சனி, 28 பிப்ரவரி, 2009

கதி -திக!

‘கதி’யென் றியம்புவார் கம்பனை; இந்தச்
சதிவீழ தக்கஉரை சாற்றிக் -‘கதி’யைத்
‘திக’என மாற்றித் திருக்குறட்பின் கம்பன்
தகுமெனச் சொல்வோம் தகைந்து!

எக்காலும் போற்ற எடுத்துரைத்தான் வள்ளுவர்ஓர்
முக்கால் அடியில் முதுமொழிகள் -எக்கவியும்
இக்கவிக்(கு) ஈடில் எனுங்கருத்தை மேடைதொறும்
மக்களுக்குச் சொல்வோம் மதித்து!

ஈந்தவனைப் பாடா தெலியோர் நலம்வாழச்
சாந்துணையும் நற்பாக்கள் சாற்றிவைத்தார் -வேந்தனையும்
பாட்டுக்குள் போற்றாப் பெருமதியோன் வள்ளுவரை
ஏட்டுக்குள் வைப்போம் இழைத்து!

செந்தமிழ் பெற்ற திருவாந் திருக்குறள்
எந்தமொழி பெற்ற திதுபோன்று -செந்தமிழர்க்(கு)
ஊனாகும் ஒப்பில் உயர்குறள் பூவிதழ்மேற்
தேனாகும் என்போம் தெரிந்து!

ஏடெடுத்த எண்ணில் எழிற்கவிஞர் எக்காலும்
பீடெடுத்து வாழ்ந்ததுவாய்ப் பேரில்லை -நாடெடுத்(து)
ஓதுகுறள் ஓதுவதால் ஓங்கும் அறிவெனிலோர்
தீதில்லை கண்டோம் தெரிந்து!அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. உங்கள் கூற்று உண்மைதான்,தற்போது திருகுறள்யை இசை காவியாமாக உலகிற்கு அறிமுகபடுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் முயற்ச்சியை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் சொல்லரசன் அவர்களே! மீண்டும் வருக! ஆதரவு தருக!

    பதிலளிநீக்கு