப்பானா?

அகரம்.அமுதா

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஊதிவத்தி!

வேர் கிளை
இலை விடாத
விருட்சம் நீ...

உன்
வெள்ளை விழுதுகளோ
வான்நோக்கி எழுகின்றன...

நீ பூத்தநெருப்பில்
மணம் அவிழ்கிறது
எந்த வண்டிற்காக?

விழிப்பில் கறைகின்ற
கனவுபோல
காற்றில் கறைகிறது
நீ பரப்பும் மணம்!

மலரிதழ்கள் அல்லாத
மகரந்தம் தாங்கிய
மலர்க்காம்பு நீ...

புகை ஓவியம் தீட்டும்
அதிசயத் தூரிகை...

குறள் வெண்பாவினும்
குறுகிய வெண்பா...

எந்த மீன்களுக்காய்
நீ
புகைத் தூண்டில்
வீசுகிறாய்?

நீ
நின்று தவமிருக்க
சாம்பல் புற்று
உன்னை
முழுமையாய்ச் சூழ்ந்து
முற்றுகையிடுகிறதே!

உனக்குப்
பலரறிய அவையில் வைத்துத்
தீ மகுடம்
சூட்டுகிறோம் நீயோ
கூந்தல் அவிழ்க்கிறாய்
திரௌபதியைப் போல...

அகரம்.அமுதா

வியாழன், 5 பிப்ரவரி, 2009

சுவடுகள்!

இலக்கின் காற்புள்ளி...
இலட்சியத்திற்கு
பிள்ளையார் சுழி...
========
========

தூரிகையின்றித்
தீட்டிய ஓவியம்...
மையூற்றாமல்
மெய்யெழுதும் காவியம்...
========
========

பயண அஞ்சல்
இலக்கை அடைய
அஞ்சல் தலையும்...
அதிலிடும் முத்திரையும்...
========
========

பாதப் பதிப்பகம்
வெளியிடும் பதிப்பு...
பாதைகள் எல்லாம்
நூல்களின் தொகுப்பு...
========
========

இளமையின் மீது
நம்பிக்கை வைத்து
இலக்குகளை
ஊதியமாய் வழங்கும்
பயணங்கள்
முதுமையிடம் மட்டும்
ஊண்று கோல்களின்
சாட்சிக் கையொப்பத்தையும்
கேட்டுப் பெறுகிறது...!

அகரம்.அமுதா

வெள்ளி, 30 ஜனவரி, 2009

பூங்கா!

நரகத் திடையே
துறக்கம் போல
நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
சிரிக்கும் பூக்களைத்
திருடா திருக்கத்
திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்!

சின்னப் பூக்கள்
சிரிக்கும் அழகில்
சிந்தும் தேனின் சுவைகண்டு -இதழ்க்
கன்னம் வைத்துக்
கவின்மலர்த் தேனைக்
கவர்ந்து போகும் பொன்வண்டு!

திங்கள் தவழும்
தென்றல் உலவும்
சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
தங்கும் பூங்கா
தன்னைச் சார்ந்து
தங்கிக் களிப்பார் தனிமையிலே!

விரித்த பாய்போல்
விளங்கும் பாதை
விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
இருக்கும் மனம்விடுத்(து)
இடையிடை மறைவில்
இருக்கும் வகையால் உளமுவக்கும்!

அமைதி தேடி
அலையும் கூட்டம்
அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
அமைதி தேட
அமைத்த பூங்கா
அமைதி இழந்து தவிக்கிறது!

மாலை வந்தால்
மக்கள் வந்து
மலிவார் அமைதிப் பறிபோகும் -சிலர்
மாலை வந்தால்
மனத்துயர் விடுத்து
மறுபடி கிளப்ப இரவாகும்!

பின்னல் தலையில்
பிஞ்சுப் பூக்கள்
பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
புன்னகை சிந்தும்
பூக்களை மெல்லப்
பூவிரல் நாடிப் பறிக்கிறது!

சிரித்து மகிழ்ந்து
சிலபொழு திருந்து
செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
வருத்தும் நினைவின்
வளர்முளை கிள்ளி
மறக்கச் சிலபேர் வருகின்றார்!

போகாப் பொழுதைப்
போக்கித் தொலைக்கப்
பூங்கா சேரும் சிலருண்டு -உடல்
வாகாய் விளங்க
வடிநற் காற்று
வாங்க வருவார் சிலருண்டு!

முந்தியை விரித்து
மூலையில் படுத்து
மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
குந்திய இடத்திற்
கொஞ்சிக் குலவிக்
குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்!

ஓவ்வொரு மரமும்
ஓவ்வொரு கல்லென
உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
அவ்வவர் துணையொடு
அண்டிக் களித்து
அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்!

கொணர்ந்த பொருளைக்
குதப்பித் தின்றுக்
குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
மணக்கும் பூங்கா
மணத்தைக் குளைக்க
வாயிற் புகையொடு சிலர்வருவார்!

நகைக்கும் பூங்கா
நாடி மகிழ்ந்து
நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
புகைக்கும் அரங்கெனப்
புகைத்தாற் பூங்கா
புகழ்தனை இழந்து காடாகும்!

விழுப்ப மெல்லாம்
விளங்கும் ஒழுக்கம்
வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
ஒழுக்கக் குறைகள்
ஒழித்து விழுப்பம்
உயர்ந்து விளங்க யார்காவல்?

சீருடை அணிந்த
சிறார்கள் போலச்
சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
பேருடை தன்னின்
பெரும்புகழ் குறைத்தல்
பிழையெனச் சாடி முடிக்கிறது!


அகரம்.அமுதா

செவ்வாய், 20 ஜனவரி, 2009

அகவற்பா!

"தருமபுரத்தில் மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: கவச பீரங்கி ஊர்தியை களத்தில் இறக்கினர் புலிகள்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்"

-செய்தி- 19/1/2009

கொக்கென நின்றாற் கொத்துதற் கன்றோ
பொக்கெனச் சிரித்துப் பொருதுதல் நன்றோ
கொணர்ந்த கருவியைக் கொடுத்துப்
பிணமாய்ச் சாயும் பெருமைசிங் களர்க்கே!


பொருள்:-
ஆடாதும் அசையாதும் தூண்போல் கொக்கு நிற்பது ஓடுமீன் ஓட உருமீன் வரவுக்காக அல்லவா! கொக்கின் அத்தன்மையைச் சிரித்து வம்பளத்தல் மீன்களுக்கு நன்முடிவாக அமையுமா என்ன? இறுதியில் மீன் அழிவது உறுதியன்றோ! எதிரியை வீழ்த்த ஏந்திய போர்க்கருவியை எதிரியின் எதிர்ப்பைக் கையாள முடியாது தோற்று எதிரியின் கைகளில் போர்க்கருவியையும் அவர்காலடியில் தன் உயிர்விட்ட உடலையும் ஒப்படைக்கின்ற பெருமை இவ்வுலகில் சிங்களர்களுக்கு மட்டுமே உண்டு.

தற்காப் புணர்ந்து தானாய் அகல
முற்போய் வென்றதாய் மொழிவீர் கேள்மின்
இடுமயி ராலெழு மெழிலே
நெடுமயி ரெழிலின் நேரெனல் நகையே!


பொருள்:-தற்காத்துக் கொள்வதற்காகப் பின்வாங்கியோரை நேரெதிர்த்து வென்று இடங்களை மீட்டதாய்ச் சொல்லும் சிங்களரே! கேளுங்கள். செயற்கையாகப் பொருத்தப் பட்ட இடுமயிரால் உண்டாகும் அழகு, இயற்கையாக நீண்டு வளர்ந்த கூந்தலின் அழகிற்கு நிகரானது என்பது சிரிப்பிற்குறிய செயலாகும்.
(அத்தகைய தன்மையுடையதே தங்களது வெற்றியும் என்றதாம்.)

தீட்டுங் கருவியும் தீட்டா மதியும்
வாட்டுமென் றறியா வழுவுடைச் சிங்கள!
மாற்றான் கொடுத்த மதியால்
ஏற்றம் எட்டுணை என்பது மிலதே!


பொருள்:-
பட்டை தீட்டப்பட்ட கூர்மையான கருவியைச் செலுத்துதலும், பகுத்தாயும் பட்டறிவில்லாக் குறையறிவைப் பயன்படுத்திச் செயலில் இறங்குவதும் இரண்டுமே ஒருசேரத் துன்பம் தருவன என்பதைக் கூடப் பட்டறியும் அறிவில்லாத சிங்களரே! மூளையைப் பயன்படுத்தும் ஆற்றலில்லாதோர்க்கு வேற்று நாட்டுப்படைகள் கொடுக்கும் போர்முறையால் எள்ளளவும் முன்னேற்றம் அடைவதரிது என்பதை அறிவீராக.

புற்றீசல் போல்உம் புறப்பா டெனினும்
வெற்றீசற் கியாரே வெருளுவர் விதிர்ப்பர்
கற்றூண் அஞ்சா கரந்துறை
புற்றர வஞ்சும் புயலிடி தனக்கே!


பொருள்:-புற்றீசல் படையெடுத்தால் அஞ்சி நடுங்குவர் உளரோ? அத்தகையதே உமது படையெடுப்பு. பெருமழையினூடு பேரிடி வீழின் பாதுகாப்பு நிறைந்த புற்றில் வாழ்ந்தாலும் பாம்பு அஞ்சவே செய்யும். மாறாகப் பாதுகாப்பில்லாது தனித்துநிற்கும் கற்தூண் ஒருபோதும் அஞ்சாது.

பின்னடை வென்னும், பிதற்றும், பெரிதும்
முன்னடை வென்னும், முனையும், முனிவுறு
களிற்றின் கையுறு கதலியாய்
நளிவிழந் துழன்று நமனிடஞ் செலவே!

பொருள்:-
புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்பார். அதனையே தொடர்ந்து பிதற்றவும் செய்வார். தமக்கே முன்னடை வென்பார். மேலும் முன்னேற ஊக்கங்கொள்வார். இம் முன்னகர்வு எதற்காகவெனில் சினத்தின் மிகுதியால் பெருமரத்தையே பிடுங்கும் ஆற்றல் படைத்த மதயானையிடம் அகப்பட்டு சீரழியும் வாழைமரம் போலத் தம்படையின் செறிவிழந்து, நிலைகுலைந்து, உயிர்விட்டுக் காலனிடம் செல்வதற்காகவே இத்தனை ஆரவாரமும் செய்கிறார்.

அகரம்.அமுதா

புதன், 14 ஜனவரி, 2009

நேர்காணல்!

(நான் வெண்பா எழுதக்கற்றுக் கொண்ட புதிதில் எனக்கெழுந்த ஐயங்களை வெண்பாவில் வினவியதும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்கள் வெண்பாவில் விடையறுத்ததும்!)

கேள்வி:-
ஊரோடே ஒப்புரவாய் ஒன்றிக் கிடவாமல்
பேரார் தனித்தமிழைப் பேசுகிறீர் -காரேபோல்
நெஞ்சிருண்ட நீசர்கள் நிந்திக்கும் வாய்ச்சொல்லுக்(கு)
அஞ்சா(து) அருவியென்(று) ஆர்த்து!

பதில்-
காகம் கணக்கில்லைக் காசினியில்; கண்ணுடைய
தோகை விரிப்பதெது தொல்புவியில்? -மேகமதைக்
கண்டாடும் மாமயில்போல் கன்னித் தமிழனங்கைக்
கொண்டாடல் எம்முடைய கோள்!

கேள்வி-
தோகை மயிலுக்கோ சோறிட்டு வைக்கின்றார்?
காகத்திற்(கு) ஈந்தன்றோக் காக்கின்றார்? -தோகையில்லா
காகமதே ஒற்றுமைக்குக் காசினியில் ஏற்றயின
மாகவன்றோ போற்றிடுகின் றார்?

பதில்-
இரப்பார்க்கொன் றீயார் இரும்பு மனத்தார்;
கரப்பார்க் கிரங்கிக் களிப்பார்; -மரப்பாவை
காக்கைக்(கு) உணவீந்து கண்ணவிவார்; மாந்தரைப்போல்
யாக்கை எடுத்த விலங்கு!

கேள்வி-
பூவனையச் செந்தமிழைப் போற்றிக் களிப்பதனால்
ஆவதென்ன? வேற்றுவரின் ஆங்கிலமோ -டேவடவர்
தாய்மொழியும் வந்து தமிழில் கலப்பதனால்
தாழ்வேதும் வந்திடுமோ தான்?

பதில்-
காற்றில் கரிகலந்தால் காயம் கெடுமன்றோ?
சோற்றோடு கல்லைச் சுவைப்பீரோ? -ஏற்ற
அமுத மொழியிருக்க ஆங்கிலத்தோ டாரியத்தை
நமதாக்கல் நன்றோ நவில்!

கேள்வி-
அழியாத் தமிழை அகிலத்தே நாட்ட
வழியுண்டோ? செய்யுள் மரபைப் -பழிக்கும்
புதுக்கவிதைப் பாரில் புரையோடல் போக்கி
சதுராடிச் சாய்க்கவழி சாற்று!

பதில்-
முறையாய்த் தமிழறியா மூடர் புதுக்கவிதைக்
கறையானின் புற்றாய், களராய் -நிறைவதனால்
செந்தமிழுக் கென்ன சிறப்புண்டு? வெந்தவிதை
எந்தநிலம் ஏற்கும் இயம்பு?

கேள்வி-
பட்டுபோற் செய்யுள் பலநூறு யாப்பதனை
இட்டமோ டேற்றீர் இருக்கட்டும் -மட்டமா
என்ன புதுக்கவிதை? யாண்டுமதை ஏற்காமல்
திண்ணமோ(டு) ஏன்எதிர்க்கின் றீர்?

பதில்-
மட்டமோ? மேலோ? மரபோ? புதுவரவோ?
திட்டுவதென் நோக்கில் தினையில்லை -சட்டமிடா(து)
எப்பொருளும் வாழும் இயல்பில்லை என்பதைத்தான்
செப்புகிறேன் செம்பொருளைச் சேர்!

நான்:-புவியரசே! பூந்தமிழைப் போற்றுகின்ற சிங்கைக்
கவியரசே! கன்னற் கனிச்சொற் - சுவையரசே!
சேய்யான் தெரியாமற் செய்யும் பிழைபொறுக்கும்
தாயாம்நீர் சொன்னால் சரி!

அகரம்.அமுதா

வெள்ளி, 9 ஜனவரி, 2009

இனியும் பொறுத்தல் இழுக்கு!


எலிகள் எதிர்த்தா இமயம் சரியும்
புலியே விரைவாய்ப் பொருது!

வாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு
வீழ்ந்திடினும் பேறாம் விரும்பு!

சிறப்பே வரினும் சிறுமையுறாய்; சிங்களரை
இறப்பே வரினும் எதிர்!

இறுதி வரினும் எதிர்கொள்வாய்; ஈழம்
உறுதி எனப்பொரு(து) ஊர்ந்து!

நூற்றுவரை ஐவர் நுதிவென்றார்* சிங்களராம்
கூற்றுவரைத் திண்மதியாற் கூறு!

கனியும் பொழுதென்று காவாய்; துணிவாய்
இனியும் பொறுத்தல் இழுக்கு!

நஞ்சும் படையாய் நடைசெயினும் மோதா(து)
அஞ்சும் படையா அவண்!

கடுப்பைக் கிளப்பிக் களிக்கின்றார் கீழோர்
இடுப்பை ஒடித்தல் இசை!

கவலை அளிக்கிறதே! கண்ணிரொடு செந்நீர்த்
திவளை தெரிக்கிறதே சேர்ந்து!

செந்தமிழ் நூற்களைத் தீக்கீந்த சிங்கள
மந்திகளின் மார்பிளத்தல் மாண்பு!

அருஞ்சொற்பொருள்:-

நுதி -அறிவுக்கூர்மை(நுதிவென்றார் -அறிவுக்கூர்மையால் வென்றார் (மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் தொகைநிலை), அவண் -அவ்விடம், கண்ணிரொடு -கண்ணீரோடு (காய்ச்சீர் நோக்கிக் குறுகிற்று)

அகரம்.அமுதா