(நான் வெண்பா எழுதக்கற்றுக் கொண்ட புதிதில் எனக்கெழுந்த ஐயங்களை வெண்பாவில் வினவியதும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்கள் வெண்பாவில் விடையறுத்ததும்!)
கேள்வி:-
ஊரோடே ஒப்புரவாய் ஒன்றிக் கிடவாமல்
பேரார் தனித்தமிழைப் பேசுகிறீர் -காரேபோல்
நெஞ்சிருண்ட நீசர்கள் நிந்திக்கும் வாய்ச்சொல்லுக்(கு)
அஞ்சா(து) அருவியென்(று) ஆர்த்து!
பதில்-
காகம் கணக்கில்லைக் காசினியில்; கண்ணுடைய
தோகை விரிப்பதெது தொல்புவியில்? -மேகமதைக்
கண்டாடும் மாமயில்போல் கன்னித் தமிழனங்கைக்
கொண்டாடல் எம்முடைய கோள்!
கேள்வி-
தோகை மயிலுக்கோ சோறிட்டு வைக்கின்றார்?
காகத்திற்(கு) ஈந்தன்றோக் காக்கின்றார்? -தோகையில்லா
காகமதே ஒற்றுமைக்குக் காசினியில் ஏற்றயின
மாகவன்றோ போற்றிடுகின் றார்?
பதில்-
இரப்பார்க்கொன் றீயார் இரும்பு மனத்தார்;
கரப்பார்க் கிரங்கிக் களிப்பார்; -மரப்பாவை
காக்கைக்(கு) உணவீந்து கண்ணவிவார்; மாந்தரைப்போல்
யாக்கை எடுத்த விலங்கு!
கேள்வி-
பூவனையச் செந்தமிழைப் போற்றிக் களிப்பதனால்
ஆவதென்ன? வேற்றுவரின் ஆங்கிலமோ -டேவடவர்
தாய்மொழியும் வந்து தமிழில் கலப்பதனால்
தாழ்வேதும் வந்திடுமோ தான்?
பதில்-
காற்றில் கரிகலந்தால் காயம் கெடுமன்றோ?
சோற்றோடு கல்லைச் சுவைப்பீரோ? -ஏற்ற
அமுத மொழியிருக்க ஆங்கிலத்தோ டாரியத்தை
நமதாக்கல் நன்றோ நவில்!
கேள்வி-
அழியாத் தமிழை அகிலத்தே நாட்ட
வழியுண்டோ? செய்யுள் மரபைப் -பழிக்கும்
புதுக்கவிதைப் பாரில் புரையோடல் போக்கி
சதுராடிச் சாய்க்கவழி சாற்று!
பதில்-
முறையாய்த் தமிழறியா மூடர் புதுக்கவிதைக்
கறையானின் புற்றாய், களராய் -நிறைவதனால்
செந்தமிழுக் கென்ன சிறப்புண்டு? வெந்தவிதை
எந்தநிலம் ஏற்கும் இயம்பு?
கேள்வி-
பட்டுபோற் செய்யுள் பலநூறு யாப்பதனை
இட்டமோ டேற்றீர் இருக்கட்டும் -மட்டமா
என்ன புதுக்கவிதை? யாண்டுமதை ஏற்காமல்
திண்ணமோ(டு) ஏன்எதிர்க்கின் றீர்?
பதில்-
மட்டமோ? மேலோ? மரபோ? புதுவரவோ?
திட்டுவதென் நோக்கில் தினையில்லை -சட்டமிடா(து)
எப்பொருளும் வாழும் இயல்பில்லை என்பதைத்தான்
செப்புகிறேன் செம்பொருளைச் சேர்!
நான்:-புவியரசே! பூந்தமிழைப் போற்றுகின்ற சிங்கைக்
கவியரசே! கன்னற் கனிச்சொற் - சுவையரசே!
சேய்யான் தெரியாமற் செய்யும் பிழைபொறுக்கும்
தாயாம்நீர் சொன்னால் சரி!
அகரம்.அமுதா
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் திமிழ்மிளிர் அவர்களே! தங்களுக்கும் என் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுத்தாண்டு,பொங்கல்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றிகள் தேவன் மாயன் அவர்களே! தங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎங்களை தங்கள் பால் ஈர்ப்பதுவே இதுதான். சங்ககால இலக்கியங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கமளிப்பதை விட வெண்பாவில் வினவியும், பதிலிருத்தும் நீங்கள் படைத்திருப்பது மிக எளிதாக மனதில் பதிகிறது. ஆர்வமும் அதிகரிக்கிறது.மிக சிறந்த ஆசான், மிக ந்ல்ல மாணவன்.பயனடைந்தோர் தமிழும்,நாங்களும்.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநான் மட்டும் கொஞ்சம் முயற்சி செய்யாமல் விடலாமா?.
நாடி வலைவிரித்து நற்றமிழ் பாதன்னில்
கோடிக் கொடுத்தாலும் கூடாத சொற்சுவையை
பாடி அமுதா பழக்கியதால் யானின்று
வெண்பா விரித்தேன் விரைந்து.
சரிதானே?
பெண்பா எனப்பிறந்த பெற்றித் தமழனங்கே!
பதிலளிநீக்குபண்பாய் எனைவாழ்த்திப் பாடிவிட்டீர் -பெண்பாலும்
வெண்பாவால் நானுற்ற நாணத்தை விண்டிடவே
வெண்பா விரித்தேன் விரைந்து!